Thursday, November 19, 2009

இரண்டு கவிதைகள்

கவிதை : ஒன்று

எனக்குப் பிடிக்கும்

இரை தேடும் பல்லியின் லாவகம்.

முன்னிரு கால் பின்வாங்கி

பின்னிரு கால் முன்வாங்கி

சாதுவாய் பதுங்கி ஒரு முன்னேறல்

இறையின் நிழல் திட்டில் ஒதுங்கி

சூட்சம நேரத்திற்காய் ஒரு தவம்.

என்னிரு இமைகள் சொடுக்கும்

காலவெளியில் ஒரு

பாய்ச்சல்.

நாவின் சுளீர். வயிற்றுக்குள் இரை.








கவிதை : இரண்டு


பழைய நண்பர்கள்



நேற்றோ முன்தினமோ

நினைவில்லை

வெறுமையான தெருவின்

நடுவே அவனைப் பார்த்தேன்

கீரை துளிர்கள்

எட்டிப்பார்க்கும் மஞ்சள்பை சகிதமாய்.

சௌக்கியமா என்றேன்

தலையசைத்தான்.

கதவடைத்த வீடுகளின் அமைதி

தெருவை நிறைத்தது.

நல்ல வெய்யில்.

எங்கோ காகம் ஒன்று கரைந்தது.

அரிசி பையை கை மாற்றிக்கொண்டேன்.

கடந்து போன யாரோ ஒருவன்

எங்களை பார்த்துப் போனான்.

இவன் என் தோள்தாண்டி

எங்கோ பார்த்தான்.

வரட்டுமா என்றேன்.

சரி என்றான்.


.

7 comments:

  1. இரண்டு கவிதைகளும் எனக்குப் பிடித்திருக்கின்றன.

    ReplyDelete
  2. /இரை தேடும் பல்லியின் லாவகம்./
    நல்லாருக்கு!

    ReplyDelete
  3. அருணா, முகமறியா நண்பர் இருவருக்கும் என் நன்றி

    ReplyDelete
  4. கவிதைகள் நன்றாக வருகிறது தங்களுக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete