Saturday, January 30, 2010

காந்தியை நான் கொல்லவில்லை.




------------------------------------------------------------------------------------------
Maine Gandhi Ko Nahin Mara

அஸ்ஸாமி இயக்குனர் JahnuBarua வின் முதல் ஹிந்திப்படம்.

அனுபம் கேர் தயாரிப்பு

ஜப்பானில் Kodak Vision Award பெற்றப்படம்
------------------------------------------------------------------------------------------


                                                  வகுப்பறையிக்குள் வேகமாக நுழையும் பேராசிரியர் உத்தம் சொளத்ரி ராமனைக் கடவுளாக இல்லாமல் மனிதனாகப்பார்க்கும் ஹிந்தி கவிதை ஒன்றை பற்றி பேசிக்கொண்டே போகிறார். வகுப்பில் சலசலப்பு. மாணவர்கள் முகத்தில் குழப்பம்.திடீரென நிறுத்திவிட்டு “ இது ஹிந்தி கவிதை வகுப்பு தானே? “ என்கிறார் உத்தம் சொளத்ரி. “இது மூன்றாம் ஆண்டு வேதியியல்” என்கிறாள் ஒருத்தி. உத்தம் சொளத்ரிக்கு ஒரு மாதிரியாகிவிடுகிறது.  மெல்ல வருத்தம் தெரிவித்து விட்டு வெளியேறுகிறார்.கொஞ்சம் நாட்களாகவே அவருக்கு வியசங்கள் மறந்து விடுகின்றன.அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதுகூட அவருக்கு அவ்வப்போது மறந்துதான் போய்விடுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்க்கும் அவரின் மகள் திரிஷா அவரை புரிந்துக்கொள்கிறாள்.அவர் தடுமாறும்பொழுதொல்லாம் அவரை தாங்குகிறாள் காலை வேளை ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டே தன் மனைவியை அழைக்கும் அவரைப்பார்த்து குழம்பும் வேலைக்காரியை அனுப்பிவிட்டு அவள் தான் அவருக்கு பொறுமையாக தன் அம்மா ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்பே இறந்ததை சொல்ல வேண்டியிருந்த்து. அவளின் காதலனின் சிபாரிசின் பேரில் ஒரு மனோத்துவ மருத்துவரிடம் அவரை அழைத்துச்செல்கிறாள். அவர் இது பெரிது படுத்த வேண்டிய விசயமில்லை வயயோகத்தில் எல்லோருக்கும் வருவதுதான் என் கூறி மருந்துகளை எழுதிதருகிறார். ஆனால் அவளுக்கு திருப்தி இல்லை



                                                             மிக சமீபமாய் நிகழ்ந்த விசயங்கள் கூட அவருக்கு மறந்து விடுகிறது. தன் தோழி ஒருவரின் அம்மாவின் பிறந்த நாள் பரிசாக உத்தம் சொளத்ரி எழுதிய புத்தகம் ஒன்றில் அவரது கையெழுத்து போட்டுக்கேட்கிறான் அவரது கல்லூரியில் படிக்கும் மகன். தோழியின் அம்மாவின் பெயரை கேட்டு விட்டு எழுத போகும் சமயம் அவருக்கு மறந்து விடுகிறது. தடுமாறி குழம்புகிறார். தன் நிலை உணரும்பொழுது சோர்வடைந்து மெல்ல தன் அறைக்கு செல்கிறார். அக்காவும் தம்பியும் அனுதாபத்தோடு பார்க்கிறார்கள்.

                                                           அக்காவின் திருமணத்திற்கு பிறகு தான் அப்பாவை எப்படி கையாளுவது என மருளும் தம்பி ஒரு சாயங்காலம் தன் மனதில் உள்ளதை கூறுகிறான். திரிஷாவை பெண்பார்க்க அவள் காதலன் தன் அம்மா,அப்பாவுடன் வருவதாக இருக்கும் நாளுக்கு முந்தைய இரவு. இந்த பெண்பார்க்கும் படலத்தை வெளியே எங்காவது வைத்துக்கொள் என்கிறான் தம்பி. அப்பா ஏதாவது ஏடாகூடமாக செய்தால் அது உன்னை பாதிக்கும் என்கிறான்.திரிஷா ஒன்னும் நடக்காது பயப்படாதே என்கிறாள். தயங்கி,தயங்கி பேசும் அவன் திரிஷாவின் திருமணத்திற்கு பிறகு அப்பாவை ஏதாவது மனநல காப்பகத்தில் சேர்த்துவிடலாமா? என் கேட்கிறான். மிகவும் கோபம் கொள்ளும் திரிஷா அவனை திட்டி அனுப்புவிடுகிறாள்.

