Sunday, November 21, 2010

நவநீதகிருஷ்ணனின் காதல் கதை


நவநீதகிருஷ்ணன் யாருடனும் அவ்வளவாகப் பேசமாட்டான். மரப்பாச்சியின் செதுக்கல்களையொத்த அவன் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.எனக்கென்னவோ அவன் அப்படி இருப்பதனாலேயே மிகவும் பிடித்துப் போய்விட்டது. சுவரில் சாய்ந்தபடி ஒரு கால் மடக்கி நிற்கும் அவன் முகம் ஒரு முதிர்ந்த யோகியின் முகம் போல அழகாக இருக்கும். நானும் அவனும் கணிப்பொறி தயாரிக்கும் நிறுவனமொன்றில் விற்பனைப் பிரிவில் வேலை பார்த்து வந்தோம். அலுவலகத்தில் ஒருமுறை மரியாவிடம் அவன் கோபமாக நடந்துகொண்டது முதல் எல்லோரும் அவனிடம் கொஞ்சம் இடைவெளி விட்டே பழகினார்கள். ஒரு சம்பள நாளின்போது “கடுவன் பூனை இன்னும் வரவில்லையா?” என தனலட்சுமி கேட்டபோது, அவள் நவநீத கிருஷ்ணனைத்தான் குறிப்பிடுகிறாள் என்று எல்லோருக்குமே தெரிந்தது. நான் அவளிடம் அப்படிச் சொன்னது நாகரிகமாகப் படவில்லை என்றேன் கொஞ்சம் கோபமாக. தனலட்சுமி எப்பொழுதும் பேசுவதைப் போல குழைந்தபடியே “ஒரு கேளிக்கைக்காகக் கூறினேன். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றாள் எப்பொழுதும்போல்

என்னை ஏனோ நவநீதகிருஷ்ணனுக்குப் பிடித்துப் போய் விட்டது. ஒருவேளை நானும் தஞ்சாவூர்க் காரன் என்பது காரணமாக இருக்கலாம். இருவரும் விக்டோரியா லேஅவுட் பக்கம் தனி வீடு எடுத்துத் தங்கியிருந்தோம். எங்களுடன் பணிபுரியும் காயத்ரி சந்திரசேகர் மூலமாக அந்த வீடு எங்களுக்குக் கிடைத்தது. அவள் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருந்தது அந்த வீடு. அவளும் தமிழ்தான். மூன்று தலை முறைக்கு முன்பு பெங்களூரு வந்து தங்கி விட்ட குடும்பம். கன்னட வாசனை வீசும் தமிழில் காயத்ரி பேசுவது ஒரு தனி அழகு. அவளும்கூட நல்ல அழகுதான். அந்த வீட்டை அவள் எங்களுக்குக் காட்டிய அன்று மெரூன் கலர் பருத்திப் புடைவை கட்டியிருந்தாள். மிகவும் அழகாக இருக்கிறது என்று சொன்னபோது, சந்தோஷப் பட்டு மிகவும் வெட்கம் அடைந்தவளாய் எனக்கு நன்றி கூறினாள்

பொதுவாகவே உடை விஷயத்தில் அதிக கவனம் எடுத்து, மற்றவர்களை ஈர்க்கும் அடர்ந்த வண்ண உடைகளை அணிவதில் எனக்கு விருப்பம் அதிகம். காயத்ரி அன்று உடுத்தியிருந்த புடைவையும் நல்ல அடர்ந்த நிறம். அதனாலேயே கூட எனக்கு அந்த உடை பிடித்திருக்கக் கூடும். நானும் அதைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. அவளுடன் தொடர்ந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ளவே அப்படிச் சொன்னேன்.



எப்போதோ ஒருமுறை நவநீத கிருஷ்ணன் “உன்னை மாதிரி கோமாளி களை, பெண்களுக்கு மிகவும் பிடித்து விடு கிறது” எனச் சொன்னது ஒரு வகையில் சரிதான். நான் எதைச் சொன்னாலும் சிரித்துக்கொண்டாள் காயத்ரி. என் மூளை முழுவதும் நிரம்பியிருந்த, எதைச் சொன்னால் சிரிக்க வைக்க முடியும் என்ற கோமாளியின் உபாயங்கள் அன்று வெகு இயல் பாகச் சரியான தருணங்களில் வந்து விழுந்து கொண்டிருந்தது. என் கவனம் முழுதும் காயத்ரி பக்கம் சாய்ந்த ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நவநீத கிருஷ்ணன் வெளியே சென்றிருக்க வேண்டும். அவனை அங்கு காணவில்லை. நான் வெகு நேரம் காயத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் திரும்பும்பொழுது அவள் வீட்டில் சாப்பிட அழைத்தாள். நவநீதகிருஷ்ணனின் முகம் நினைவுக்கு வர அவளை மறுத்துவிட்டு, வீட்டுக்காக நன்றி சொல்லி விட்டு நடந்தேன். நவநீதகிருஷ்ணன் தெரு முனையில் நின்றுகொண்டிருந்தான். நவநீத கிருஷ்ணன் அதிகம் பேசாமல் நடந்தான். காயத்ரிக்கு இன்று தூக்கம் பிடிக்காது என்றேன் சிரித்துக்கொண்டே. நவநீதகிருஷ்ணன் ஒன்றும் பேசவில்லை.



பல சமயங்களில் நவநீதகிருஷ்ணன் அப்படித்தான் நடந்துகொள்வான். அமைதியாக இருந்து விடுவது. தான் என்ன நினைக்கிறோம் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதபடிக்குச் செய்வதில் அவனுக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. சதுரங்க--ம் விளை யாடுவது போல முன்று நான்கு நகர்த்தலுக்குப் பின்னரே முதல் நகர்த்தலின் அர்த்தம் புரிபடும். பல சமயங்களில் அதுவும் கூட புரியாது. அவன் போக்கை எதிர்கொள்வது ஆரம்ப நாட்களில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஒருமுறை நான் அவனை ‘அடைகோழி’ எனக் கூப்பிட்டதுக்காக என்னோடு இரண்டு நாள் பேசாமல் இருந்தான். அலுவலகம் முடிந்தவுடன் நேராக அறைக்குத் திரும்பி விடும் அவன் பழக்கத்தைக் கிண்டல் செய்யும் விதமாக நான் அப்படிக் கூப்பிட்டேன். எப்பொழுதாவது மிக அரி தாகவே அவன் வெளியே செல்வான். தொலைக்காட்சியோ, ரேடி யோவோ இல்லாத அறையில் எப் படி வெறுமனே காலம் கழிக்க முடியும் என்பது எனக்கு ஆச்சர்ய மூட்டும் விஷயமாக இருந்தது. நவநீத கிருஷ்ணன் நிறைய புத்தகங்கள் படிப்பான். சாயங்காலப் பொழுதுகள் அவனுக்குப் புத்தகங்களுடனே கழிந்தது.



ஒரு சமயம் கமர்ஷியல் ரோட்டில் திரிந்துகொண்டிருக்கும் பொழுதுதான் பார் வதியைப் பார்த்தேன் அந்தச் சமயம் அவள் பெயர் கூட எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு அவள். ஒரு வயதான பாட்டியோடும் சின்னக் குழந்தையோடும் அவள் தங்கியிருந்தாள். துணி காயப்போடும் பொழுதோ அலுவலகத்துக்குப் புறப்படும் நேரத்திலோ அவளைப் பார்ப்பேன். ஒரு முறை பக்கத்து மளிகைக் கடையில் அவளைப் பார்க்க நேர்ந்தது. லேசாகப் புன்னகைத்து வைத்தேன். அவளும் சிரித்தமாதிரிதான் தோன்றியது. கமர்ஷியல் ரோட்டில் அவளைப் பார்த்த பொழுது முகமன் செய்தேன். பதிலுக்கு அவள் சிரித்தாள். வரும் மாதத்தில் தன் குழந்தைக்குப் பிறந்ததினம் வருவதாகவும் அதற்காக ‘ஷாப்பிங்’ வந்ததாகவும் கூறினாள். மெல்ல நடந்தோம். அவள் பேசிய ஆங்கிலத்தில் மலையாள வாடை வீசியது. “நாடு எவிட”? என்றேன் திடீரென. அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் நான் அப்படிக் கேட்டதில். ஏதோ ஓர் ஊரின் பெயரைச் சொன்னாள். தக்கலை அருகே இருக்கும் ஊர். அவள் காரைத் தெரு முனையில் நிறுத்தியிருந்தாள். அவள் கணவன் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இறந்து விட்டதாகக் கூறினாள். அதே நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் இப்பொழுது அவளுக்கு வேலை.



நான் எவ்வளவோ மறுத்தும் என்னை காரில் வரச் சொன்னாள். நான் இடையிடையே பேசின மலையாள வார்த்தைகளின் உச்சரிப்புகளுக்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்தாள். பழைய ஹிந்திப் படக் கதா நாயகிகள் மாதிரி பெரிய கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொள்வது அவள் வழக்கம். அது அவளுடைய வயதை மேலும் கூட்டிக் காட்டுவதாக இருந்தது. அவளின் முகவடிவுக்குச் சிறிய சட்டம் கொண்ட கண்ணாடி மிகவும் பொருத்தமாக இருக்கும் எனச் சொன்னேன். அப்படியா என்றாள்... மிகவும் சிந்தனை வயப்பட்டவளாய். தெருவில் நான் இறங்கியபோது, நவநீதகிருஷ்ணன் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.



நான் கண்களைச் சிமிட்டி நவநீதகிருஷ்ணனைப் பார்த்து சிரித்தேன். அவன் கண்டு கொள்ளவேயில்லை. கையில் இருந்த புத்தகத்தைப் படிப்பதில் மும்முரமாக இருந்தான். உண்மையில் அவன் கவனம் அங்கில்லை எனத் தோன்றியது எனக்கு. அனேக மாகத் தெருவில் எல்லா வீடுகளும் அமைதியாகி விட்டிருந்தன. நான் படுக்கைக்குப் போகும் முன் நவநீதகிருஷ்ணனைப் பார்த்தேன். புத்தகம் வாசல் படியில் கவிழ்ந்து கிடந்தது. நவநீதகிருஷ்ணன் வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். முகம் இறுக்கமாக இருந்தது.



மறுநாள் திருநெல்வேலி ரெட்டியார் விடுதியில் சாப்பிடும் பொழுது நவநீத கிருஷ்ணன் “மனசுல பெரிய ரோமி யோன்னு நெனப்பா” என்றான். நான் சிரித்தேன். “உதை பட்டா தெரியும்” என்றான் தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் அப்படிச் சொல்வது முதல் முறையில்லை.



