Wednesday, March 31, 2010

ஒரு கவிதை

அதன் பின்னரும்


மூலம் தெரியவில்லை.

கிளை,கிளையாய் பிரிந்து

பெரு வெளி இருளில்

மறைகிறது

அதன் தடம்.

புரியவில்லை இன்னும்

வீட்டிற்குள் எப்படி புகுந்ததென.

தானே வந்திருக்க வாய்ப்பில்லை.

தந்திரம் என நினைத்துக்கொள்ளும்

என் சத்ருக்களின் தோளில்

பயணித்து வந்ததோ

தெரியவிலை.

இதன் இருப்பை

நானுணர்ந்துக்கொள்ளத்தான்

காலம் கொஞ்சம் பிடித்துவிட்டது

ஒரு வேளை

சுயம் பிறழ்ந்த ஓர் நாளில்

என் முதுகில் சுமந்து

நான் தான் வீட்டில் கிடத்தினேனோ?

இருக்கலாம்.

யாருமற்ற இரவொன்றில்

ஓசையின்றி

திசைகள் அற்ற வெளியில்

எறிந்து

திரும்பிய பின்னரும்

அகம் முழுக்க வீசுகிறது

பிண வாடை.

.
Monday, March 29, 2010

முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் : 2

முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

சில எழுத்துக்கள் நம் ஆன்மாவை நிறைத்து வாழ் நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கும்.கிர்கிஸ்தானிய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்மாதவ்வின் எழுத்துக்கள் அப்படிப்பட்டவை.பல சமயங்களில் அவரின் கதை மாந்தர்களும், அவர்களின் மன உணர்வுகளும் இந்திய தன்மை வாய்ந்தவையாக,நம் கிராமத்து மனிதர்களை அவர்கள் வாழ்வை எதிர்கொள்வதைப்போல ஒரு அனுபவத்தை தருகிறது. கால,இட வெளிகளை கடந்து மனித ஆன்மாவை தொடும் எல்லா எழுத்துக்கள் எல்லாவற்றிகும் பொதுவான தன்மைகளின் சாரம் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் எழுத்துக்கள். தமிழில் ராதுகா பதிப்பகம் அவரின் அன்னை வயல்,ஜமீலா,குல்சாரி,முதல்ஆசிரியர் போண்ற முக்கிய படைப்புக்கள் அனைத்தையும் மொழிபெயத்து வெளியிட்டு இருக்கிறது. சமீபத்தில் நியு சென்சுரி பதிப்பகம் மறுபதிப்பை கொண்டு வந்திருக்கிறது.
அவரின் எல்லா படைப்புக்களுமே மனதிற்கு நெருக்கமானவைதான் எனினும் முதல் ஆசிரியர் பற்றி எழுத தோண்றுகிறது. மிக சாதாரண தனி மனிதர்களின் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத உழைப்பிலும், எல்லா இடையுறுகளையும் சாமாளிக்கும் அவர்களின் மன உறுதியிலும் சமூகம் வெளிச்சம் பெறுகிறது. அந்த சாதாரண மனிதர்கள்( உண்மையில் ஆனால் அசாதாரண மனிதர்கள்) வெளிச்சம் பெறுவதே இல்லை. அல்லது வெளிச்சத்தின் பகட்டு அவர்களுக்கு பிடிப்பதில்லை. முகமறியா அந்த சாதாரண மனிதர்களின் தாகம் சமூகத்தின் நீறுற்றாக இருக்கிறது!