மறுநாள் அவன் பயந்த்து போலவே ஆகிவிடுகிறது. காதலனின் அப்பா தன் சிகரெட்டையும்,லைட்டரையும்,தனக்கு வழங்கப்பட்ட தேனீரையும் தன் முன் இருந்த தேனீர் மேஜையில்  வைக்கிறார், சரியாக அங்கிருந்த செய்திதாளில் வெளிவந்திருந்த காந்தியின் முகத்தின் அருகில். உத்தம் சொளத்ரியின் முகத்தில் டென்ஷன். தான் சிகரெட் பிடிக்கலாமா என கேட்டுவிட்டு பிடிக்கிறார் காதலனின் அப்பா. உத்தம் கைகளை பிசைகிறார். திரிஷா அப்பா எப்பொழுதும் பாடும் கவிதையை அவர்களுக்காக பாடிக்காண்பிக்க சொல்கிறாள். அவர் வார்த்தைகள் மறந்து தடுமாறுகிறார் தலை முடியை விரல்களால் சுற்றிக்கொண்டு தடுமாறும்.அவரின் செய்கைகள் அவர்களுக்கு


வித்தியாசமாக இருக்கிறது. அதே சமயம் சாம்பல் கிண்ணத்தை தேடியெடுக்கும் காதலனின் அப்பா மிகச்சரியாக அதை காந்தியின் முகத்தில் வைத்து சாம்பலை தட்டுகிறார். உத்தம் அடக்கமுடியாத தன் கோபத்தை கொட்டுகிறார்.காதலனின் அப்பா மன்னிப்புக்கோரியும் அவர் விடவில்லை.இது சாதாரண பேப்பர் தானே என்றவரிடம். இது அடையாளம். ஒரு வாழ்க்கை நிலையின்,தத்துவத்தின் அடையாளம் என கோபத்துடன் கத்துகிறார் உத்தம். சூழ்நிலை இனக்கமற்றதாகிவிடுகிறது. திரிஷா அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறாள். இது பரம்பரையாக வரும் வியாதியா என திரிஷாவிடம் கேட்கிறார் காதலனின் அப்பா. அவர்கள் கிளம்புகிறார்கள்

பின் நாட்களில் நிலமை இன்னும் மோசமாகிறது. ஒரு நாள் பரபரப்பான நகரின் சந்தடிக்கிடையே பழைய பேப்பர்களை சுமந்துக்கொண்டு வரும் அப்பாவை வீட்டிற்கு அழைத்து வருகிறாள் திரிஷா. மற்றோரு நாள் தன் மகனை நீ யார் என் கேட்கிறார். தன் வீட்டை இது சிறைசாலை என்கிறார். சாப்பாட்டை சாப்பிட மறுக்கிறார் அதில் ஜெயிலர் விஷம் வைத்திருப்பதாக கூறுகிறார்.ஓர் இரவு அவர் அறையிலிருந்து புகை மண்டலம். திரிஷாவும் தம்பியும் கதவை திறக்க சொல்லியும் திறக்க மறுக்க பால்கனி வழியாக குதித்து உள் நுழையும் அவர்கள் காண்பது எரியும் பழைய பேப்பர்கள். உத்தம்மை தேடும் அவர்கள் அவரை கட்டுலுக்கடியில் ஒளிந்துக்கொண்டிருக்கும் அவர் “ நான் காந்தியை கொல்லவில்லை ... நான் காந்தியை கொல்லவில்லை என் அரற்றுகிறார். அவர் குரல் நடுங்குகிறது
என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் திரிஷாவிற்கு அறிமுகமாகும் ஒரு மனநல மருத்துவரின் அனுகுமுறை நம்பிக்கை கொடுக்கிறது. சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு சம்பவத்தினால் ஏற்ப்பட்ட மனஅழுத்தத்தின் விளைவே இந்த மறதியும் அவரது பிறழ்ந்த செயல்பாடுகளும் எனவும் Pseudo-Dementia என்ற மனநிலை பிறழ்வு நிலையின் கூறுகள் அவரிடம் இருப்பதாகவும் கூறுகிறார். தான் காந்தியை கொன்றுவிடதாகவும் அதற்காக சிறையில் இருப்பதாகவும் ஒரு மாய உலகத்தில் அவர் வாழ்வதாக கூறுகிறார் மனநல மருத்துவர்    அவருக்கும் காந்தியின் கொலைக்குமான தொடர்பை கண்டறிய உத்தம் சொளத்ரியின் பால்ய கால நண்பர் Gattuவைப்பார்க்க டில்லிக்கு செல்கின்றனர்ள் திரிஷாவும் , மனநல மருத்துவரும்.