அலுவலகத்தில் கலாட்டாக்களுக்குப் பஞ்சமில்லை. நவநீத கிருஷ்ணன் பொதுவாக இந்தக் கலாட்டாக்களில் அதிகம் கலந்துகொள்ள மாட்டான். ஒருமுறை மரியாவிடம் அலு வலக வேலை நிமித்தமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கும்பொழுது எப்பொழுதும் போல கண்களைத் தாழ்த்தி மேஜையைப் பார்த்துக்கொண்டே அவன் பேசினான். மரியா அவன் தாடையில் கைவைத்து முகத்தை நிமிர்த்தி, “இப்போது சொல்” என்றாள். யாரோ பின்னால் சிரித்தார்கள். நவநீத கிருஷ்ணன் வேகமாக மரியாவின் கைகளைத் தட்டிவிட்டு நகர்ந்தான். அவன் அதிலிருந்து மரியாவிடம் பேசுவதில்லை. அதற்கு அவ்வளவு பெரிதாக நடந்துகொண்டிருக்க வேண்டாம் சாதாரண கேலியாக எடுத்துக்கொண் டிருக்கலாம் என நான் சொன்னபோது, என்னிடமும் கோபப்பட்டான் நவநீதகிருஷ்ணன்.



மரியா அதன் பின்னரும் நவநீதகிருஷ்ணனிடம் தன்னுடைய கேலியையும் கிண்டலையும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தாள்.



ஒரு சாயங்காலம் பார்வதியின் குழந்தைக்குக் காய்ச்சல் என்று அவ ளோடு பக்கத்து மருத்துவமனைக்குச் சென்றுவந்தேன். வீடு திரும் பியபோது வீடு பூட்டியிருந்தது. எனக்கு ஆச்சர்யம். நவநீதகிருஷ்ணன் வெளியே சென்றிருக்கிறான் என்பது புதிதான விஷயமாக இருந்தது. என்னிடம் ஒரு சாவி இருந்த தால் மழையில் நனையாமல் தப் பித்தேன். நவநீதகிருஷ்ணன் மழையில் நனைந்துகொண்டே வந்து சேர்ந்தான். “நல்ல மழை” என் றான். எங்கே சென்று வந்தான் என்று அவனாகச் சொல்வான் என எதிர்பார்த்தேன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “புத்தகக் கடைக்குப் போயிட்டு வர்றீயா?” என்றேன். ஏதாவது சொன்னால் அவனிடமிருந்து பதில் வரும் எதிர்பார்ப்பில்... “இல்லை சும்மா வெளியே போயிட்டு வந்தேன்” என்றான் பொதுவாக.



அதன்பின் வந்த நாட்களில் யதார்த்தமாக நவநீதகிருஷ்ணனைக் கவனிக்கத் தொடங் கினேன். அவன் போக்கில் பெரிய மாறுதல் கள் தென்பட்டது. பெரும்பாலும் அவன் அலுவலகம் முடிந்து நேரே வீட்டுக்கு வருவதில்லை என்பதை கவனித்தேன். என்னிடம் சொல்லிக்கொண்டோ, சொல்லாமலோ திடீரென அலுவலகத்திலிருந்து அவன் காணாமல் போனான். இரவு அவன் வீடு திரும்புவதற்கு வெகுநேரமானது. ஒரு சனிக்கிழமை கெங்கம்மா வீடு பெருக்கும்பொழுது இரண்டு சினிமா டிக்கெட் குப்பையோடு குப்பை யாகப் போனது. நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நானும் காயத்ரியும் போன டிக்கெட்டாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.



ஆனால் மறுவாரமே மேஜையில் கசங்கிய நிலையில் இரண்டு டிக்கெட் கிடந்தது. நான் ஒரு தமிழ் திரைப் படத்தின் பெயரைச் சொல்லி அந்தப் படத்துக்குச் சென்றிருந்தாயா? என கேட்ட பொழுது தலையசைத்துக் கொண்டே நகர்ந்து கொண்டான் நவநீதகிருஷ்ணன். மேலும் நான் எதுவும் கேட்டு விடக் கூடும் என்று அவன் எண்ணியிருக்கலாம்.



ஒருமுறை தலை வாரிக் கொள்ளும் சமயம் அவன் சீழ்கை அடிப்பதை ஆச்சர்யத் துடன் பார்த்தேன். அப்படி யெல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்லை. நவநீதகிருஷ்ணனை ஏதோ ஒன்று உள்ளி ருந்து ஆட்டுவது போல இருந்தது எனக்கு. நான் பார்ப் பதைக் கண்ணாடியில் அவன் கவனித்திருக்க வேண்டும். உடனே நிறுத்திக் கொண்டான். அவன் வெளிர்நிற உடைகள் அணிவதைத் தவிர்த்ததை ரெட்டியார் கவனித்து, “என்ன மாப்பிள்ளை கணக்கா உடுத்திரிய... ஏதும் விசேஷமா?” என்றார் ஒருநாள். நவநீத கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டான். அவன் ஏதோ கனவு உலகில் மிதந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.



பொதுவாக ஊருக்குப் போகும்பொழுது நானும் நவநீதகிருஷ்ணனும் சேர்ந்துபோவது வழக்கம். அந்தமுறை கிருஸ்துமஸ் விடு முறைக்கு நவநீதகிருஷ்ணன் வரவில்லை. நான் மட்டும் தஞ்சாவூருக்குப் போய் வந்தேன். நவநீதகிருஷ்ணன் வராததுக்குப் பெரிதாக ஒன்றும் காரணம் சொல்லவில்லை.



“ எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்றான். நான் விரிவாக ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. நான் சில விஷயங்களை அனுமானித் திருந்தேன். நான் ஊரிலிருந்து வந்தபொழுது அவன் படுக் கையில் புக்கர் பரிசு பெற்ற இந்தியர் ஒருவரின் நாவலும் “கூணி ஓகீஐகுஏ” என முகவரி இடப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையும் கிடந்ததை கவனித்தேன். என்ன வாழ்த்து அட்டை என்று தெரியவில்லை. கிருஸ்துமஸ் அல்லது புத் தாண்டு வாழ்த்துக்களாக இருக் கலாம். நான் யோசனையோடு குளிக்கச் சென்றேன். நான் திரும்பியபோது அது அங்கு இல்லை. நான் சிரித்துக்கொண் டேன் நானும் இது மாதிரியான திருட்டுத்தனங்களைச் செய்தவன்தானே. நவநீதகிருஷ்ணனிடம் நேரடியாகக் கேட்டு விடுவதற்கான நேரம் வந்து விட்டதாக நினைத்தேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் எங்காவது வெளியே போக லாமா என்றேன் நவநீதகிருஷ்ணனிடம். அவன் தலையசைத்தான். கப்பன் பார்க் சாலையோரம் நடந்து சென்றோம். அவன் மௌனமாக நடந்து வந்தான். நான் என்ன கேட்கப் போகிறேன் என்பதை யூகித்து, யோசனையோடு நடந்து வந்ததுபோல இருந்தது. நானும் அதிகம் பேசவில்லை. எப்படித் தொடங்குவது என யோசித்த படியே நடந்துகொண்டிருந்தேன். ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம். நானும் காயத்ரியும் தேர்ந்தெடுத்த இடம் அது. வாகன சந்தடி அதிகம் இல்லாத இடம். எங்கிருந்தோ ஆரம்பித்தேன். பெங்களூருவில் நிலவும் புது வருட கொண்டாட்டம் பற்றியெல்லாம், தஞ்சாவூரில் இடிக்கப் பட்ட ஒரு பழைய தியேட்டர் பற்றி, விற்பனை இலக்கு கொடுக்கும் மன அழுத்தம் பற்றி என ஏதேதோ பேசிக் கொண்டே போனேன். கேள் வியைக் கேட்பதற்கான தரு ணம் நெருங்கிவிட்ட தாக மனது சொடுக்கிய ஒரு தருணத்தில் அவன் சாயங்கால வேளையில் வெளியே செல்வது எனக்கு ஆச்சர்யமாக இருப்பதாகக் கூறி நிதானித்தேன். நவநீதகிருஷ்ணன் தலைகுனிந்து கொண்டு மெல்ல சிரித்தான். நான் அவன் இடுப்பைக் கிள்ளினேன். ஒரு பெண் தன்னைக் காதலிப்பதாக மிகுந்த வெட்கத்தோடு சொன்னான் நவநீத கிருஷ்ணன். நான் ஆர்ப்பாட்டமாய் கத்தினேன். வழியே சென்ற ஒரு இளம்பெண் திரும்பிப் பார்த்துச் சென்றாள்.



அன்று இரவு திரும்பும் வழியில் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓர் உணவகத்தில் உணவு சாப்பிட்டு அவன் காதலைக் கொண்டாடினோம். அவளை எனக்கு அறிமுகப்படுத்துவதாகக் கூறியபோது மணி ஒன்றைத் தாண்டியிருந்தது.



அதன் பின்னால் நாங்கள் தினமும் உறங்குவதற்குப் பின்னிரவாகிப் போனது. நவநீதகிருஷ்ணனுக்குப் பேசுவதற்கு நிறைய இருந்தது. சில சமயம் அவன் வேறு உலகத்தில் இருப்பது போல உணர்ந்தேன். அவள் பிறந்த நாளுக்கு எப்படி ஆச்சர்யப்படுத்தலாம் என என்னிடம் யோசனை கேட்டான். பொங்கலுக்குப் பின் வந்த ஒரு வாரத்தில் அவள் பிறந்தநாள் வந்தது.



அதிகாலையிலேயே கிளம்பிவிட்டான். அன்று அவர்கள் இருவரும் பிருந்தாவனம் போவதாகத் திட்டம். நவநீதகிருஷ்ணன் சென்றபின் நன்றாகத் தூங்கினேன். அன்று அலுவலகம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை என நினைவு. சாயங்காலமாக வெளியே கிளம்பினேன். காயத்ரியை எம்.ஜி. ரோட்டில் ஒரு ரெஸ்டாரண்டில் சந்திப்பதாகக் கூறியிருந்தேன். பேருந்தில் அதிக கூட்ட மில்லை, விடுமுறையின் காரணமாக இருக்கலாம். பேருந்து எம்.ஜி.ரோட் டுக்குத் திரும்பும் நேரத்தில் தான் நான் பார்த்தேன். பேருந்து நிறுத்த பெஞ்சில் நவநீதகிருஷ்ணன் உட்கார்ந்திருந்தான். மிகவும் தளர்ந்து போயிருந்தான். எனக்குக் குழப்பமாக இருந்தது.



நவநீதகிருஷ்ணனுக்கு ஃபோன் செய்தேன். நவநீதகிருஷ்ணனின் குரல் உற்சாகமாக இருந்தது. அவனும் அவளும் மைசூரிலிருந்து புறப்பட்டுக் கொண் டிருப்பதாகவும், அன்றைய பொழுது இனிமையாகச் சென்றதாகவும் சொன்னான். எனக்கு மெல்ல புரிபடத் தொடங்கியது. நவநீதகிருஷ்ணன் ஏதேதோ பேசிக்கொண்டே சென்றான். துக்கத்தின் வலி மிகவும் பாரமாக இருந்தது. பேருந் தின் பின்புறக் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். தூரத்தில் யாருமே அற்ற பெரிய வெளியில் நவநீதகிருஷ்ணன், அமர்ந்திருந்தான் மிகத்தனியாக. இருள் கவிழ்ந்துகொண்டிருந்தது. நவநீத கிருஷ்ணன், வீடு திரும்ப வெகு நேரமாகலாம்.


