------------------------------------------------------------------------------------------
Maine Gandhi Ko Nahin Mara
அஸ்ஸாமி இயக்குனர் JahnuBarua வின் முதல் ஹிந்திப்படம்.
அனுபம் கேர் தயாரிப்பு
ஜப்பானில் Kodak Vision Award பெற்றப்படம்
------------------------------------------------------------------------------------------
வகுப்பறையிக்குள் வேகமாக நுழையும் பேராசிரியர் உத்தம் சொளத்ரி ராமனைக் கடவுளாக இல்லாமல் மனிதனாகப்பார்க்கும் ஹிந்தி கவிதை ஒன்றை பற்றி பேசிக்கொண்டே போகிறார். வகுப்பில் சலசலப்பு. மாணவர்கள் முகத்தில் குழப்பம்.திடீரென நிறுத்திவிட்டு “ இது ஹிந்தி கவிதை வகுப்பு தானே? “ என்கிறார் உத்தம் சொளத்ரி. “இது மூன்றாம் ஆண்டு வேதியியல்” என்கிறாள் ஒருத்தி. உத்தம் சொளத்ரிக்கு ஒரு மாதிரியாகிவிடுகிறது. மெல்ல வருத்தம் தெரிவித்து விட்டு வெளியேறுகிறார்.கொஞ்சம் நாட்களாகவே அவருக்கு வியசங்கள் மறந்து விடுகின்றன.அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதுகூட அவருக்கு அவ்வப்போது மறந்துதான் போய்விடுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்க்கும் அவரின் மகள் திரிஷா அவரை புரிந்துக்கொள்கிறாள்.அவர் தடுமாறும்பொழுதொல்லாம் அவரை தாங்குகிறாள் காலை வேளை ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டே தன் மனைவியை அழைக்கும் அவரைப்பார்த்து குழம்பும் வேலைக்காரியை அனுப்பிவிட்டு அவள் தான் அவருக்கு பொறுமையாக தன் அம்மா ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்பே இறந்ததை சொல்ல வேண்டியிருந்த்து. அவளின் காதலனின் சிபாரிசின் பேரில் ஒரு மனோத்துவ மருத்துவரிடம் அவரை அழைத்துச்செல்கிறாள். அவர் இது பெரிது படுத்த வேண்டிய விசயமில்லை வயயோகத்தில் எல்லோருக்கும் வருவதுதான் என் கூறி மருந்துகளை எழுதிதருகிறார். ஆனால் அவளுக்கு திருப்தி இல்லை
மிக சமீபமாய் நிகழ்ந்த விசயங்கள் கூட அவருக்கு மறந்து விடுகிறது. தன் தோழி ஒருவரின் அம்மாவின் பிறந்த நாள் பரிசாக உத்தம் சொளத்ரி எழுதிய புத்தகம் ஒன்றில் அவரது கையெழுத்து போட்டுக்கேட்கிறான் அவரது கல்லூரியில் படிக்கும் மகன். தோழியின் அம்மாவின் பெயரை கேட்டு விட்டு எழுத போகும் சமயம் அவருக்கு மறந்து விடுகிறது. தடுமாறி குழம்புகிறார். தன் நிலை உணரும்பொழுது சோர்வடைந்து மெல்ல தன் அறைக்கு செல்கிறார். அக்காவும் தம்பியும் அனுதாபத்தோடு பார்க்கிறார்கள்.
அக்காவின் திருமணத்திற்கு பிறகு தான் அப்பாவை எப்படி கையாளுவது என மருளும் தம்பி ஒரு சாயங்காலம் தன் மனதில் உள்ளதை கூறுகிறான். திரிஷாவை பெண்பார்க்க அவள் காதலன் தன் அம்மா,அப்பாவுடன் வருவதாக இருக்கும் நாளுக்கு முந்தைய இரவு. இந்த பெண்பார்க்கும் படலத்தை வெளியே எங்காவது வைத்துக்கொள் என்கிறான் தம்பி. அப்பா ஏதாவது ஏடாகூடமாக செய்தால் அது உன்னை பாதிக்கும் என்கிறான்.திரிஷா ஒன்னும் நடக்காது பயப்படாதே என்கிறாள். தயங்கி,தயங்கி பேசும் அவன் திரிஷாவின் திருமணத்திற்கு பிறகு அப்பாவை ஏதாவது மனநல காப்பகத்தில் சேர்த்துவிடலாமா? என் கேட்கிறான். மிகவும் கோபம் கொள்ளும் திரிஷா அவனை திட்டி அனுப்புவிடுகிறாள்.