சிறுவயதில் அவர்கள் விளையாண்ட ஒரு விளையாட்டைப்பற்றி சொல்கிறார் Gattu. பலூன் நிறைய சிகப்பு மையை நிரப்பி ஒர் படத்தின் மீது தொங்கவிட்டு , தங்கள் கண்களை கட்டிக்கொண்டு வில்லைக்கொண்டு அந்த பலூனை உடைப்பது. அந்த சிகப்பு மை சிதறி அந்த உருவப்படத்தில் முழுவதுமாக தெறிக்கும் அதாவது அந்த ஆள் கொலைசெய்யப்படுவான். இந்த விளையாட்டை உத்தம் சுற்று வந்தபொழுது கண்களை கட்டிக்கொண்டு நிற்கும் பொழுது ஒரு சிறுவன் புதிதாக ஒரு படத்தை மாட்டிவிட, உத்தம் அம்பை எய்கிறான். ஒரே ஆரவாரம். சிகப்பு மை அந்த ஆளின் உடல் முழுக்க சிதறுகிறது. அந்த உருவப்படம் காந்தியுடையது. அன்று 30 ஜனவரி 1948

சிறுவர்களின் ஆரவாரத்திற்கு இடையே அங்கு வரும் உத்தமின் அப்பா இதைப்பார்க்கிறார்.தீவிர காந்தி தொண்டரான அவருக்கு ஆத்திரம். தன் மகனை அடிக்கிறார். அன்று சாயங்காலம் காந்தி கொலை செய்யப்பட்ட சேதி கிடைத்த பொழுது அவருக்கு தன் மகன் ஒரு கெட்ட சக்தியாக தோண்றுகிறது. அதன் பின் அவர் இறக்கும் வரை அவர் உத்தமின் முகத்தை பார்க்கவே இல்லை. இதன் பாதிப்பு உத்தமை தீவிரமான மனசிக்கலுகு உள்ளாக்குகிறது. காந்தியை தான்தான் கொலைசெய்ததாக நம்ப தொடங்கி ஒரு மாயலோகத்தில் உழழும் அவரது மனது குற்ற உணர்வுக்கும் மன பிறழ்வுக்கும் ஆளாகிறது.

உத்தமை இந்த மனபிறழ்விலிருந்து மீட்க அந்த மன நல மருத்துவர் நாடகத்தன்மை வாய்ந்த ஒரு பரிசோதனையை செய்கிறார். சினிமா துணை நடிகர்களைக்கொண்டு ஒரு நீதிமன்ற காட்சியை அறங்கேற்றுகிறார் அதன் மூலம் உத்தம் குற்றமற்றவர் அவர் உபயோகப்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி எனவும் அதைகொண்டு ஒரு மனிதனை கொல்லமுடியாதெனவும் நிரூபிக்கப்படுகிறது. உத்தம் குற்றமற்றவர் என நீதிபதி தீர்ப்பளிக்கிறார். நீங்கள் ஏதாவது கூற வேண்டுமா என நீதிபதி கேட்டவும் உத்தம் பேசுகிறார்,


உத்தம் தன் மன பிறழ்விலிருந்து வெளியே வந்துவிட்டாரா அந்த மன்நல மருத்துவரின் பரிசோதனை வெற்றி பெற்றுவிட்டதா என் தெரிந்துக்கொள்ள எல்லோரும் ஆர்வமாக அவரை கவனிக்கிறார்கள்.......