  நன்றி :








Monday, May 17, 2010

ஆடூர்கோபாலகிருஷ்ணனின் - நிழல்குத்து



தவறு இழைத்த மனத்தின் தத்தளிப்பும் அந்த சுழலிருந்து வெளியேற முடியாத நிலையில் ஏற்படும் மனச்சரிவும் ,குற்றமனப்பான்மையும் உள்ள ஒரு மனிதனின் தவிப்பும் , சமூக மனம் அல்லது பொது மனம் ஒரு குற்றத்தை எதிர் கொள்ளும் விதமும் தான் ஆடூர் கோபாலகிருஷ்ணனின் நிழல்குத்து திரைப்படம். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்குத்து பல விருதுகளை பெற்றது. Amnesty international மனித உரிமைகளுக்கு பரிந்து பேசும் திரைப்படம் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்தது.


மஹாபாரத்தை அடிப்படையாக கொண்ட வேலபாரதம் (Velabharatham) என்ற நாடோடி இலக்கியத்தில் வரும் நிழல்குத்து என்ற பகுதியை Pannisseri Nanu Pillai என்ற பல்மொழி வித்தகர் கதக்களி நாடகமாக எழுதினார். பாண்டவர்களை கொல்வதற்கு பல வழிகளில் முனையும் துரியோதனன் சகுனியின் அறிவுரையின் பேரில் மாந்ரீகத்தில் பெயர் போன பாரத மலையன் என்பவனை வரவழைக்கிறான். மலையன் தன்னிடம் இருக்கும் மாயக்கண்ணாடியில் எழும் ஒருவனின் சாயையை கொல்வதன் மூலம் அந்த மனிதனைக்கொல்லும் நிழல்கொலையைச் செய்வதில் வல்லவன். துரியோதனன் மலையனிடம் பாண்டவர்களை “நிழல்குத்து” மூலம் கொல்லச்சொல்கிறான். மலையன் மறுக்கிறான். “யானைமுட்டை” ஒன்று தந்தால் கொல்கிறேன் என தப்பிக்கப்பார்கிறான். துரியோதனன் அவனை கொல்ல முயல “நிழல் குத்து”க்கு ஒப்புகொண்டு பாண்டவர்களை கொல்கிறான் மலையன். பல பரிசுப்பொருட்களுடன் வீடு வரும் மலையன் நடந்தை மலையத்தியிடம் சொல்கிறான். கிருஷ்ணனின் பக்தையான மலையத்தி அவனை கடுமையாக பேசுகிறாள். அவன் செய்த குற்றத்தை அவன் உணரவேண்டி தன் குழந்தையை கொல்கிறாள் மலையத்தி. குந்தி தேவியின் வேதனையை மலையன் அப்பொழுதுதான் உணரமுடியும் என்கிறாள். எல்லாவற்றையும் அறியும் கிருஷ்ணன் பின் பாண்டவர்களையும்,மலையனின் குழந்தையும் உயிர்பிக்கிறான். நிழல்குத்து என்ற வார்த்தையின் மூலம் இது.

நிழல்குத்து இந்தியா சமஸ்தான்ங்களாக பிரிந்துக்கிடந்த பிண்ணனியில் (1941) நிகழ்கிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் தமிழ்/மலையாள கலப்புள்ள ஒரு கிராமத்தில் ( படத்தில் ஒரு இடத்தில் “நாகர்கோயில்” என சொல்லப்படுகிறது) மஹாராஜா கொடுத்த வீடு,நிலங்களுடன் வசிக்கும் தமிழ் பேசும் காளிப்பன்(Oduvil  Unnikrishnan  ) என்றவன் குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையை செய்கிறான். 25 வருங்களுக்கு முன்பு தான் தூக்கில் போட்ட ஒருவன் உண்மையில் குற்றவாளியில்லை ஒரு குற்றமும் செய்யாத நிரபராதி என தெரிந்தே மஹாராஜாவின் ஆனையை நிறைவேற்ற அவனை தூக்கிலிடுகிறான் காளியப்பன். அதிலிருந்து நிம்மதி இழந்து அலைகிறது காளியப்பனின் மனம். நிம்மதியிழந்து அலையும் அவன் மனம் இரண்டு விதங்களில் அதிலிருந்து தப்பிக்க முயல்கிறது. ஒன்று காளிதேவியிடம் தன்னை முற்றிலுமாக சமர்பித்துவிடுவது. ( எதற்கும் நான் காரணமில்லை.. செயலும் நீ..செய்பவளும் நீ ... ) இரண்டாவது சாராயம். அவனால் நிகழ்ந்துவிட்ட செயலை ஒன்றும் செய்யமுடியாது அதன் நிழலாய் எழு எண்ணங்களை கொல்ல முயலுகிறான் காளியப்பன்.



ஒரு சம்ரதாயமாக தூக்கிலிடப்பட்ட பின்பு அந்த கயிறு காளியப்பனிடமே கொடுக்கப்படுகிறது. ஊரில் காய்ச்சல், பேய்பிடித்துவிட்டது என உடல்,மன பிணிகளுடன் வரும் மக்களுக்கு அந்த கயிற்றை கொஞ்சம் அறுத்து தீயிலிட்டு பொசுக்கி காளிதேவியை பிரார்த்தித்து நெற்றியில் இட ஊர் பிணிகள் மறைகின்றன. ஒரு உயிரை கொன்ற அந்த கயிறு பல உயிர்களின் பிணி போக்கும் மாய உருவெடுக்கிறது. அரசு அதிகாரத்தின் குறியீடாக (நிழலாக)இருக்கும் அந்த கயிற்றை அழிப்பதன் மூலம் சமூகத்தின் பிணிகள் நீங்குகின்றன. நிழலை அழிப்பதன் மூலம் அசலை(அதிகாரத்தை) அழிப்பதாக சாமானியனான காளியப்பனின் ஆழ்மனம் கொள்ளும் திருப்தியின் வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம்.



ஒரு சமயம் மிகவும் சோர்வாக நடந்து செல்லும் காளியப்பனை எதிர்கொள்ளும் ஊர்காரர்கள் இருவர் ஏன் இவன் இப்படி சோர்வாக இருக்கிறான். மஹாராஜா தந்த வீடு,நிலம்,மாடு என வசதியாகத்தானே இருக்கிறான் என்கிறான் ஒருவன். அவனுக்கு மன வியாதி. ஒரு நிரபராதியை கொன்றுவிட்தற்கு தான் பெறுப்பு என குற்றமனப்பான்மை அவனை கொல்லுகிறது என்கிறான் மற்றொருவன். அவன் தன் கடமையைதானே செய்தான் அவன் எப்படி குற்றவாளியாகமுடியும் என்கிறான் முதலாமவன். அப்படியென்றால் தண்டனையை நிறைவேற்ற சொன்ன மஹாராஜாதான் குற்றவாளியா? எங்கிறான் இராண்டமவன். அதெப்படி அதற்குத்தான் மஹாராஜா ஒரு சூட்சமம் வைத்திருக்கிறாரே. தண்டனை நிறைவேற்றும் நாளும்,நேரமும் குறிக்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் தண்டனை நிறைவேறியிருக்கும் என தெரிந்து மஹாராஜா சற்று தாமதித்து குற்றவாளிக்கு கருணை விடுதலை அளித்து ஆணையை அனுப்புவார். மஹாராஜாவைப்பொறுத்தவரை அவக்கு விடுதலை அளித்தகிவிட்டது. எனவே அவர் குற்றவாளியல்ல. என்கிறான் முதலாமவன். இருவரும் சிரித்துக்கொள்கின்றனர். சிறிது நேரம் கழித்து “ அப்போ யார் குற்றவாளி?” என்கிறான் இரண்டாமவன். யாரும் பதிலளிக்காமல் முடிகிறது காட்சி ஒருவேளை இது இயக்குனர் நம் முன் வைக்கும் கேள்வியாக இருக்கலாம்.

திரைப்படத்தின் முடிவில் காளியப்பனை தேடி வருகிறார் சமஸ்தானத்தின் சிப்பந்தி. மீண்டும் ஒரு தூக்கு தண்டனை. காளியப்பன் தனக்கு உடல் நலம் சரியில்லை என கூறுகிறான். மஹாராஜாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று மிரட்டுகிறான் சிப்பந்தி. வேண்டுமெண்றால் மகனை துணைக்கு அழைத்து வா என்கிறான். காளியப்பன் தன் மகனோடு புறப்படுகிறான். தூக்குதண்டனையை நிறைவேற்ற. தூக்கு தண்டனைக்கு முந்தைய இரவு அவன் உறங்கக்கூடாது தொன்றுதொட்டு வரும் வழக்கம். பொழுது போக சாராயம் குடித்து விட்டு கதைகள் பேசிக்கொண்டிருப்பது எப்பொழுதும் நடப்பது. அன்று அவன் கூட இருக்கும் காவல் அதிகாரி ஒரு கதை சொல்கிறார்.



ஒரு கிராமம் . ஒரு காதல் ஜோடி. அவன் ஒரு புல்லாங்குழல் இசைஞன். கிராமத்தின் அழகிய புல்வெளி படந்த வெளிகளில் இருவரும் சுற்றித்திருகின்றனர். கதை செல்ல,செல்ல காளியப்பனுக்கு அவனின் இளைய மகளில் கதையாக விரிகிறது. அவன் ஆழ்மனதில் புதைந்துக்கிடக்கும் ஏதோ ஒரு விசயம் இப்படி அவனை நினைக்கதூண்டியிருக்கலாம். புல்லாங்குழல் இசை ( இசை: இளையராஜா) அந்த பரந்து விரிந்த வெளி எங்கும் பரவுகிறது. மாசு மறுவற்ற அவர்கள் அன்பைப்போல. அவர்களை அவர்கள் அறியாமல் தொடர்கிறான் காதலியின் அக்கா கணவன். ( கன்னியப்பனின் இளைய மகள் பூப்பெய்திய சடங்கிற்கு வரும் மூத்த மகளின் கணவன் இளைய மகளை பார்க்கும் வித்தியாசமான பார்வை காளியப்பனையும் அவன் மனைவியையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது) அவனுக்கு அவள் மேல் ஒரு கண். அவர்களின் வழக்கமான இடத்தில் அவள் அவனுக்காக காத்திருக்கும் ஒரு நாளில் அவளின் அக்காவின் கணவன் அவளிடம் தவறாக நடந்துக்கொள்ள அவள் போராடுகிறாள். போராட்டத்தின் ஒரு நிலையில் அவள் கொலையுருகிறாள். பலி அந்த இசைஞன் மேல் விழுகிறது. அரசு அவனுக்கு அந்த நிரபராதிக்கு தூக்கு தண்டனை அளிக்கிறது.

