தவறு இழைத்த மனத்தின் தத்தளிப்பும் அந்த சுழலிருந்து வெளியேற முடியாத நிலையில் ஏற்படும் மனச்சரிவும் ,குற்றமனப்பான்மையும் உள்ள ஒரு மனிதனின் தவிப்பும் , சமூக மனம் அல்லது பொது மனம் ஒரு குற்றத்தை எதிர் கொள்ளும் விதமும் தான் ஆடூர் கோபாலகிருஷ்ணனின் நிழல்குத்து திரைப்படம். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்குத்து பல விருதுகளை பெற்றது. Amnesty international மனித உரிமைகளுக்கு பரிந்து பேசும் திரைப்படம் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்தது.
மஹாபாரத்தை அடிப்படையாக கொண்ட வேலபாரதம் (Velabharatham) என்ற நாடோடி இலக்கியத்தில் வரும் நிழல்குத்து என்ற பகுதியை Pannisseri Nanu Pillai என்ற பல்மொழி வித்தகர் கதக்களி நாடகமாக எழுதினார். பாண்டவர்களை கொல்வதற்கு பல வழிகளில் முனையும் துரியோதனன் சகுனியின் அறிவுரையின் பேரில் மாந்ரீகத்தில் பெயர் போன பாரத மலையன் என்பவனை வரவழைக்கிறான். மலையன் தன்னிடம் இருக்கும் மாயக்கண்ணாடியில் எழும் ஒருவனின் சாயையை கொல்வதன் மூலம் அந்த மனிதனைக்கொல்லும் நிழல்கொலையைச் செய்வதில் வல்லவன். துரியோதனன் மலையனிடம் பாண்டவர்களை “நிழல்குத்து” மூலம் கொல்லச்சொல்கிறான். மலையன் மறுக்கிறான். “யானைமுட்டை” ஒன்று தந்தால் கொல்கிறேன் என தப்பிக்கப்பார்கிறான். துரியோதனன் அவனை கொல்ல முயல “நிழல் குத்து”க்கு ஒப்புகொண்டு பாண்டவர்களை கொல்கிறான் மலையன். பல பரிசுப்பொருட்களுடன் வீடு வரும் மலையன் நடந்தை மலையத்தியிடம் சொல்கிறான். கிருஷ்ணனின் பக்தையான மலையத்தி அவனை கடுமையாக பேசுகிறாள். அவன் செய்த குற்றத்தை அவன் உணரவேண்டி தன் குழந்தையை கொல்கிறாள் மலையத்தி. குந்தி தேவியின் வேதனையை மலையன் அப்பொழுதுதான் உணரமுடியும் என்கிறாள். எல்லாவற்றையும் அறியும் கிருஷ்ணன் பின் பாண்டவர்களையும்,மலையனின் குழந்தையும் உயிர்பிக்கிறான். நிழல்குத்து என்ற வார்த்தையின் மூலம் இது.
நிழல்குத்து இந்தியா சமஸ்தான்ங்களாக பிரிந்துக்கிடந்த பிண்ணனியில் (1941) நிகழ்கிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் தமிழ்/மலையாள கலப்புள்ள ஒரு கிராமத்தில் ( படத்தில் ஒரு இடத்தில் “நாகர்கோயில்” என சொல்லப்படுகிறது) மஹாராஜா கொடுத்த வீடு,நிலங்களுடன் வசிக்கும் தமிழ் பேசும் காளிப்பன்(Oduvil Unnikrishnan ) என்றவன் குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையை செய்கிறான். 25 வருங்களுக்கு முன்பு தான் தூக்கில் போட்ட ஒருவன் உண்மையில் குற்றவாளியில்லை ஒரு குற்றமும் செய்யாத நிரபராதி என தெரிந்தே மஹாராஜாவின் ஆனையை நிறைவேற்ற அவனை தூக்கிலிடுகிறான் காளியப்பன். அதிலிருந்து நிம்மதி இழந்து அலைகிறது காளியப்பனின் மனம். நிம்மதியிழந்து அலையும் அவன் மனம் இரண்டு விதங்களில் அதிலிருந்து தப்பிக்க முயல்கிறது. ஒன்று காளிதேவியிடம் தன்னை முற்றிலுமாக சமர்பித்துவிடுவது. ( எதற்கும் நான் காரணமில்லை.. செயலும் நீ..செய்பவளும் நீ ... ) இரண்டாவது சாராயம். அவனால் நிகழ்ந்துவிட்ட செயலை ஒன்றும் செய்யமுடியாது அதன் நிழலாய் எழு எண்ணங்களை கொல்ல முயலுகிறான் காளியப்பன்.