எங்கோ தொலைவில் இருந்தது குர்கூரெவு கிராமம் அதன் பின் சூழ்ந்திருந்த மலைகளில் இருந்து சலசலத்து ஓடிவரும் ஆறுகள் வந்து கூடும் இடத்தில் இருந்தது அது. அமைதியான பரந்த ஸ்டெப்பி வெளி குர்கூரெவு கிராமத்தின் கீழே விரிந்துக்கிடந்தது. ஒரு இலையுதிற் காலத்தில் அந்த விரிந்த “ மஞ்சள் சமவெளி”யை கடந்து கிராமத்திற்கு வருகிறான் ஒரு இளைஞன். அல்தினாய் உலைமானவ்னாவுக்கு அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. அவள் அப்பொழுது சின்னஞ்சிறு பெண். அரசாங்க உடையணிந்த ஒருவன் கிராமத்திற்கு வந்த்து தெரிந்த உடன் அனேகமாக எல்லோரும் கூடி விட்டார்கள். அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பது யாருக்கும் தெரியவில்லை. பள்ளிக்கூடம்,கல்வி இது பற்றியெல்லாம் தெரிந்திருக்காத அந்த கிராமத்திற்கு ஆசிரியனாய் வந்திருந்தான் அவன் – துய்ஷேன். யாருக்கும் இஷ்டமில்லை. ஒரே கூச்சல்.


“ ஆண்டாண்டு காலமாக விவசாய வேலை செய்து வாழ்கிறோம் ... அது நமக்கு சோறு போடுகிறது. நம் பிள்ளைகளும் இப்படிதான் வாழ்ப்போறாங்க , அவங்களுக்கு படிப்பு என்ன கேடு. அதிகாரிகளுக்குத்தான் கல்வியறிவெல்லாம் வேணும், நாம் சாதரண மக்கள் எங்க தலையை போட்டு உருட்டாதே” எல்லோருமாய் எதிர்க்க துய்ஷேன் மெல்ல ஆனால் உறுதியாக பேசினார். அல்தினாய் உலைமானவ்னாவுக்கு அவர் பேசியது மிகவும் பிடித்திருந்தது.


“ நாம் ஏழைகள் “ மெதுவான குரலில் துய்ஷேன் பேசினார் “ வாழ்க்கை பூராவும் நம்மை மிதித்து தும்சம் செய்தனர் ,கேவலப்படுத்தினர். நாம் இருட்டில் வாழ்ந்தோம். நாம் ஒளியை பார்க்கவேண்டுமென்று, நாம் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆட்சி விரும்புகிறது. அதற்கு நம் குழந்தைகள் படிக்கவேண்டும்....” இது அரசின் ஆணை என அவர் சொல்லவும் பலர் “ ஏதோ செய்” என் ஒதுங்கினர். யாரும் அவருக்கு உதவி செய்ய முன் வரவில்லை. அவர் உறுதியாக இருந்தார்.

கிராமத்தின் குறுக்கே ஓடும் ஆற்றைத்தாண்டி , குன்றில் இருந்த பழைய குதிரை கொட்டடி ஒன்றை தான் அவர் “ பள்ளிக்கூட”மாக தேர்வு செய்தார். ஆற்றின் குறுக்கே குழந்தைகள் கடந்து வர ஒரு பாலம் அமைக்க வேண்டும் அந்த குதிரை கொட்டடியை சுத்தம் செய்து சீர் செய்ய வேண்டும் என் அவர் சொன்னது யார் காதிலும் விழவில்லை. அதல்லாம் நமக்கு சம்பந்தம் இல்லாத விசயமாக அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.


அதன் பிறகு. காலையில் தன்னந்தனியாக அந்த கொட்டடிக்கு சென்றால் சாயங்காலம் திரும்பினார்.பல சமயங்களில் மண்வெட்டி,வாளி,கோடாரி என சுமந்து செல்வதை அவரை அல்தினாய் உலைமானவ் பார்த்தாள். தனி ஆளாய் பள்ளியை தயார் செய்துகொண்டிருந்தார். குளிர் காலத்திற்கு தேவயான கணப்பு அடுப்பு , கீழே அமர வைக்கோலிலான விரிப்பு என அந்த குதிரை லாயம் பள்ளிக்கூடமாக மாறிக்கொண்டிருந்தது. ஒரு முறை மலை முழுக்க அலைந்து பொறுக்கிய சாண மூட்டையை அல்தினாய் உலைமானவ் அவர் அறியாத நேரம் அந்த பள்ளி அருகே கொட்டிவிட்டு வந்தாள் . குளிர் கால கணப்பு அடுப்பிற்கு உதவுமே. ஏதோ அவளால் முடிந்த உதவி.


பள்ளிக்கூடம் தயாரான பின் கிராமத்தில் துய்ஷேன் ஒவ்வோரு வீடாக ஏறி இறங்கி மாணவர்களை சேர்ப்பதில் ஈடுப்பட்டார். அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை அது. யாரும் எளிதில் குழந்தைகளை அனுப்ப ஒர்த்துக்கொள்ளவில்லை. அல்தினாயின் சித்தி ரொம்பவும் எதிர்த்தாள். அப்பா,அம்மா இல்லாத அல்தினாய் சித்தியின் வீட்டில் இருந்தாள். ஆனால் அந்த உறுதியான மனிதர் அல்தினாய் பள்ளிக்கூடம் வருவதை உறுதி செய்தார். தன் வாழ்வையே புரட்டிப்போடப்போகும் தருணம் அது என்பதெல்லாம் அல்தினாய் அப்போது உணர்ந்திருக்கவில்லை.


“ தனக்கே தெரியாமல் அவர் ஒரு வீரச்செயல் புரிந்தார். ஆம் அது ஒரு வீர செயல்தான். ஏனெனில் அந்நாள்களில் தம் கிராமத்தை விட்டு எங்குமே செல்லாத கிர்கீசிய குழந்தைகளுக்கு பள்ளி கூடமாக விளங்கிய மண் கட்டிடம் முன்பின் கேட்டறியாத ஓர் உலகத்தைத் திடீரெனத்திறந்துக்காட்டியது.” பென்சிலை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் என தொடங்கி அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டார் துய்ஷேன். மாதம் ஒரு முறை தலைநகர் சென்று திரும்புவார் துய்ஷேன் அந்த நாட்கள் தான் எவ்வளவு துயரமான நாட்களாக இருந்தது அல்தினாவுக்கு. ரகசியமாய் சித்திக்கு தெரியாமல் வேலி அருகே நின்று நீண்ட நேரம் ஸ்டெப்பி பாதையையே உற்று பார்த்து காத்திருப்பாள் அல்தினாய். எவ்வளவு துயரம் தோய்ந்த கணங்கள் அவை. ஒரு முறை இரவு வெகு நேரம் கடந்தும் அவர் திரும்பவில்லை. ஸ்டெப்பி வெளியில் ஓநாய்களின் ஓலம் அதிகமாக கேட்டது. ஒரு வேளை துய்ஷேனை அவை சூழ்ந்திருக்குமோ. அல்தினாயின் உடல் பயத்தால் நடுங்கியது. நடுநிசி தாண்டி அவர் வந்து சேர்ந்தார். அவரைப்பர்த்தபொழுது அல்தினாய் தேம்பித் தேம்பி அழுதாள். அனேகமாய் யாரும் அவ்வளவு மகிழ்ச்சியை அனுபவித்திருக்கமுடியாது. அவள் துய்ஷேனை கட்டிப்பிடித்து அவர் தோளில் முகம் புதைத்து தேம்பித் தேம்பி அழுதாள் அல்தினாய்.