கதையை கேட்டுக்கொண்டிருந்த காளியப்பன் அந்த இந்த இசைஞன் இப்பொழுது எங்கே என கேட்ட , காவல் அதிகாரி சிரித்துக்கொண்டே அவனைத்தான் நீ இன்னும் இரண்டு மணி நேரத்தில் தூக்கிடப்போகிறாய் என்கிறார். மீண்டும் ஒரு நிரபராதியை கொல்ல வேண்டும். காளியப்பன் சுருண்டு விழுகிறான். அதிகாரிகளுக்கு பதட்டம். எப்படியும் குறிப்பிட்ட நேரத்தில் தண்டனையை நிறைவேற்றாவிடால் தன் பதவி பறிப்போகும் என பயப்படுகிறார். காளியப்பனின் மகனை வைத்து தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடிவாகிறது.



தூக்குதண்டனைக்கு எதிரானவனும், காந்தியவாதியுமான அவன் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தயாராகிறான். குடும்பம்,சமூகம்,சம்பிரதாயம் இவைகளூக்காக தன் தத்துவ நிலைப்பாடுகளை தொலைத்துக்கொள்ளும் ஒரு இந்திய இளைஞன். காளியப்பன் விழுந்த ஒரு சுழச்சியில் அவனும் விழுகிறான். ஒரு நிரபராதியை கொல்ல தயாராகிறான். குரல் ஒலியாக படம் முடிகிறது. “ தூக்கு தண்டனை நிறைவேறியது. வழக்கம் போல மஹாராஜாவிடமிருந்து கருணை தாங்கிய கடிதம் தாமதமாக வந்தது.”





Friday, May 14, 2010

சிறகுகள் துளிர்ந்தக் காலம்.



பதின் வயது நினைவுகள் தொடர் பதிவுக்கு அழைத்த கமலேஷ்க்கு நன்றி


நேற்று சாயங்காலம் நடந்ததுப் போல இருக்கிறது. ஆயிற்று 20-22 வருடங்கள்.ரயில் பிரயாணத்தின் போது ஜன்னலுக்கு வெளியே மாறும் காட்சிகள் போல எல்லாம் மாறிவிட்டது. பள்ளியின் இறுதி ஆண்டுகள்,கல்லூரி நாட்கள். பாட புத்தகங்களைவிட புதினங்களையும், கவிதைகளையும் அதிகம் படித்த தினங்கள். என் சாயங்கால பொழுதுகள் நந்தகோபாலுடன் கழியும். நானும் நந்தகோபாலும் மெல்ல நடப்போம். புதுஆற்று கரையிலிருந்த அவர்கள் வீட்டில் என் சைக்கிளைப்போட்டுவிட்டு மெல்ல நடப்போம். சாயங்கால மார்கெட் தாண் டும் பொழுது வெய்யில் சாயும். என்னைப்போலவே அவனுக்கும் அதிர்ந்து பேச வராது. சாயங்கால மார்கெட்டில் ரோட்டோரம் கீரை விற்கும் ஒரு பாட்டி நந்தகோபாலுக்கு தோழி. ஒரு வாஞ்சையான விசாரிப்பும் கோ பாலின் சிரிப்பும் நான் தினமும் எதிர்பார்த்து கிடக்கும் தருணம். அதிர்ந்து பேசாமல் அந்த பாட்டிக்கு பதிலளிப்பான் கோபால். அவளைப்பார்க்க OSHINஐ பார்ப்பது போல இருக்கிறதல்லவா? என்பான் கோபால் . OSHIN தனியார் தொலைக்காட்சிகளின் தொந்தரவு இல்லாத எளிமையான அந்த நாட்களில் தூர்தர்ஷனில் வந்துக்கொண்டிருந்த ஒரு ஜப்பானிய தொடர். எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான தொடர் அது. உண்மைதான் அந்த முதியவளின் முகம் OSHINஐ நினைவூட்டுவதா கத்தான் இருக்கும் . வாழ்க்கையின் சகல துன்பங்களையும் அதன் போக் கில் ஏற்று கடந்து வந்த அனுபவத்தால் கனிந்த முகம். போஸ்டாபீஸ் தாண்டி ரயில் நிலையம் கடப்போம்.



ரயில்நிலையம் அருகே SUPER தேனீர் கடையில் ஒரு தேனீர் அல்லது ஒர் Maltova! . அங்கு போடப்படும் புது பட பாடல்களுக்கென்றே ஒரு கூட்டம் அங்கு வரும். MP3 PLAYER களும், I-POD-களும், Mobile Phone களும் தங்களின் அசுரத்தனமான இருப்பை வெளிப்படுத்திக்கொள்ளாத நிலையில் SUPER தேனீர்கடைக்கு ஒரு மவுசு இருந்தது.ஒரு படத்தின் பாடல்கள் முடியும் வரை கூட்டம் நிற்கும். நாங்களும் ஒரு படத்தின் பாடலுக்கா நின்றிருக்கிறோம். அது - பூவேபூச்சுடவா. சில சமயம் அதற்காக இரண்டு தேனிர் பருக வேண்டியிருக்கும். தேனீரின் கதகதப்போடு மெல்ல ரயில் நிலையம் ஒட்டிய பாதையில் இருப்புப்பாதையை ஒட்டி நடக்கத்தொடங்குவோம். அந்த இருப்புப்பாதைகளுக்கு எங்களின் வருகை மிகவும் பழகிப்போன விசயமாக இருந்திருக்கவேண்டும். எங்களுக்கு அவைகளைப்பார்க்கும் பொழுதெல்லாம் ஷங்கன்னா (இப்போதைய எஸ்.ராமகிருஷ்ணன்) கணையாழியில் எழுதியிருந்த “பழைய தண்டவாளம்” என்ற சிறுகதை நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாத வியமாகவே இருந்த்து. அந்த கதையில் வரும் சூழல் போலவே இருந்த்து தஞ்சாவூர் ரயில் நிலைய சூழலும். “பழைய தண்டவாளம்”த்தி வந்த நடராஜனையும் ,கல்யா ணியக்காவையும் கூட நாங்கள் பார்த்தோம்! மெல்ல இருளத்தொடங்கும் அந்தியில் நாங்கள் ரயில்வே டிராக்கை ஒட்டி நடப்போம். ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி பேச்சு வாழ்வின் பல கிளைகள் வழியே ஓடும். அந்த மாத கணையாழில் வந்த “கிளிக்காலம்” பற்றியோ “மேபல்” பற்றியோ ( மேபலை ஜே.மங்கயர்கரசி என்ற பெண் எழுதிருந்தார். தஞ்சாவூர் பிண்ணனியில். நாங்கள் அந்த எழுத்தாளினியை கண்டுப்பிடிக்க ஜேம்ஸ்பாண்டு வேலைகள் எவ்வளவோ செய்து முயன்றோம். முடியவில்லை. நன்கு ஐந்தாண்டுகளுக்கு பிறகு தஞ்சை ப்ரகாஷை சந்தித்தபோது அவர் சொன்னார் நான் தான் அந்த . ஜே.மங்கயர்கரசி!) அல்லது ராஜகோபால் அண்ணன் அறிமுகப்படுத்தியிருந்த Anthropomorphism என்ற புது விசயம் குறித்தோ, அருளில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் “ உயிருள்ள வரை உஷா” ஏன் அப்படி பிய்த்துக்கொண்டு ஓட வேண்டும் என்பது பற்றியோ , இறை நம்பிக்கை பற்றியோ, ஆப்பரேஷன் பூமாலை பற்றியோ, ராஜகோபால் அண்ணிடம் பார்த்திருந்த FREEDOM FROM THE KNOWN புத்தகம் பற்றியோ, பாரதிராஜாவின் புது கதாநாயகி ரேவதி பற்றியோ பேச்சு தொடங்கும். அன்றைய பேச்சை தொடங்கி வைக்கும் புள்ளி தேவரகசியமாக இருந்தது. கண்களுக்கு தெரியாத ஒரு தேவதை அந்தரத்திலிருந்து திடுமென எங்களுக்கான உரையாடல் களத்தை விரித்துச்செல்லும்.




வாழ்வை பற்றிய எங்கள் பார்வை உருவான காலம் அது. நாங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள், சந்திக்க வேண்டிய மனிதர்கள்,பார்க்கவேண்டிய திரைப்படங்கள் என்ற பட்டியலை தயாரித்தபடியே நடப்போம். அந்த பட்டியல் தினமும் தினமும் வளர்ந்துக்கொண்டே இருந்தது. அப்படியொரு பட்டியலை தயாரிப்பது எங்களுக்கு மிகவும் விருப்பமான விசயமாக இருந்தது. என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் படித்திருப் போம்,பார்த்திருப்போம் இல்லையா? என்பான் கோபால் நான் தலையசைப்பேன். மெல்ல ரயில் பாதையை தாண்டி பழைய பிரிடிஷ்காலத்து மேம்பாலம் (இப்போது அது இல்லை) வழியாக இறங்கத்தொடங்குவோம். இப்போதும் இந்த இடத்தைக்கடக்கும்பொழுதெல்லாம் கோபால் “லோலிடா” (LOLITA) பற்றி பேசிகொண்டு அந்த இறக்கத்தில் நடந்து வந்தது நிழலாடுகிறது. “லோலிடா” பற்றி எங்களுக்குள் கருத்து பேதம் இருந்தது. “அம்மா வந்தாள்” படித்தபோது இருந்த குழப்பமான மனநிலை “லோலிடா” படித்தபோதும் எனக்கு இருந்தது. கோபாலுக்கு “லோலிடா” மிகவும் பிடித்திருந்தது. எங்களின் முரண்களிலிருந்து நாங்கள் எங்களுக்கான பார்வையை உருவாக்க முயன்றுக்கொண்டிருந்தோம். கோபாலோ அல்லது நானோ சமீபத்தில் படித்த புத்தகமோ, தூர்தர்ஷ்னில் பார்த்திருந்த பிராந்திய மொழி திரைப்படமோ அல்லது எங்களை பாதித்த மனிதர்கலோ எங்களின் பார்வையில் ஊடுபாவிக்கொண்டிருந்தனர். அவர்கள் வழியே எங்கள் வாழ்க்கை தன்னை உருவாக்கிக் கொண்டிருந்தது.