உத்தம் மெல்ல பேசுகிறார்.“ நான் தான் காந்தியை கொலைசெய்தேன்.” பெரிய அமைதி மொத்த நீதிமன்றமும் அவரைப்பார்க்கிறது..அவர் தொடர்கிறார்....

“........இல்லை நான் மட்டுமல்ல நீங்கள், நாம் எல்லோரும் காந்தியை கொலை செய்தோம் தினம் தினம் கொல்கிறோம். காந்தியை எலா இட்த்திலும் வைத்தோம் அலுவலகம்,நீதிமன்றம்,நாணயம்,பணம்,...எல்லா இட்த்திலும் மனத்தில் மட்டும் இல்லை.நாம் தான் கொலை செய்தோம்.” உத்தம் மெல்ல திரிஷாவை அழைக்கிறார் அவள் உத்தம்மை அணைத்தவாறு வெளியே கூட்டிச்செல்கிறாள். கடல்லை ஓரமாக அவர்கள் செல்கிறாகள் அவருக்கு பிடித்தமான ஹிந்தி கவிதை ஒலிக்கிறது ..





Tuesday, January 19, 2010

நீ இல்லாமல் என் வாழ்வில்லை




குட் பிளாக்காக தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி 



வளர்ச்சியடைந்த எந்த சமூக அமைப்பிலும் சட்டமும் மனித உரிமைகளும் எப்பொழுதுமே விவாதத்திற்கு உரிய விசயமாகவே இருக்கிறது மனித உறவுகள் மனம்சார்ந்தவை,உளவியல் சார்ந்தவை. உறவுகளின் இழப்பு கள்,பிரிவுகள் விட்டு செல்லும் உளவியல் சுவடுகள் பல சமயங்களில் மனித வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டு விடுகின்றன.அதிலிருந்து மீள முடியாமல் சரிந்து போகும் மனம் தன் பொளதீக வாழ்வின் சாதாரண நிகழ்வுகளை கூட எதிர்கொள்ளமுடியாமல் தன்நிலை இழந்து போய்விடுகிறது. சாமானிய மனிதனின் உறவுகள் சார்ந்த உளவியல் உலகம், உயிர்ப்பற்ற அரசாங்க சட்டதிட்டங்களையும்,அதை செயல்படுத்தும் வறண்ட அதிகார அமைப்பும் எதிர்கொள்ளும் பொழுது மிஞ்சுவது அபத்தமும்,ஏமாற்றமும் ஆதவற்ற நிலையும் தான். தைவான் இயக்குனர் Leon Dai இயக்கி இந்த வருடம் அந்நிய மொழி படமாக தைவானிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள No Puedo Vivir sin ( நீ இல்லாமல் என் வாழ்வில்லை) என்ற திரைப்படம் ஒரு தகப்பனின் இந்த நிராதரவான நிலையை , அதிகாரத்தின் அற்தமற்ற அபத்தத்தை முன் வைக்கிறது


Taipei நகரமே திடீரென அவனால் பரபரப்பானது. இது மாதரியான நிகழ்வுகளை பெரும் மனதீனிகளாக்கும் நகரத்திலுள்ள எல்லா தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்ப தொடங்கின.”முட்டாள்” “கிரிமினல்” “பிரபலமாக விரும்புகிறான் போல” பல விதமான விமர்சனங்கள். காவலர்கள் அவன் அருகே நெருங்க முடியாமல் நின்றனர். நெருங்கினால் விபரீதமாகிவிடுமோ என்ற அச்சம். அவன் உடலை கட்டியணைத்திருக்கும் சின்ன குழந்தையோடு நகரத்தின் பரபரப்பான உயர்ந்த பாலமொன்றில் தொங்கிகொண்டிருந்தான் அவன்.


Kaohsiung என்ற கடற்கரை நகரத்தில் வசிக்கும் அவன் - Wu-hsiung யாராலும் உபயோக படுத்தபடாத துறைமுக சிறுகிடங்குதான் அவனுக்கும் அவனது ஏழுவயது மகள் Meiக்கும் இருப்பிடம். அவனுக்கு பெரிதாக வருமானம் வருவதில்லை துறைமுகத்தை சுற்றி கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளில் கிடைக்கும் சொற்ப வருமானம் கடலில் கிடைக்கும் உணவு என எந்த தொந்தரவும் இல்லாத எளிமையாக நகர்ந்துக்கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை .... அவர்கள் வரும் வரை.