ஒரு சம்ரதாயமாக தூக்கிலிடப்பட்ட பின்பு அந்த கயிறு காளியப்பனிடமே கொடுக்கப்படுகிறது. ஊரில் காய்ச்சல், பேய்பிடித்துவிட்டது என உடல்,மன பிணிகளுடன் வரும் மக்களுக்கு அந்த கயிற்றை கொஞ்சம் அறுத்து தீயிலிட்டு பொசுக்கி காளிதேவியை பிரார்த்தித்து நெற்றியில் இட ஊர் பிணிகள் மறைகின்றன. ஒரு உயிரை கொன்ற அந்த கயிறு பல உயிர்களின் பிணி போக்கும் மாய உருவெடுக்கிறது. அரசு அதிகாரத்தின் குறியீடாக (நிழலாக)இருக்கும் அந்த கயிற்றை அழிப்பதன் மூலம் சமூகத்தின் பிணிகள் நீங்குகின்றன. நிழலை அழிப்பதன் மூலம் அசலை(அதிகாரத்தை) அழிப்பதாக சாமானியனான காளியப்பனின் ஆழ்மனம் கொள்ளும் திருப்தியின் வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம். 

ஒரு சமயம் மிகவும் சோர்வாக நடந்து செல்லும் காளியப்பனை எதிர்கொள்ளும் ஊர்காரர்கள் இருவர் ஏன் இவன் இப்படி சோர்வாக இருக்கிறான். மஹாராஜா தந்த வீடு,நிலம்,மாடு என வசதியாகத்தானே இருக்கிறான் என்கிறான் ஒருவன். அவனுக்கு மன வியாதி. ஒரு நிரபராதியை கொன்றுவிட்தற்கு தான் பெறுப்பு என குற்றமனப்பான்மை அவனை கொல்லுகிறது என்கிறான் மற்றொருவன். அவன் தன் கடமையைதானே செய்தான் அவன் எப்படி குற்றவாளியாகமுடியும் என்கிறான் முதலாமவன். அப்படியென்றால் தண்டனையை நிறைவேற்ற சொன்ன மஹாராஜாதான் குற்றவாளியா? எங்கிறான் இராண்டமவன். அதெப்படி அதற்குத்தான் மஹாராஜா ஒரு சூட்சமம் வைத்திருக்கிறாரே. தண்டனை நிறைவேற்றும் நாளும்,நேரமும் குறிக்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் தண்டனை நிறைவேறியிருக்கும் என தெரிந்து மஹாராஜா சற்று தாமதித்து குற்றவாளிக்கு கருணை விடுதலை அளித்து ஆணையை அனுப்புவார். மஹாராஜாவைப்பொறுத்தவரை அவக்கு விடுதலை அளித்தகிவிட்டது. எனவே அவர் குற்றவாளியல்ல. என்கிறான் முதலாமவன். இருவரும் சிரித்துக்கொள்கின்றனர். சிறிது நேரம் கழித்து “ அப்போ யார் குற்றவாளி?” என்கிறான் இரண்டாமவன். யாரும் பதிலளிக்காமல் முடிகிறது காட்சி ஒருவேளை இது இயக்குனர் நம் முன் வைக்கும் கேள்வியாக இருக்கலாம்.