மேம்பாலத்தின் வழியே கீழே இறங்கி , ராணிபாரடைஸ் பின்புறம் வழியே கலக்டர் அலுவலக சாலையில் நடப்போம். இருள் படந்திருக்கும். நல்ல அகலமான சாலை அது. பகல் முழுக்க பரபரப்பாக இருக்கும் அந்த சாலை சாயங்காலத்திற்கு பிறகு மிக அமைதியாகிவிடும். ஏதோ நாங்கள் பேசுவதை கேட்பதற்கென்றே அது மிக அமைதியாக காத்திருப்பது போல தோண்றும். எங்கள் கனவுகள் முழுவதும் தெரியும் அந்த சாலைக்கு. என்றாவது ஒரு நாள் எங்கள் கனவுகள் நிறைந்த நாளில் மீண்டும் நானும் கோபாலும் அந்த சாலையின் வழியே நடந்து வருவோம் என நான் நினைத்துக்கொள்வேன். அப்போது நாங்கள் குல்சாரி கதாநாயன் போல மிகவும் வயோதிகர்களாக இருக்கலாம். நினைவுகளில் மூழ்கி பேசாமல் நடந்து செல்வோம். அந்த சாலை மட்டுமல்ல எங்களோடு பேசிய எத்தனையோ இடங்கள் தஞ்சாவூரில் அங்குமிங்குமாய் இருந்தன. பெரிய கோயிலில் இருந்த “ நெல்லிக்கனி“ மரம். எங்களின் போதி மரம். “மோகமுள்” யமுனாவையும் பாபுவையும் எங்களைவிட அந்த மரத்திற்கு அதிகம் தெரிந்திருக்கும். அசோகமித்திரனின் “இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும் “ மாதிரி ஒரே ஒரு சிறுகதையை எழுதி விட்டால் போதும் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடும் என நான் ஒரு முறை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சொன்னபோது அந்த மரம் சிலிர்த்துக்கொண்டு காற்றில் அசைந்த்து. அல்லது நக்கலாய் சிரித்துகொண்டதோ என்னவோ!!



புது ஆற்றங்கரை ஓரமாய் நடந்து நந்தகோபாலின் வீடு வந்து சேரும் பொழுது நிலவு காயும். மீண்டும் ஒரு சாயங்காலம் கழிந்திருக்கும். அவர்கள் வீட்டு அரசமரத்தடியில் நின்றபடி பேசுவோம். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஏதேதோ நினைவுகளுடன் பட்டுநூல்கார வீதிகளை கடந்து வீடு திரும்புவேன். மெல்ல பின் நகரும் அமைதியான இரவு.

நேற்று சாயங்காலம் நடந்தது போல இருக்கிறது. ஆயிற்று 20-22 வருடம். நந்தகோபாலுக்கு பாம்பேயில்(அப்போது பாம்பே) வேலைகிடைத்தது. நான் எங்கெங்கோ சுற்றினேன். எப்போதாவது நினைவில் வந்து போனது அந்த சாயங்காலங்கள். வெகு நாட்களுக்கு பின் கோபாலை ஒரு வருடத்திற்கு முன் சந்திதேன் ஒரு திருமணநிகழ்வோன்றில். மிகவும் களைத்திருந்தான்.என்னைப்போலவே. அவன் குழந்தைளை அறிமுகப்படுத்தினான். பெண்குழந்தையின் பெயர் யமுனா. நான் கோபாலை பார்த்து சிரித்தேன். புத்தகங்கள் படிக்கிறாயா? என்றேன். சிரித்தான். நானும் சிரித்தேன். வாழ்வின் நெருக்கடியில் சிக்கி தொலைந்து போனவர்களின் சிரிப்பு. வீட்டிற்கு அழைத்தேன் இன்றே திரும்பவேண்டும் இன்னோரு சமயம் வருகிறேன் என்றான். அந்த இன்னொரு சமயம் இதுவரை வரவில்லை.







பின் தொடர நான் அழைப்பது



அழைப்பை ஏற்றமைக்கு நன்றி லேகா,றமேஷ்



Wednesday, March 31, 2010

ஒரு கவிதை

அதன் பின்னரும்






மூலம் தெரியவில்லை.

கிளை,கிளையாய் பிரிந்து

பெரு வெளி இருளில்

மறைகிறது

அதன் தடம்.

புரியவில்லை இன்னும்

வீட்டிற்குள் எப்படி புகுந்ததென.

தானே வந்திருக்க வாய்ப்பில்லை.

தந்திரம் என நினைத்துக்கொள்ளும்

என் சத்ருக்களின் தோளில்

பயணித்து வந்ததோ

தெரியவிலை.

இதன் இருப்பை

நானுணர்ந்துக்கொள்ளத்தான்

காலம் கொஞ்சம் பிடித்துவிட்டது

ஒரு வேளை

சுயம் பிறழ்ந்த ஓர் நாளில்

என் முதுகில் சுமந்து

நான் தான் வீட்டில் கிடத்தினேனோ?

இருக்கலாம்.

யாருமற்ற இரவொன்றில்

ஓசையின்றி

திசைகள் அற்ற வெளியில்

எறிந்து

திரும்பிய பின்னரும்

அகம் முழுக்க வீசுகிறது

பிண வாடை.

.

Monday, March 29, 2010

முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் : 2

முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

சில எழுத்துக்கள் நம் ஆன்மாவை நிறைத்து வாழ் நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கும்.கிர்கிஸ்தானிய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்மாதவ்வின் எழுத்துக்கள் அப்படிப்பட்டவை.பல சமயங்களில் அவரின் கதை மாந்தர்களும், அவர்களின் மன உணர்வுகளும் இந்திய தன்மை வாய்ந்தவையாக,நம் கிராமத்து மனிதர்களை அவர்கள் வாழ்வை எதிர்கொள்வதைப்போல ஒரு அனுபவத்தை தருகிறது. கால,இட வெளிகளை கடந்து மனித ஆன்மாவை தொடும் எல்லா எழுத்துக்கள் எல்லாவற்றிகும் பொதுவான தன்மைகளின் சாரம் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் எழுத்துக்கள். தமிழில் ராதுகா பதிப்பகம் அவரின் அன்னை வயல்,ஜமீலா,குல்சாரி,முதல்ஆசிரியர் போண்ற முக்கிய படைப்புக்கள் அனைத்தையும் மொழிபெயத்து வெளியிட்டு இருக்கிறது. சமீபத்தில் நியு சென்சுரி பதிப்பகம் மறுபதிப்பை கொண்டு வந்திருக்கிறது.




அவரின் எல்லா படைப்புக்களுமே மனதிற்கு நெருக்கமானவைதான் எனினும் முதல் ஆசிரியர் பற்றி எழுத தோண்றுகிறது. மிக சாதாரண தனி மனிதர்களின் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத உழைப்பிலும், எல்லா இடையுறுகளையும் சாமாளிக்கும் அவர்களின் மன உறுதியிலும் சமூகம் வெளிச்சம் பெறுகிறது. அந்த சாதாரண மனிதர்கள்( உண்மையில் ஆனால் அசாதாரண மனிதர்கள்) வெளிச்சம் பெறுவதே இல்லை. அல்லது வெளிச்சத்தின் பகட்டு அவர்களுக்கு பிடிப்பதில்லை. முகமறியா அந்த சாதாரண மனிதர்களின் தாகம் சமூகத்தின் நீறுற்றாக இருக்கிறது!

எங்கோ தொலைவில் இருந்தது குர்கூரெவு கிராமம் அதன் பின் சூழ்ந்திருந்த மலைகளில் இருந்து சலசலத்து ஓடிவரும் ஆறுகள் வந்து கூடும் இடத்தில் இருந்தது அது. அமைதியான பரந்த ஸ்டெப்பி வெளி குர்கூரெவு கிராமத்தின் கீழே விரிந்துக்கிடந்தது. ஒரு இலையுதிற் காலத்தில் அந்த விரிந்த “ மஞ்சள் சமவெளி”யை கடந்து கிராமத்திற்கு வருகிறான் ஒரு இளைஞன். அல்தினாய் உலைமானவ்னாவுக்கு அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. அவள் அப்பொழுது சின்னஞ்சிறு பெண். அரசாங்க உடையணிந்த ஒருவன் கிராமத்திற்கு வந்த்து தெரிந்த உடன் அனேகமாக எல்லோரும் கூடி விட்டார்கள். அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பது யாருக்கும் தெரியவில்லை. பள்ளிக்கூடம்,கல்வி இது பற்றியெல்லாம் தெரிந்திருக்காத அந்த கிராமத்திற்கு ஆசிரியனாய் வந்திருந்தான் அவன் – துய்ஷேன். யாருக்கும் இஷ்டமில்லை. ஒரே கூச்சல்.


“ ஆண்டாண்டு காலமாக விவசாய வேலை செய்து வாழ்கிறோம் ... அது நமக்கு சோறு போடுகிறது. நம் பிள்ளைகளும் இப்படிதான் வாழ்ப்போறாங்க , அவங்களுக்கு படிப்பு என்ன கேடு. அதிகாரிகளுக்குத்தான் கல்வியறிவெல்லாம் வேணும், நாம் சாதரண மக்கள் எங்க தலையை போட்டு உருட்டாதே” எல்லோருமாய் எதிர்க்க துய்ஷேன் மெல்ல ஆனால் உறுதியாக பேசினார். அல்தினாய் உலைமானவ்னாவுக்கு அவர் பேசியது மிகவும் பிடித்திருந்தது.


“ நாம் ஏழைகள் “ மெதுவான குரலில் துய்ஷேன் பேசினார் “ வாழ்க்கை பூராவும் நம்மை மிதித்து தும்சம் செய்தனர் ,கேவலப்படுத்தினர். நாம் இருட்டில் வாழ்ந்தோம். நாம் ஒளியை பார்க்கவேண்டுமென்று, நாம் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆட்சி விரும்புகிறது. அதற்கு நம் குழந்தைகள் படிக்கவேண்டும்....” இது அரசின் ஆணை என அவர் சொல்லவும் பலர் “ ஏதோ செய்” என் ஒதுங்கினர். யாரும் அவருக்கு உதவி செய்ய முன் வரவில்லை. அவர் உறுதியாக இருந்தார்.

கிராமத்தின் குறுக்கே ஓடும் ஆற்றைத்தாண்டி , குன்றில் இருந்த பழைய குதிரை கொட்டடி ஒன்றை தான் அவர் “ பள்ளிக்கூட”மாக தேர்வு செய்தார். ஆற்றின் குறுக்கே குழந்தைகள் கடந்து வர ஒரு பாலம் அமைக்க வேண்டும் அந்த குதிரை கொட்டடியை சுத்தம் செய்து சீர் செய்ய வேண்டும் என் அவர் சொன்னது யார் காதிலும் விழவில்லை. அதல்லாம் நமக்கு சம்பந்தம் இல்லாத விசயமாக அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.


அதன் பிறகு. காலையில் தன்னந்தனியாக அந்த கொட்டடிக்கு சென்றால் சாயங்காலம் திரும்பினார்.பல சமயங்களில் மண்வெட்டி,வாளி,கோடாரி என சுமந்து செல்வதை அவரை அல்தினாய் உலைமானவ் பார்த்தாள். தனி ஆளாய் பள்ளியை தயார் செய்துகொண்டிருந்தார். குளிர் காலத்திற்கு தேவயான கணப்பு அடுப்பு , கீழே அமர வைக்கோலிலான விரிப்பு என அந்த குதிரை லாயம் பள்ளிக்கூடமாக மாறிக்கொண்டிருந்தது. ஒரு முறை மலை முழுக்க அலைந்து பொறுக்கிய சாண மூட்டையை அல்தினாய் உலைமானவ் அவர் அறியாத நேரம் அந்த பள்ளி அருகே கொட்டிவிட்டு வந்தாள் . குளிர் கால கணப்பு அடுப்பிற்கு உதவுமே. ஏதோ அவளால் முடிந்த உதவி.


பள்ளிக்கூடம் தயாரான பின் கிராமத்தில் துய்ஷேன் ஒவ்வோரு வீடாக ஏறி இறங்கி மாணவர்களை சேர்ப்பதில் ஈடுப்பட்டார். அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை அது. யாரும் எளிதில் குழந்தைகளை அனுப்ப ஒர்த்துக்கொள்ளவில்லை. அல்தினாயின் சித்தி ரொம்பவும் எதிர்த்தாள். அப்பா,அம்மா இல்லாத அல்தினாய் சித்தியின் வீட்டில் இருந்தாள். ஆனால் அந்த உறுதியான மனிதர் அல்தினாய் பள்ளிக்கூடம் வருவதை உறுதி செய்தார். தன் வாழ்வையே புரட்டிப்போடப்போகும் தருணம் அது என்பதெல்லாம் அல்தினாய் அப்போது உணர்ந்திருக்கவில்லை.


“ தனக்கே தெரியாமல் அவர் ஒரு வீரச்செயல் புரிந்தார். ஆம் அது ஒரு வீர செயல்தான். ஏனெனில் அந்நாள்களில் தம் கிராமத்தை விட்டு எங்குமே செல்லாத கிர்கீசிய குழந்தைகளுக்கு பள்ளி கூடமாக விளங்கிய மண் கட்டிடம் முன்பின் கேட்டறியாத ஓர் உலகத்தைத் திடீரெனத்திறந்துக்காட்டியது.” பென்சிலை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் என தொடங்கி அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டார் துய்ஷேன். மாதம் ஒரு முறை தலைநகர் சென்று திரும்புவார் துய்ஷேன் அந்த நாட்கள் தான் எவ்வளவு துயரமான நாட்களாக இருந்தது அல்தினாவுக்கு. ரகசியமாய் சித்திக்கு தெரியாமல் வேலி அருகே நின்று நீண்ட நேரம் ஸ்டெப்பி பாதையையே உற்று பார்த்து காத்திருப்பாள் அல்தினாய். எவ்வளவு துயரம் தோய்ந்த கணங்கள் அவை. ஒரு முறை இரவு வெகு நேரம் கடந்தும் அவர் திரும்பவில்லை. ஸ்டெப்பி வெளியில் ஓநாய்களின் ஓலம் அதிகமாக கேட்டது. ஒரு வேளை துய்ஷேனை அவை சூழ்ந்திருக்குமோ. அல்தினாயின் உடல் பயத்தால் நடுங்கியது. நடுநிசி தாண்டி அவர் வந்து சேர்ந்தார். அவரைப்பர்த்தபொழுது அல்தினாய் தேம்பித் தேம்பி அழுதாள். அனேகமாய் யாரும் அவ்வளவு மகிழ்ச்சியை அனுபவித்திருக்கமுடியாது. அவள் துய்ஷேனை கட்டிப்பிடித்து அவர் தோளில் முகம் புதைத்து தேம்பித் தேம்பி அழுதாள் அல்தினாய்.

பனிக்காலம் மறைந்து பனி உருகி விரிந்த சமவெளியிலிருந்து கதகதப்பான காற்று விசியது. அல்தினாயின் இளம் பருவத்து முதல் வசந்தம் அது. அல்தினாயின் சித்தி அவளை மணமுடித்து வைக்க திட்டமிட்டுக்கொண்டிருந்தாள்.” அல்தினாய். நீ பயப்படாதே உனக்கு நான் பொறுப்பு” என்றார் ஆசிரியர். அல்தினாயின் கவனத்தை திசைதிருப்புவதற்காவோ என்னவோ அன்று துய்ஷேன் இரண்டு பாப்ளார் மர கன்றுகளை கொண்டுவந்தார் “ நாம் இந்த கண்றுகளை நடுவோம் இவை பெரிய மரங்க்களாவைப்போல் நீயும் வளர்ந்து பெரிய பென்ணாயிடிவே. நீ ஒர் விஞ்ஞானியாகப்போறன்நு என் மனதுக்கு படுது...” அவர்கள் அந்த பாப்ளார் மர கன்றுகளை பள்ளியருகே நட்டார்கள். அவை மெல்ல காற்றில் ஆடின. “ அன்பான ஆசிரியரே நீங்கள் இப்படி அன்பானவராக இருப்பதற்காக நன்றி. நான் உங்களை கட்டிப்பிடித்து முத்தமிட விரும்புகிறேன்.” என மனதில் சொல்லிக்கொண்டு அவரை கட்டியணைக்க விரும்பினாள் அல்தினாய். ஆனாலும் வெட்கப்பட்டாள்.ஒருவேளை வெட்கத்தை விட்டு சொல்லியிருக்க வேண்டுமோ?


விசயம் அல்தினாயியும், துய்ஷேயும் நினைத்தற்கு மாறாக துரிதமாக நடந்தது ஒரு பகல் நேரம் பள்ளிக்கூட்த்திற்கு சித்தி வருகிறாள் கூடவே குதிரையில் ஒரு புதியவன். முரட்டுதனமாக ஆசிரியரை அடித்து விட்டு அல்தினாயை தூக்கிசெல்கிறான் அவன். ஆசிரியன் சுருண்டு விழ அவரின் “ பரட்டை தலை பெண்” கதறியபடி செல்கிறாள். ஒரு கூடாரத்தில் அடைக்கிறான் ஏற்கனவெ ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் அந்த முரடன். இரண்டு இரவுகள் ஓடுகின்றன. அவன் குழந்தைகளை விட வயதில் குறைந்தவளான அல்தினா அவனிடம் தன்னை இழக்கிறாள். மூன்றாம் நாள் காலை தலையில் கட்டுடன் வந்து சேர்கிறார் துய்ஷேன். அந்த முரட்டு மிருகத்தை தாக்கிவிட்டு அல்தினாயை அழைத்து செல்கிறார்.


“அல்தினாய் என்னை மன்னித்து விடு. என்னால் உன்னை காபாற்ற முடியவில்லை. நீ என்னை மன்னித்தாலும் நான் என்னை மன்னிக்கமாட்டேன்.” என்றார் ஆசிரியர். அல்தினாய் தேம்பி அழுது குதிரையின் பிடரியில் சாய்ந்தாள். துய்ஷேன். அருகில் நின்று அவள் தலையை கோதி விட்டார் அவள் அழுது முடியும் வரை காத்திருந்தார். துய்ஷேன். குதிரையின் கடிவாள கயிற்றை பிடித்த வண்ணம் நடந்தார். “ எந்த காலடிப்பாதை வழியே துய்ஷேனும் நானும் திரும்பினோமோ அப்பாதையை மட்டும் என்னால் கண்டுப்பிடிக்க முடிந்தால் நான் தரையில் முழங்காலிட்டு ஆசிரியரின் காலடி சுவடுகளுக்கு முத்தமிடுவேன். அந்த பாதை என்னைப் பொறுத்த மட்டில் வாழ்க்கைப்பாதை அந்த நாள் அந்த காலடிப்பாதை வாழ்க்கைக்கு புதிய எதிர்பார்ப்புகளுக்கு , வெளிச்சத்திற்கு என்னை இட்டு வந்த வந்த அந்த பாதை நீடுழி வாழட்டும்... அந்த சூரியனுக்கு, அந்த பூமிக்கு நன்றி.....” பின் நாளில் அல்தினாய் இப்படி நினைத்துக்கொண்டாள்.

அதன் பின் இரண்டுநாட்களில் ஆசிரியர் அல்தினாயை நகரத்துக்கு செல்லும் புகை வண்டியில் ஏற்றி விட்டார் நகரத்தில் அவள் படிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஆசிரியர் செய்திருந்தார். “ அழாதே அல்தினாய்” நாம் நட்டு வைத்த பாப்ளார் மரங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் நீ பெரியவளாகி இங்கு வரும் பொழுது அழகான பாப்ளார் மரங்களை நீ பார்ப்பாய்” “ சரி விடை பெறுவோம்: அல்தினாயை கட்டி பிடித்து நெற்ரியில் ஆர்வத்துடன் முத்தமிட்டார். “ அல்தினாய் போய் வா. என் கண்ணே “ என்றார். புகை வண்டி நகர்ந்த்து. அல்தினாய்.... என கத்தினார் ஆசிரியர் ... ஏதோ முக்கியமானதை சொல்ல மறந்து பின் அதை நினைத்துக்கொண்டவரை போல் அதற்கு காலம் கடந்து விட்டது என்று தெரிந்தும் கத்தினார்... இதயத்தின் அடியாழத்திலிருந்து வந்த அந்த கூக்குரல் அவள் காதுகளில் ரீங்காரமிடுகிறது....

அல்தினாயின் வாழ்க்கை முற்ரிலுமாக மாறிவிட்டது. தொடர்ந்து படித்தாள் அவள் கல்லூரியில் படிக்கும் பொழுது ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினாள் அவரை நேசிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும். அதற்கும் அதற்கு பின்னும் ஆசிரியர் கடிதம் எழுதவே இல்லை. அவளின் படிப்பிற்கு இடையூராக இருக்க வேண்டாம் என நினைத்திருக்கலாம். அதன் பின் தன் படிப்பு, ஆய்வு என அல்தினா ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இலையுதிர் காலத்தில் மாஸ்கோவிலிருந்து வேறு ஒர் நகரத்திற்கு போகும் வழியில் தன் கிராமத்து புகை வண்டி நிலையத்தில் இறங்குகிறாள் அல்தினாய். தூரத்தில் குன்றின் மேல் அசைந்தாடுகின்றன இரண்டு பாப்ளார் மரங்கள்.வாழ் நாள் முழுக்க ஆசிரியர் என அழைத்தவரை முதன் முதலாய் பெயர் சொல்லி மனதுக்குள் அழைக்கிறாள்” துய்ஷேன் நீ செய்த எல்லாவற்றிகும் நன்றி.” வண்டியோட்டியிடம் துய்ஷேனைப்பற்றி விசாரிக்கிறாள். துய்ஷேன் ராணுவத்தில் சேர்ந்து விட்தாகக்கூறுகிறான். வண்டியை நிறுத்த சொல்லி இறங்கிக்கொள்கிறாள் அல்தினாய். கிராமத்திற்கு சென்று யாரை பார்க்க?

பாப்ளார் மரங்களின் இலையுதிகால இலைகளின் ஓசையை கேட்டுக்கொண்டு நின்றாள் அல்தினாய். தூரத்தில் புதிய பள்ளியின் வண்ண மேற்கூரை தெரிந்தது.அவள் மெல்ல புகை வண்டி நிலையத்திற்கு சென்றாள். தூரத்தில் இரண்டு பாப்ளார் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

அதன் பின் துய்ஷேனுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. நகரத்திற்கு வந்த அவள் கிராமத்துவாசிகள் அவர் யுத்ததில் தொலைந்து போய்விட்டதாக சொன்னார்கள் இன்னும் சிலர் இறந்துவிட்டதாக சொன்னார்கள். ஆண்டுகள் உருண்டோடின.கடந்த காலம் மறைந்தது,எதிர்காலம் அதற்கே உரித்தான கவலைகளுடன் நிரந்தரமாக அழைத்தது. அல்தினாய் காலம் கடந்து திருமணம் செய்து கொண்டாள். பணி நிமித்தமாய் பல இடங்களுக்கு அழந்தாள். தன் கிராமத்திற்கு மட்டும் செல்லவில்லை. வெகு வருடங்கள் கழித்து அவள் கிராமத்தில் புதிதாய் கட்டியிருக்கும் பள்ளி வளாகத்தை திறந்து வைக்க அழைத்திருந்தார்கள்


கிராமத்தின் புகைவண்டி நிலையத்தில் இறங்கிய பொழுது குன்றின் மேல் அந்த பாப்ளார் மரங்கள் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. பல வருடங்களூக்கு முன்பு துய்ஷேன் தன்னை வழி அனுப்பிவைத்த அதே புகைவண்டி நிலையம். கிராமத்தில் எல்லோரும் அவளை மிகுந்த மகிழ்வுடன் அவளை வரவேற்கின்றனர். புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறாள் அல்தினாய். ஒரு குதிரை லாயத்தில் தொடங்கிய ஒரு சின்னசிறு பள்ளியின் விகாசம் அவள் மனது முழுவதும் நிறைகிறது. துய்ஷேன் என்ற சாதாரண ஒரு மனிதனின் உழைப்பு.கனவு. விழா நடந்துக்கொண்டிருக்கும் பொழுது இடையே ஒருவன் வந்து பழைய மாணவர்களிடமிருந்து வந்த வாழ்த்து தந்திகளை தலைமை ஆசிரியரிடம் கொடுக்கிறான். வெளியே ஒரு முதியவர் இவைகளை தந்து விட்டு தனக்கு வேலைகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டு சென்றதாக கூறுகிறான். இன்னும் உழைத்துக்கொண்டிருக்கும் அந்த முதியவன் துய்ஷேன் என தெரிந்த பொழுது அல்தினாய் தன்னை குற்றவாளியாக உணர்கிறாள். இது துய்ஷேன் அமர வேண்டிய இடமல்லவா? தனக்கு வாழ்வித்த அந்த மனிதனை தான் உயர்ந்த பிறகு சந்திக்காத்து அவள் மனதை வதைக்கிறது. ஒரு வித குற்ற உணர்ச்சியுடன் அங்கிருந்து புறப்படுகிறாள் அல்தினாய்.



“ மலைகளில் ஒரு மாதிரியான நீரோடைகள் உண்டு; புதிய பாதை தோண்றியதும், இவற்றிக்கு இட்டு செல்லும் பாதையை மறந்து விடுவார்கள் அங்கு தண்ணீர் குடிக்க வழிப்போக்கர்கள் அபூர்வமாத்தான் செல்வார்கள். அந்த நீரூற்றுகளைச்சுற்றி புல்லும் புதரும் வளரும் பிறகு வெளியிலிருந்து பார்த்தால் கூட தெரியாது. வெட்கை மிகுந்த நாளில் இதை நினைத்துக்கொண்டு நீரருந்த வருபவர்கள் சிலரே.யாராவது ஒருவர் அந்த உள்ளடங்கிய நீரூற்றைத் தேடிக் கண்டுபிடித்து புல் புதரை அறுத்துப்போட்டு பார்த்தால் மூகின் மேல் விரலை வைப்பார்;நீண்ட காலமாய் யாராலும் கலக்கப்படாத , அசாதாரண தூய்மையுடன் குளிர்ந்த நீர் தன் அமைதியாலும்,ஆழத்தாலும் அவரை வியப்பில் ஆழ்த்தும். அவர் அந்த நீரூற்றில் தன்னையும் சூரியனையும் வானத்தையும் மலைகளையும் காண்பார்......”







Monday, March 1, 2010

ஒரு கவிதை

               வழி


வழியைத் தொலைத்துவிட்டு

வழி தேடிக்கொண்டிருந்தவனை

வழியில் சந்தித்தேன்.

இடது,வலது,வலது,இடது

வலது,இடது,இடது,வலது.

இடது,வலது,இடது,வலது.

வலது,இடது,இடது,இடது

இடது,வலது,இடது,வலது

என்ன செய்ய –

நீ புரிந்துக்கொள்ளும்படியும்-

வழியைத் தொலைத்துவிட்டு

வழி தேடிக்கொண்டிருந்த

என்னை வழியில் நீ

சந்தித்தால்

நான் புரிந்துக்கொள்ளும்படியாகவும்

இல்லை

வழி.




.

Friday, February 26, 2010

கர்ணமோட்சம்.








எந்த ஒரு கலை வடிவமும் கால நீட்சியில் நிகழும் மாற்றத்தின் புழுதியில் தன் சாரத்தை இழந்து தனிமைப்படும்பொழுது அதை சார்ந்து இயங்கும் கலைஞனின் வாழ்வு அவன் அளவிலும் மற்றவர் பார்வையிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வோரு காலகட்டமும் வாழ்வைப்பற்றிய பொதுவான ஒரு பார்வையை அதன் சமூகத்திடமிருந்து உருவாக்கிக்கொள்கிறது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் உய்வும் , எந்த வித நோக்குமற்ற கேளிக்கையும் நம்முடைய “ஊடக காலத்து” வாழ்வியல் பார்வையாக இருக்கும் பிண்ணனியில் ஒரு தெருகூத்து கலைஞனின் வாழ்வை முன் வைக்கிறது முரளி மனோகர் இயக்கிய “ கர்ணமோட்சம்” என்ற குறும்படம். [இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவில் தேசிய விருதை பெற்றகுறும்படம்]





ஒரு பள்ளியில் தன் கர்ணமோட்சம் கூத்தை நிகழ்த்திக்காட்ட இருங்கூர் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் மகனுடன் – அவனுக்கு கிரிக்கெட் மட்டையும்,பந்தும்,வெள்ளை தொப்பியும் கூத்து முடிந்ததும் வரும் பணத்தில் வாங்கிதருவதாக வாக்கு - வருகிறான் கோவிந்தன் என்ற கூத்து கலைஞன். வரும் வழியிலேயே தன்னை கர்ணனாக வேசம்கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் கோவிந்தன் ,பள்ளி தாளளர் இறந்து விட்டதால் பள்ளி விடுமுறை என அறிந்து என்ன செய்வது என்றறியாது நிற்கிறான். பள்ளியின் தலைமை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு திரும்பி செல்லக்கூட பணமில்லாத நிலையை கூற தலைமையாசிரியர் தான் வெளியே இருப்பதாகவும் சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் உதவுவதாகவும் கூறுகிறார். கோவிந்தனுக்கு வேறு வழியில்லை. காத்திருப்பதை தவிர. பசியோடிருக்கும் தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிகொடுத்துவிட்டு தண்னீர் குடித்து பசியாறுகிறார் “கர்ணன்”. அந்த தேநீர் கடையில் வேலை செய்யும் ஊமை சிறுமிக்கு கர்ணனின் பசி தெரிந்திருக்கவேண்டும். தெரு பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருக்கும் “கர்ணனு”க்கு சாப்பிட கொடுக்கிறாள் அவள். கையேந்தி பெற்றுக்கொள்கிறார் “ கர்ணன்”





அவரைப்பற்றி அவள் கேட்க கோவிந்தனுக்கு உற்சாகமாகிவிடுகிறது –அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு ஜீவனாவது இருக்கிறதே! – தான் அவள் வயதில் செஞ்சி துரைசாமி தஞ்சிரானிடம் கூத்து கற்றுக்கொண்டதையும். தான் கூத்தில் கர்ணன் வேசம் கட்டுவதையும் தான் பாட ஆரம்பித்தால் விடிய விடிய ஊரு சனம் மொத்தமும் கேட்கும் என் கூறிக்கொண்டே வ்ருபவர்“இப்பொழுதெல்லாம் யார் இருக்கா இதல்லாம் பார்க்க எல்லாத்தையும் டி.வி பொட்டி இழுத்துக்குச்சே” என்கிறார் ஏக்கத்துடன். ஒரு உற்சாகத்துடன் அந்த ஊமை பெண்ணிற்கு கூத்தை கற்றுக்கொடுக்க தொடங்குகிறார்.தன் குருவிற்கு வணக்கம் தெரிவித்து. அந்த சமயம் அங்கு வரும் தேநீர் கடைகாரன் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடித்து அவளை இழுத்துச்செல்லும் பொழுது .“நாலு இட்லி வாங்க காசில்லாமல் தெரு தெருவாக சுத்துகினு இருக்கிற இதுல இவளுக்கு கூத்து கத்து குடுக்க போரியா போய்யா ஒ வேலய பாத்துக்கிட்டு” என கூறி “கர்ணனை” கிட்டதட்ட ஒரு பிச்சைகாரனாகவே ஆக்கிவிட்டுப்போகிறான்.

மிகவும் வேதனையுடன் அங்கிருந்து நடந்து செல்லும் கோவிந்தனை ஓடி வந்து வழி மறைக்கிறாள் அந்த ஊமை சிறுமி. கர்ணன் அவளையே பாக்கிறார். அவள் தன் கைகளை நீட்டி அவருக்கு ஏதோ கொடுக்கிறாள். கர்ணன் அதை கை நீட்டி வாங்குகிறார் கோவிந்தன். ஒரு ரூபாய் நாணயம். குரு தட்சணை. அவள் தன் குருவிற்கு குரு வந்தனம் செய்து ஓடுகிறாள். கோவிந்தன் அவளைப்பார்த்த வண்ணம் நிற்கிறார். இருக்கலாம் அந்த நிமிடம் கோவிந்தன் -கர்ணன்- மனம் மோட்சம் அடைந்திருக்கலாம். மெல்ல நடந்து போகும் கோவிந்தன் எதிர்படும் பள்ளி சிறுவர்களிடம் “ நான் கர்ண மஹாராஜா” என கூறி தன் கிரீடத்தை கழட்டி குடுத்துவிட்டு போகிறார். கிரீடம் தன் தன்மையை இழந்து அந்த சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாகிபோகிறது. அது அவருக்கும் இந்த சூழலுக்கு பொருந்தா விசயமாக பட்டிருக்கவேண்டும்.