மறுநாள் அவன் பயந்த்து போலவே ஆகிவிடுகிறது. காதலனின் அப்பா தன் சிகரெட்டையும்,லைட்டரையும்,தனக்கு வழங்கப்பட்ட தேனீரையும் தன் முன் இருந்த தேனீர் மேஜையில் வைக்கிறார், சரியாக அங்கிருந்த செய்திதாளில் வெளிவந்திருந்த காந்தியின் முகத்தின் அருகில். உத்தம் சொளத்ரியின் முகத்தில் டென்ஷன். தான் சிகரெட் பிடிக்கலாமா என கேட்டுவிட்டு பிடிக்கிறார் காதலனின் அப்பா. உத்தம் கைகளை பிசைகிறார். திரிஷா அப்பா எப்பொழுதும் பாடும் கவிதையை அவர்களுக்காக பாடிக்காண்பிக்க சொல்கிறாள். அவர் வார்த்தைகள் மறந்து தடுமாறுகிறார் தலை முடியை விரல்களால் சுற்றிக்கொண்டு தடுமாறும்.அவரின் செய்கைகள் அவர்களுக்கு
வித்தியாசமாக இருக்கிறது. அதே சமயம் சாம்பல் கிண்ணத்தை தேடியெடுக்கும் காதலனின் அப்பா மிகச்சரியாக அதை காந்தியின் முகத்தில் வைத்து சாம்பலை தட்டுகிறார். உத்தம் அடக்கமுடியாத தன் கோபத்தை கொட்டுகிறார்.காதலனின் அப்பா மன்னிப்புக்கோரியும் அவர் விடவில்லை.இது சாதாரண பேப்பர் தானே என்றவரிடம். இது அடையாளம். ஒரு வாழ்க்கை நிலையின்,தத்துவத்தின் அடையாளம் என கோபத்துடன் கத்துகிறார் உத்தம். சூழ்நிலை இனக்கமற்றதாகிவிடுகிறது. திரிஷா அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறாள். இது பரம்பரையாக வரும் வியாதியா என திரிஷாவிடம் கேட்கிறார் காதலனின் அப்பா. அவர்கள் கிளம்புகிறார்கள்
பின் நாட்களில் நிலமை இன்னும் மோசமாகிறது. ஒரு நாள் பரபரப்பான நகரின் சந்தடிக்கிடையே பழைய பேப்பர்களை சுமந்துக்கொண்டு வரும் அப்பாவை வீட்டிற்கு அழைத்து வருகிறாள் திரிஷா. மற்றோரு நாள் தன் மகனை நீ யார் என் கேட்கிறார். தன் வீட்டை இது சிறைசாலை என்கிறார். சாப்பாட்டை சாப்பிட மறுக்கிறார் அதில் ஜெயிலர் விஷம் வைத்திருப்பதாக கூறுகிறார்.ஓர் இரவு அவர் அறையிலிருந்து புகை மண்டலம். திரிஷாவும் தம்பியும் கதவை திறக்க சொல்லியும் திறக்க மறுக்க பால்கனி வழியாக குதித்து உள் நுழையும் அவர்கள் காண்பது எரியும் பழைய பேப்பர்கள். உத்தம்மை தேடும் அவர்கள் அவரை கட்டுலுக்கடியில் ஒளிந்துக்கொண்டிருக்கும் அவர் “ நான் காந்தியை கொல்லவில்லை ... நான் காந்தியை கொல்லவில்லை என் அரற்றுகிறார். அவர் குரல் நடுங்குகிறது
என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் திரிஷாவிற்கு அறிமுகமாகும் ஒரு மனநல மருத்துவரின் அனுகுமுறை நம்பிக்கை கொடுக்கிறது. சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு சம்பவத்தினால் ஏற்ப்பட்ட மனஅழுத்தத்தின் விளைவே இந்த மறதியும் அவரது பிறழ்ந்த செயல்பாடுகளும் எனவும் Pseudo-Dementia என்ற மனநிலை பிறழ்வு நிலையின் கூறுகள் அவரிடம் இருப்பதாகவும் கூறுகிறார். தான் காந்தியை கொன்றுவிடதாகவும் அதற்காக சிறையில் இருப்பதாகவும் ஒரு மாய உலகத்தில் அவர் வாழ்வதாக கூறுகிறார் மனநல மருத்துவர் அவருக்கும் காந்தியின் கொலைக்குமான தொடர்பை கண்டறிய உத்தம் சொளத்ரியின் பால்ய கால நண்பர் Gattuவைப்பார்க்க டில்லிக்கு செல்கின்றனர்ள் திரிஷாவும் , மனநல மருத்துவரும்.
சிறுவயதில் அவர்கள் விளையாண்ட ஒரு விளையாட்டைப்பற்றி சொல்கிறார் Gattu. பலூன் நிறைய சிகப்பு மையை நிரப்பி ஒர் படத்தின் மீது தொங்கவிட்டு , தங்கள் கண்களை கட்டிக்கொண்டு வில்லைக்கொண்டு அந்த பலூனை உடைப்பது. அந்த சிகப்பு மை சிதறி அந்த உருவப்படத்தில் முழுவதுமாக தெறிக்கும் அதாவது அந்த ஆள் கொலைசெய்யப்படுவான். இந்த விளையாட்டை உத்தம் சுற்று வந்தபொழுது கண்களை கட்டிக்கொண்டு நிற்கும் பொழுது ஒரு சிறுவன் புதிதாக ஒரு படத்தை மாட்டிவிட, உத்தம் அம்பை எய்கிறான். ஒரே ஆரவாரம். சிகப்பு மை அந்த ஆளின் உடல் முழுக்க சிதறுகிறது. அந்த உருவப்படம் காந்தியுடையது. அன்று 30 ஜனவரி 1948
சிறுவர்களின் ஆரவாரத்திற்கு இடையே அங்கு வரும் உத்தமின் அப்பா இதைப்பார்க்கிறார்.தீவிர காந்தி தொண்டரான அவருக்கு ஆத்திரம். தன் மகனை அடிக்கிறார். அன்று சாயங்காலம் காந்தி கொலை செய்யப்பட்ட சேதி கிடைத்த பொழுது அவருக்கு தன் மகன் ஒரு கெட்ட சக்தியாக தோண்றுகிறது. அதன் பின் அவர் இறக்கும் வரை அவர் உத்தமின் முகத்தை பார்க்கவே இல்லை. இதன் பாதிப்பு உத்தமை தீவிரமான மனசிக்கலுகு உள்ளாக்குகிறது. காந்தியை தான்தான் கொலைசெய்ததாக நம்ப தொடங்கி ஒரு மாயலோகத்தில் உழழும் அவரது மனது குற்ற உணர்வுக்கும் மன பிறழ்வுக்கும் ஆளாகிறது.
உத்தமை இந்த மனபிறழ்விலிருந்து மீட்க அந்த மன நல மருத்துவர் நாடகத்தன்மை வாய்ந்த ஒரு பரிசோதனையை செய்கிறார். சினிமா துணை நடிகர்களைக்கொண்டு ஒரு நீதிமன்ற காட்சியை அறங்கேற்றுகிறார் அதன் மூலம் உத்தம் குற்றமற்றவர் அவர் உபயோகப்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி எனவும் அதைகொண்டு ஒரு மனிதனை கொல்லமுடியாதெனவும் நிரூபிக்கப்படுகிறது. உத்தம் குற்றமற்றவர் என நீதிபதி தீர்ப்பளிக்கிறார். நீங்கள் ஏதாவது கூற வேண்டுமா என நீதிபதி கேட்டவும் உத்தம் பேசுகிறார்,
உத்தம் தன் மன பிறழ்விலிருந்து வெளியே வந்துவிட்டாரா அந்த மன்நல மருத்துவரின் பரிசோதனை வெற்றி பெற்றுவிட்டதா என் தெரிந்துக்கொள்ள எல்லோரும் ஆர்வமாக அவரை கவனிக்கிறார்கள்.......
உத்தம் மெல்ல பேசுகிறார்.“ நான் தான் காந்தியை கொலைசெய்தேன்.” பெரிய அமைதி மொத்த நீதிமன்றமும் அவரைப்பார்க்கிறது..அவர் தொடர்கிறார்....
“........இல்லை நான் மட்டுமல்ல நீங்கள், நாம் எல்லோரும் காந்தியை கொலை செய்தோம் தினம் தினம் கொல்கிறோம். காந்தியை எலா இட்த்திலும் வைத்தோம் அலுவலகம்,நீதிமன்றம்,நாணயம்,பணம்,...எல்லா இட்த்திலும் மனத்தில் மட்டும் இல்லை.நாம் தான் கொலை செய்தோம்.” உத்தம் மெல்ல திரிஷாவை அழைக்கிறார் அவள் உத்தம்மை அணைத்தவாறு வெளியே கூட்டிச்செல்கிறாள். கடல்லை ஓரமாக அவர்கள் செல்கிறாகள் அவருக்கு பிடித்தமான ஹிந்தி கவிதை ஒலிக்கிறது ..