பனிக்காலம் மறைந்து பனி உருகி விரிந்த சமவெளியிலிருந்து கதகதப்பான காற்று விசியது. அல்தினாயின் இளம் பருவத்து முதல் வசந்தம் அது. அல்தினாயின் சித்தி அவளை மணமுடித்து வைக்க திட்டமிட்டுக்கொண்டிருந்தாள்.” அல்தினாய். நீ பயப்படாதே உனக்கு நான் பொறுப்பு” என்றார் ஆசிரியர். அல்தினாயின் கவனத்தை திசைதிருப்புவதற்காவோ என்னவோ அன்று துய்ஷேன் இரண்டு பாப்ளார் மர கன்றுகளை கொண்டுவந்தார் “ நாம் இந்த கண்றுகளை நடுவோம் இவை பெரிய மரங்க்களாவைப்போல் நீயும் வளர்ந்து பெரிய பென்ணாயிடிவே. நீ ஒர் விஞ்ஞானியாகப்போறன்நு என் மனதுக்கு படுது...” அவர்கள் அந்த பாப்ளார் மர கன்றுகளை பள்ளியருகே நட்டார்கள். அவை மெல்ல காற்றில் ஆடின. “ அன்பான ஆசிரியரே நீங்கள் இப்படி அன்பானவராக இருப்பதற்காக நன்றி. நான் உங்களை கட்டிப்பிடித்து முத்தமிட விரும்புகிறேன்.” என மனதில் சொல்லிக்கொண்டு அவரை கட்டியணைக்க விரும்பினாள் அல்தினாய். ஆனாலும் வெட்கப்பட்டாள்.ஒருவேளை வெட்கத்தை விட்டு சொல்லியிருக்க வேண்டுமோ?


விசயம் அல்தினாயியும், துய்ஷேயும் நினைத்தற்கு மாறாக துரிதமாக நடந்தது ஒரு பகல் நேரம் பள்ளிக்கூட்த்திற்கு சித்தி வருகிறாள் கூடவே குதிரையில் ஒரு புதியவன். முரட்டுதனமாக ஆசிரியரை அடித்து விட்டு அல்தினாயை தூக்கிசெல்கிறான் அவன். ஆசிரியன் சுருண்டு விழ அவரின் “ பரட்டை தலை பெண்” கதறியபடி செல்கிறாள். ஒரு கூடாரத்தில் அடைக்கிறான் ஏற்கனவெ ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் அந்த முரடன். இரண்டு இரவுகள் ஓடுகின்றன. அவன் குழந்தைகளை விட வயதில் குறைந்தவளான அல்தினா அவனிடம் தன்னை இழக்கிறாள். மூன்றாம் நாள் காலை தலையில் கட்டுடன் வந்து சேர்கிறார் துய்ஷேன். அந்த முரட்டு மிருகத்தை தாக்கிவிட்டு அல்தினாயை அழைத்து செல்கிறார்.


“அல்தினாய் என்னை மன்னித்து விடு. என்னால் உன்னை காபாற்ற முடியவில்லை. நீ என்னை மன்னித்தாலும் நான் என்னை மன்னிக்கமாட்டேன்.” என்றார் ஆசிரியர். அல்தினாய் தேம்பி அழுது குதிரையின் பிடரியில் சாய்ந்தாள். துய்ஷேன். அருகில் நின்று அவள் தலையை கோதி விட்டார் அவள் அழுது முடியும் வரை காத்திருந்தார். துய்ஷேன். குதிரையின் கடிவாள கயிற்றை பிடித்த வண்ணம் நடந்தார். “ எந்த காலடிப்பாதை வழியே துய்ஷேனும் நானும் திரும்பினோமோ அப்பாதையை மட்டும் என்னால் கண்டுப்பிடிக்க முடிந்தால் நான் தரையில் முழங்காலிட்டு ஆசிரியரின் காலடி சுவடுகளுக்கு முத்தமிடுவேன். அந்த பாதை என்னைப் பொறுத்த மட்டில் வாழ்க்கைப்பாதை அந்த நாள் அந்த காலடிப்பாதை வாழ்க்கைக்கு புதிய எதிர்பார்ப்புகளுக்கு , வெளிச்சத்திற்கு என்னை இட்டு வந்த வந்த அந்த பாதை நீடுழி வாழட்டும்... அந்த சூரியனுக்கு, அந்த பூமிக்கு நன்றி.....” பின் நாளில் அல்தினாய் இப்படி நினைத்துக்கொண்டாள்.

அதன் பின் இரண்டுநாட்களில் ஆசிரியர் அல்தினாயை நகரத்துக்கு செல்லும் புகை வண்டியில் ஏற்றி விட்டார் நகரத்தில் அவள் படிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஆசிரியர் செய்திருந்தார். “ அழாதே அல்தினாய்” நாம் நட்டு வைத்த பாப்ளார் மரங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் நீ பெரியவளாகி இங்கு வரும் பொழுது அழகான பாப்ளார் மரங்களை நீ பார்ப்பாய்” “ சரி விடை பெறுவோம்: அல்தினாயை கட்டி பிடித்து நெற்ரியில் ஆர்வத்துடன் முத்தமிட்டார். “ அல்தினாய் போய் வா. என் கண்ணே “ என்றார். புகை வண்டி நகர்ந்த்து. அல்தினாய்.... என கத்தினார் ஆசிரியர் ... ஏதோ முக்கியமானதை சொல்ல மறந்து பின் அதை நினைத்துக்கொண்டவரை போல் அதற்கு காலம் கடந்து விட்டது என்று தெரிந்தும் கத்தினார்... இதயத்தின் அடியாழத்திலிருந்து வந்த அந்த கூக்குரல் அவள் காதுகளில் ரீங்காரமிடுகிறது....

அல்தினாயின் வாழ்க்கை முற்ரிலுமாக மாறிவிட்டது. தொடர்ந்து படித்தாள் அவள் கல்லூரியில் படிக்கும் பொழுது ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினாள் அவரை நேசிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும். அதற்கும் அதற்கு பின்னும் ஆசிரியர் கடிதம் எழுதவே இல்லை. அவளின் படிப்பிற்கு இடையூராக இருக்க வேண்டாம் என நினைத்திருக்கலாம். அதன் பின் தன் படிப்பு, ஆய்வு என அல்தினா ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இலையுதிர் காலத்தில் மாஸ்கோவிலிருந்து வேறு ஒர் நகரத்திற்கு போகும் வழியில் தன் கிராமத்து புகை வண்டி நிலையத்தில் இறங்குகிறாள் அல்தினாய். தூரத்தில் குன்றின் மேல் அசைந்தாடுகின்றன இரண்டு பாப்ளார் மரங்கள்.வாழ் நாள் முழுக்க ஆசிரியர் என அழைத்தவரை முதன் முதலாய் பெயர் சொல்லி மனதுக்குள் அழைக்கிறாள்” துய்ஷேன் நீ செய்த எல்லாவற்றிகும் நன்றி.” வண்டியோட்டியிடம் துய்ஷேனைப்பற்றி விசாரிக்கிறாள். துய்ஷேன் ராணுவத்தில் சேர்ந்து விட்தாகக்கூறுகிறான். வண்டியை நிறுத்த சொல்லி இறங்கிக்கொள்கிறாள் அல்தினாய். கிராமத்திற்கு சென்று யாரை பார்க்க?

பாப்ளார் மரங்களின் இலையுதிகால இலைகளின் ஓசையை கேட்டுக்கொண்டு நின்றாள் அல்தினாய். தூரத்தில் புதிய பள்ளியின் வண்ண மேற்கூரை தெரிந்தது.அவள் மெல்ல புகை வண்டி நிலையத்திற்கு சென்றாள். தூரத்தில் இரண்டு பாப்ளார் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

அதன் பின் துய்ஷேனுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. நகரத்திற்கு வந்த அவள் கிராமத்துவாசிகள் அவர் யுத்ததில் தொலைந்து போய்விட்டதாக சொன்னார்கள் இன்னும் சிலர் இறந்துவிட்டதாக சொன்னார்கள். ஆண்டுகள் உருண்டோடின.கடந்த காலம் மறைந்தது,எதிர்காலம் அதற்கே உரித்தான கவலைகளுடன் நிரந்தரமாக அழைத்தது. அல்தினாய் காலம் கடந்து திருமணம் செய்து கொண்டாள். பணி நிமித்தமாய் பல இடங்களுக்கு அழந்தாள். தன் கிராமத்திற்கு மட்டும் செல்லவில்லை. வெகு வருடங்கள் கழித்து அவள் கிராமத்தில் புதிதாய் கட்டியிருக்கும் பள்ளி வளாகத்தை திறந்து வைக்க அழைத்திருந்தார்கள்