ஒரு காலை நேரம் காவலர்கள் அவனை தேடி வருகிறார்கள். இரண்டு மூன்று முறை “மாவட்ட அலுவலகம்” கடிதம் அனுப்பியும் அவன் பதிலளிக்காததால் அவர்கள் நேரில் வந்ததாக கூறுகிறார்கள். Meiயின் வயது எனன கேட்க எழு என்கிறான் Wu-hsiung. Meiயை மாவட்ட காவல் அலுவலத்தில் பதிவு செய்யவேண்டும் எனவும் அப்படி செய்யாத பட்சத்தில் அவளை பள்ளியில் சேர்க்கமுடியாதெனவும் தவறி பின் கண்டுபிடிக்கப்பட்டால் நூற்றுக்கணக்கான டாலர்களை தினமும் அபராதமாக செலுத்தவேண்டியிருக்கும் எனவும் கூறி செல்கின்றனர்.

மாவட்ட அலுவலகம் செல்லும் Wu-hsiungக்கு Meiயை அங்கு பதிவு செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. Wu-hsiungக்கும் அவன் மனைவியும் “சேர்ந்து” வாழ்ந்தார்களே தவிர சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளவில்லை. Wu-hsiungன் மனைவியும்(?) அவனை விட்டு பிரிந்து பல வருடமாகிவிட நிலையில் அவன்தான் Mei அப்பா என சொல்லிக்கொள்ள எந்த சட்டபூர்வமான பத்திரங்களும் இல்லாத நிலையில் பதிவு செய்ய மறுக்கிறார்கள் அதிகாரிகள். Meiயின் படிப்பும் அவள் வாழ்வும் கேள்விக்குறியாகிறது. நான் தான் அவளின் தகப்பன் இதோ உயிருடன் உங்கள் முன் நிற்கிறேன் எனச்சொல்லும் Wu-hsiungமிடம் அதெல்லாம் சரி தஸ்தாவேஜூக்கள் எங்கே என்கிறது சட்டம்.


 
Wu-hsiung க்கென்று சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே நண்பன் Ah Tsaiயிடம் பிரச்சனையை சொல்கிறான். Ah Tsaiயின் யோசனையின் பேரில் Taipeiயின் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருக்கும் அவர்களது பள்ளி பருவத்து தோழன் Lin-Chin-Yiயை சந்தித்து உதவி கேட்கிறான் Wu-hsiung.மிகவும் பரபரப்பாக இருக்கும் Lin-Chin-Yi தன் உதவியாளன் மூலம் Wu-hsiungக்கிற்கு தேவையான உதவிகளை செய்ய சொல்கிறான்.உதவியாளளின் உதவியோடு தலைமை காவல்அலுவலக அதிகாரியை சந்திக்கிறான் Wu-hsiung.அவர் அவனை மீண்டும் அவனது ஊரில் உள்ள பதிவு அதிகாரியை சந்திக்க சொல்கிறார். ஏற்கனவே அவருக்கு தான் தகவல் அளித்து விட்டதாகவும், அவனது விசயத்தை அவர் சிறப்பு கவனம் கொண்டு பதிவு செய்வார் எனவும் அந்த பதிவு இங்கு தலைமையகம் வந்தவுடன் தான் உடன் தேவையானவற்றை செய்வதாக கூறுகிறார்.

Wu-hsiung மீண்டும் தன் நகரத்து காவல்-நிலைய பதிவு அதிகாரியை சந்திக்க வரும் பொழுது அவர் தற்சமயம் அலுவலகத்தில் இல்லை எனவும் எப்பொழுது வருவார் என நிச்சயமில்லை என்கிறாள் ஒரு பெண் மேலும் அவனது “ கேஸ்” மாவட்ட சமூக அலுவலகத்திற்கு மாற்றபட்டுவிட்ட்தால் இனி அங்குதான் அவன் தொடர்புக்கொள்ளவேண்டும் என கூற Wu-hsiung மனச்சோர்வடைகிறான்.அதன் பின் அவனை மீண்டும் தொடரும் காவலர்களுக்கு பயந்து வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக தப்பித்து மீண்டும் Taipeiக்கு வருகிறான் Wu-hsiung . இந்த முறை அவனால் யாரையும் சந்திக்க முடிவதில்லை. நடந்தே நகரம் முழுவதும் அலையும் அவர்கள் இருவரையும் ஒரு நிலையில் அவன் மேல் சந்தேகப்படும் காவல்துறை கைது செய்து பின் விடிவிக்கிறது. உடல் சோர்வும் மன சோர்வும் ஆதரவற்ற மனநிலை ஏற்படுத்தும் விரக்தியும் தன் பிரச்சனை கவனிக்கப்படவேண்டும் என்ற இருத்தல் சார்ந்த மனவெழுச்சியும் Wu-hsiung யை அப்படி செய்ய தூண்டுகிறது....