திரைப்படத்தின் முடிவில் காளியப்பனை தேடி வருகிறார் சமஸ்தானத்தின் சிப்பந்தி. மீண்டும் ஒரு தூக்கு தண்டனை. காளியப்பன் தனக்கு உடல் நலம் சரியில்லை என கூறுகிறான். மஹாராஜாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று மிரட்டுகிறான் சிப்பந்தி. வேண்டுமெண்றால் மகனை துணைக்கு அழைத்து வா என்கிறான். காளியப்பன் தன் மகனோடு புறப்படுகிறான். தூக்குதண்டனையை நிறைவேற்ற. தூக்கு தண்டனைக்கு முந்தைய இரவு அவன் உறங்கக்கூடாது தொன்றுதொட்டு வரும் வழக்கம். பொழுது போக சாராயம் குடித்து விட்டு கதைகள் பேசிக்கொண்டிருப்பது எப்பொழுதும் நடப்பது. அன்று அவன் கூட இருக்கும் காவல் அதிகாரி ஒரு கதை சொல்கிறார்.
ஒரு கிராமம் . ஒரு காதல் ஜோடி. அவன் ஒரு புல்லாங்குழல் இசைஞன். கிராமத்தின் அழகிய புல்வெளி படந்த வெளிகளில் இருவரும் சுற்றித்திருகின்றனர். கதை செல்ல,செல்ல காளியப்பனுக்கு அவனின் இளைய மகளில் கதையாக விரிகிறது. அவன் ஆழ்மனதில் புதைந்துக்கிடக்கும் ஏதோ ஒரு விசயம் இப்படி அவனை நினைக்கதூண்டியிருக்கலாம். புல்லாங்குழல் இசை ( இசை: இளையராஜா) அந்த பரந்து விரிந்த வெளி எங்கும் பரவுகிறது. மாசு மறுவற்ற அவர்கள் அன்பைப்போல. அவர்களை அவர்கள் அறியாமல் தொடர்கிறான் காதலியின் அக்கா கணவன். ( கன்னியப்பனின் இளைய மகள் பூப்பெய்திய சடங்கிற்கு வரும் மூத்த மகளின் கணவன் இளைய மகளை பார்க்கும் வித்தியாசமான பார்வை காளியப்பனையும் அவன் மனைவியையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது) அவனுக்கு அவள் மேல் ஒரு கண். அவர்களின் வழக்கமான இடத்தில் அவள் அவனுக்காக காத்திருக்கும் ஒரு நாளில் அவளின் அக்காவின் கணவன் அவளிடம் தவறாக நடந்துக்கொள்ள அவள் போராடுகிறாள். போராட்டத்தின் ஒரு நிலையில் அவள் கொலையுருகிறாள். பலி அந்த இசைஞன் மேல் விழுகிறது. அரசு அவனுக்கு அந்த நிரபராதிக்கு தூக்கு தண்டனை அளிக்கிறது.
கதையை கேட்டுக்கொண்டிருந்த காளியப்பன் அந்த இந்த இசைஞன் இப்பொழுது எங்கே என கேட்ட , காவல் அதிகாரி சிரித்துக்கொண்டே அவனைத்தான் நீ இன்னும் இரண்டு மணி நேரத்தில் தூக்கிடப்போகிறாய் என்கிறார். மீண்டும் ஒரு நிரபராதியை கொல்ல வேண்டும். காளியப்பன் சுருண்டு விழுகிறான். அதிகாரிகளுக்கு பதட்டம். எப்படியும் குறிப்பிட்ட நேரத்தில் தண்டனையை நிறைவேற்றாவிடால் தன் பதவி பறிப்போகும் என பயப்படுகிறார். காளியப்பனின் மகனை வைத்து தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடிவாகிறது.
தூக்குதண்டனைக்கு எதிரானவனும், காந்தியவாதியுமான அவன் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தயாராகிறான். குடும்பம்,சமூகம்,சம்பிரதாயம் இவைகளூக்காக தன் தத்துவ நிலைப்பாடுகளை தொலைத்துக்கொள்ளும் ஒரு இந்திய இளைஞன். காளியப்பன் விழுந்த ஒரு சுழச்சியில் அவனும் விழுகிறான். ஒரு நிரபராதியை கொல்ல தயாராகிறான். குரல் ஒலியாக படம் முடிகிறது. “ தூக்கு தண்டனை நிறைவேறியது. வழக்கம் போல மஹாராஜாவிடமிருந்து கருணை தாங்கிய கடிதம் தாமதமாக வந்தது.”