கிராமத்தின் புகைவண்டி நிலையத்தில் இறங்கிய பொழுது குன்றின் மேல் அந்த பாப்ளார் மரங்கள் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. பல வருடங்களூக்கு முன்பு துய்ஷேன் தன்னை வழி அனுப்பிவைத்த அதே புகைவண்டி நிலையம். கிராமத்தில் எல்லோரும் அவளை மிகுந்த மகிழ்வுடன் அவளை வரவேற்கின்றனர். புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறாள் அல்தினாய். ஒரு குதிரை லாயத்தில் தொடங்கிய ஒரு சின்னசிறு பள்ளியின் விகாசம் அவள் மனது முழுவதும் நிறைகிறது. துய்ஷேன் என்ற சாதாரண ஒரு மனிதனின் உழைப்பு.கனவு. விழா நடந்துக்கொண்டிருக்கும் பொழுது இடையே ஒருவன் வந்து பழைய மாணவர்களிடமிருந்து வந்த வாழ்த்து தந்திகளை தலைமை ஆசிரியரிடம் கொடுக்கிறான். வெளியே ஒரு முதியவர் இவைகளை தந்து விட்டு தனக்கு வேலைகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டு சென்றதாக கூறுகிறான். இன்னும் உழைத்துக்கொண்டிருக்கும் அந்த முதியவன் துய்ஷேன் என தெரிந்த பொழுது அல்தினாய் தன்னை குற்றவாளியாக உணர்கிறாள். இது துய்ஷேன் அமர வேண்டிய இடமல்லவா? தனக்கு வாழ்வித்த அந்த மனிதனை தான் உயர்ந்த பிறகு சந்திக்காத்து அவள் மனதை வதைக்கிறது. ஒரு வித குற்ற உணர்ச்சியுடன் அங்கிருந்து புறப்படுகிறாள் அல்தினாய்.“ மலைகளில் ஒரு மாதிரியான நீரோடைகள் உண்டு; புதிய பாதை தோண்றியதும், இவற்றிக்கு இட்டு செல்லும் பாதையை மறந்து விடுவார்கள் அங்கு தண்ணீர் குடிக்க வழிப்போக்கர்கள் அபூர்வமாத்தான் செல்வார்கள். அந்த நீரூற்றுகளைச்சுற்றி புல்லும் புதரும் வளரும் பிறகு வெளியிலிருந்து பார்த்தால் கூட தெரியாது. வெட்கை மிகுந்த நாளில் இதை நினைத்துக்கொண்டு நீரருந்த வருபவர்கள் சிலரே.யாராவது ஒருவர் அந்த உள்ளடங்கிய நீரூற்றைத் தேடிக் கண்டுபிடித்து புல் புதரை அறுத்துப்போட்டு பார்த்தால் மூகின் மேல் விரலை வைப்பார்;நீண்ட காலமாய் யாராலும் கலக்கப்படாத , அசாதாரண தூய்மையுடன் குளிர்ந்த நீர் தன் அமைதியாலும்,ஆழத்தாலும் அவரை வியப்பில் ஆழ்த்தும். அவர் அந்த நீரூற்றில் தன்னையும் சூரியனையும் வானத்தையும் மலைகளையும் காண்பார்......”Monday, March 1, 2010

ஒரு கவிதை

               வழி


வழியைத் தொலைத்துவிட்டு

வழி தேடிக்கொண்டிருந்தவனை

வழியில் சந்தித்தேன்.

இடது,வலது,வலது,இடது

வலது,இடது,இடது,வலது.

இடது,வலது,இடது,வலது.

வலது,இடது,இடது,இடது

இடது,வலது,இடது,வலது

என்ன செய்ய –

நீ புரிந்துக்கொள்ளும்படியும்-

வழியைத் தொலைத்துவிட்டு

வழி தேடிக்கொண்டிருந்த

என்னை வழியில் நீ

சந்தித்தால்

நான் புரிந்துக்கொள்ளும்படியாகவும்

இல்லை

வழி.
.

நண்பர்கள்

Powered by Blogger.