பாலத்தில் தன் குழந்தையுடன் தொங்கும் அவனை காவலர்கள் அவன் அசரும் நேரம் பார்த்து பிடித்து கைது செய்கின்றனர். காலம் ஓடுகிறது சிறைவாசத்திற்கு பிறகு வெளிவரும் Wu-hsiungக்கு Meiயை பற்றிய விபரம் தெரியவிலை. அவன் நண்பனுக்கும் அவளின் விபரம் தெரியவிலை. தினமும் ஒவ்வொரு பள்ளியாக அலையும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. “மாவட்ட அலுவலக”த்திலிருந்து அவனுக்கு எந்த தகவலும் தர மறுக்கின்றனர். தன் அருகில் எங்கோ இருக்கும் தன்னை பிரிந்து இருக்கும் குழந்தை, அதற்கு காரணமான புரிந்துக்கொள்ளமுடியாத அபத்தமான அதிகார அமைப்பு, அமைப்பை ஒன்றும் செய்யமுடியாத சாமானிய மனிதனின் ஆதறவற்ற நிலை இதன் சுழற்சியில்  எதுமே யோசிக்க முடியாத ஏதுமற்ற வெறுமையில் கழிகிறது Wu-hsiung வாழ்க்கை.

எதன்மேலும் பிடிப்பில்லாத Wu-hsiung கவனக்குறைவால் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் சமயம் அவன் நன்பன் ஒரு கடிதத்துடன் வருகிறான். “ மாவட்ட அலுவலத்திற்கு” அவனை வரசொல்லி வந்த கடிதம். அவன் அங்கு கண்காணிப்பாளரை சந்திக்கும் பொழுது Mei நலமாக இருப்பதும் படிப்பில் சுட்டியாக இருப்பதும் தெரிகிறது. கூடவே அவள் இந்த இரண்டு வருடமாக யாருடனும் பேசாமல் இருப்பதும். Wu-hsiung அழுகிறான். அவன் மீதான அன்புபின் வெளிப்பாடாகவும் அமைப்பிற்கு எதிராக அவள் காட்டிய மொளனமான எதிப்பாகவும் அது இருக்கலாம். Wu-hsiung வீடு திரும்புகிறான்.

ஒரு சாயங்காலம். Wu-hsiung படகில் கடல் நடுவே இருக்கிறான் ஏதோ வேலை.வெய்யில் மெல்ல மங்குகிறது. “Wu அங்கே பார்” என கத்துகிறான் படகுகாரன். Wu நிமிர்ந்து பார்க்கிறான். தூரத்தில் கடற்கரையில் மற்றும் சிலருடன் Mei. படகு மெல்ல கரையை நெருங்க்குகிறது Mei தன் அப்பாவை எதிர்நோக்கி நிற்கிறாள். Wu-hsiung அவளை பார்க்கிறான் அவளின் கன்ன கதுப்பில் சிரிப்பின் மலர்ச்சி தெரிகிறது




பின் குறிப்புக்கள்:

* இந்தப்படம் 2003ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது

* படம் Hoklo Taiwanese மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும் தலைப்பு ஸ்பானிஸ்     மொழி!

* படத்தில் Wu  பாத்திரத்தை ஏற்று நடித்த Chen Wen-pin தான் படத்தின்    திரைகதையாசிரியர்

* இந்த படம் கோவா திரைப்படவிழாவில்(2009) சிறந்த படமாக    தேர்ந்தெடுக்கப்பட்டது

* 2009 வெளிவந்த இப்படம் ஒரு கருப்பு-வெள்ளை படம்.