அடுத்த தலைமுறையின் ரசனையும் அவர்களது உலகமும் கோவிந்தனுக்கு புரிவதில்லை. அடுத்த தலைமுறை தன் வாழ்வோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் விசயங்களிலிருந்து உருவாகப்போகும் மலினமான வாழ்வியல் பார்வை நம் கண்முன்னே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிதர்சனம். கோவிந்தன் மகன் கையில் ஒரு பொம்மை செல்போன் கிடைக்கிறது. அதை “அதிஷ்டம்” என சந்தோஷப்படும் அவன், முதலாய் தொடர்புகொள்வது சச்சின் டெண்டுல்கரை. பின் அவன் “பெப்ஸி” உமாவை தொடர்புகொண்டு பேசுகிறான் “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.......விஜய் படத்திலேந்து பாட்டுப்போடுங்க” கிரிகெட்,சினிமா இவற்றை ஆதர்சனமாகக்கொண்டு கேளிக்கையும் அந்த நேர சந்தோஷத்தை மட்டும் பிரதானமாய் கொள்ளும் தட்டையான தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் உழன்று கிடக்கும் அடுத்த தலைமுறைக்கும் கோவிந்தனின் கலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிறப்பமுடியாத பெருவெளி. (மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)




இரண்டாவது கிளாஸ் தண்ணீர் கேட்ட கோவிந்தனை விரட்டுகிறான் தேநீர் கடைக்காரன். அவனுக்கு வாழ்க்கை பணம் சார்ந்தது உறவுகள்,நிகழ்வுகள் எதையுமே பண வடிவாய் புரிந்துக்கொள்பவன். அவனைப்பொருத்தவரை அந்த கூத்துக்காரன் “இடத்தை அடைத்துக்கொண்டு “ வியாபாரத்தை கெடுக்கும் இடையூறு. கோவிந்தனால் நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் அவனால் கோவிந்தனையும், அவன் கூத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும்.அப்படி இல்லாத பட்சத்தில் எந்த கலைவடிவமும், கலைஞனும் அவன் வாழ்க்கைக்கு தேவையில்லாத வஸ்துக்கள். நம் காலத்து மனசாட்சியாக இருக்கிறான் அவன்.


தானும் தன் கலையும் கால மாற்றத்தில் தனிமைப்பட்டு போவதும், உறவுகளின் எதிர்பார்புகளை நிறைவேற்றமுடியாதசரிவும், தன்கென்றிருந்த வெளி இல்லாமல் போகும்பொழுது ஏற்படும் சூன்யமும் “ கர்ணமோட்சம்” முழுவதும் நிறைகிறது. பொருளாதாரம்,அர்த்தமற்ற வெற்று கேளிக்கை சார்ந்து இயங்கும் நம் கால சூழலில் பொருத்திக்கொள்ளமுடியாமல் திணரும் எந்த கலைக்கும்,கலைஞனுக்கும் பொருந்தும் “ கர்ணமோட்சம்”




கர்ணமோட்சம் குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர். பிறந்தது கும்பகோணம். படித்த்து ,வளர்ந்தது திண்டிவனம்.தமிழ்நாடு திரைப்படகல்லுரியில் இயக்குனர் பட்டய படிப்பு. இவரது மற்ற குறும்படம்” அக்காலம்” ஜெமினி ஸ்டியோ கேண்டீனில் வேலைப்பார்த்த ஏ.என்.எஸ்.மனியனைப்பற்றிய,அவர் நினைவுகள்பற்றிய ஆவணப்படம். கர்ணமோட்சம் தமிழ்நாடு அரசின் விருதையும் இந்த வருடம் மத்திய அரசின் விருதையும் பெற்றது. தற்சமயம் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் முரளி மனோகருக்கு தமிழ் வலை பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.



கர்ண மோட்சம்:

தயாரிப்பு : எம்.ஜீ.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

இயக்கம் : முரளி மனோகர்

கதை,உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்.

இசை : இரா,பிரபாகர்

நடிப்பு : ஜார்ஜ்,யுவராஜ்,கலியமூர்த்தி,பூர்ணிமா,சண்முகம்.


சுட்டிகள்:


YOUTUBE: கர்ணமோட்சம் பகுதி:ஒன்று

YOUTUBE:கர்ணமோட்சம் பகுதி :இரண்டு





.

Thursday, February 18, 2010

ரெயினீஸ் ஐயர் தெரு

என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் : 1

ரெயினீஸ் ஐயர் தெரு



வண்ணநிலவன் எழுதிய ரெயினீஸ் ஐயர் தெரு. என்பதுகளில் கணையாழி மூலமாக சுஜாதா,பாலகுமாரனைத் தாண்டி தமிழில் வேறுவகை எழுத்து இருப்பதை நான் அறியத்தொடங்கிய காலம். அது மாதிரியான எழுத்துக்களை தஞ்சாவூர் மைய நூலகத்தில் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு நாள் என் கையில் கிடைத்த சின்ன புத்தகம். ரெயினீஸ் ஐயர் தெரு. “இதை படிப்பவன் முட்டாள்” என முதல் பக்கத்தில் யாரோ கிறுக்கிவைத்திருந்தார்கள். அந்த நாவலை நான் படித்து முடித்த சாயங்கால வேளை இன்னும் என் நினைவில். மனதளவில் திடீரென நான் மிகவும் முதிர்வு கொண்டவனாகவும், பெரிய மனிதனைப்போலவும் நடந்துக்கொண்டேன், சாம்சஸன் அண்ணனை எஸ்தர் சித்தியோடு தவறான நேரத்தில் பார்த்து விட்ட மூன்றாவது வீட்டு அற்புதமேரியைப்போல.

அந்த நிகழ்விற்கு பிறகு அற்புதமேரி எப்போதையும் விட அண்ணனிடமும்,எஸ்தர் சித்தியிடமும் மிகுந்த பிரியத்துடன் நடந்துக்கொண்டாள்.வகுப்பில் கூட பெரிய முதிர்ந்த பெண்னைப்போல நடந்துக்கொண்டாள். எஸ்தர் சித்தி எப்போதும் போல அளவற்ற ஆனந்தத்தையும் அமைதியையும் ஊரிலிருந்து கொண்டுவந்து காட்டிவிட்டு எடுத்துக்கொண்டுப்போனாள். எஸ்தர் சித்தியின் ப்ரியம் எல்லா கசடுகளையும் தூர வீசி புது மணலை தெருவுக்குள் வாரி இறைக்கும் மழைப்போல இருக்கும். ரெய்னீஸ் ஐயர் தெருவில் முதல் வீட்டு டாரதிக்கும், அவள் எதிர் வீட்டு இருதயம் டீச்சருக்கும் மழையில் நனைய பிடிக்கும். ஆனால் இருதயம் டீச்சர் பெரியவளாகவும், ஆசிரியையாகவும் இருக்கும் பொழுது எப்படி மழையில் நனையமுடியும்?

இருதயம் டீச்சருக்கு எப்பொழுதும் வீட்டைப்பற்றிய நினைவுதான்.தன்னுடைய வீடு அலங்கோலமாக இறைந்துகிடக்க தன் புருஷனும்,மாமியாரும் ஊரிலேயே மிக மோசமான அழுக்கு உடைகளை உடுத்திக்கொண்டு திரிவது போலவோரு தவிப்பு எங்கேபோனாலும் கூடவே இருக்கும் கோழிகள் வேறு வீடு முழுக்க இருந்து வைக்கும். இருளும்,அழுக்குமான இந்த வீட்டில் இருதயம் டீச்சரின் புருஷன் சேசய்யாவின் இருமல் சப்தம் தொடர்ந்துக்கேட்கும். நெஞ்சு எலும்பெல்லாம் மூச்சு முட்டிப்போய் நொறுங்கி விழுவது போல குலுங்கி இரும்முவான். நேரம் ஆக ஆக தெருவே இடிந்து விழுவது போல அவனுடைய சப்தம் கூடிக்கொண்டே போகும். அவன் அம்மாவிற்கு இதெல்லாம் பழகிப்போய்விட்டது. இருதயம் தான் தன் காரியங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வருவாள் அவனுடைய நெஞ்சை தடவிக் கொடுப்பாள். தன் தோளில் அவனை சாற்றியவாறே நட்த்திக்கொண்டுபோய் கட்டிலில் படுக்கவைப்பாள். அவள் சேலையில் கண்ணீர் துளிகள் தெரிக்கும். அவன் அழுகிறான் போல. இருதயம் டீச்சர் அவன் முகத்தை தூக்கிபார்ப்பாள். சவரம் செய்யாத அவன்முகத்தை கைகளில் ஏந்திய படியே சேலைத்தலைப்பை இழுத்து கண்ணகளை துடைத்து விடுவாள் அவனை அந்த நேரத்தில் தன் பிரியமான ஆண்குழந்தையாகவே நினைத்தாள். வெகு நேரம் வரை தோளில் சாற்றியபடியே கட்டில் விளிம்பிள் உட்கார்ந்திருந்தாள். எதிர் வீட்டு டாரதி முன் வாசலில் தெரு நடைக்கல்லில் தெருமுனையை பார்த்தமாதிரி உட்கார்ந்திருந்தாள்.

தெரு முனையில் இருதயம் டீச்சர் வீட்டு பெட்டைகோழிகுஞ்சுகள் இரண்டு இரை பொறுக்கிக்கொண்டிருந்தன. டாரதிக்கு அந்த கோழி குஞ்சுகள் அப்படி மேய்ந்துக்கொண்டிருப்பது ஏனோ டாரதிக்கு மிகுந்த துயரத்தை தந்தது. அந்த கோழிகுஞ்சுகள் தன்னந்தனியே அனாதரவாகத் தங்கள் வாழ்நாளை கழித்து வரும் படி ஆனது போல தோண்றியது.சிறு வயதில் தாயை இழந்து பெரியம்மா வீட்டில் வளரும் அவளுக்கு பிறந்த கொஞ்சம் நாட்களிலேயே தாயைப்பிரிந்து தனியே இரை பொறுக்கித்திரியும் கோழிகுஞ்சுகளை பார்க்க துயரமாக இருக்கிறது. துயரமானமான இந்த வாழ்வின் ஊடே அவளின் தருணங்களை சந்தோஷமாக்கவும் அர்த்த படுத்திக்கொள்ளவும் சில மனிதர்களால், அவர்களின் பிரியத்தால் வாய்கிறது. எபன் அண்ணனின் நினைப்பும்,அருகாமையும் டாரதிக்கு சந்தோஷம் தருபவை.எபன் அண்ணனின் “ ரெயினீஸ் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்” என்ற கவிதை ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த பொழுது டாரதிக்குதான் எவ்வளவு சந்தோஷம். தெருவில் எல்லா வீடுகளுக்கும் அலைந்து அதை சந்தோஷமும் பெருமையும் பொங்க படித்துக்காட்டி வந்தாள் அவள். சிறு வயதில் அம்மாவை சாக்கொடுத்து அப்பாவால் அடுத்த வீட்டில் வளர விட்டப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த அன்பையும் இரக்கத்தையும் விட பெரிது ஒன்றும் இல்லை. இதையெல்லாம் அவள் எபன் அண்ணன் மூலமாக அவள் பெற்றுக்கொண்டாள். எபன் அண்ணனின் அன்பு மட்டும் இல்லையென்றால் டாரதி என்ன செய்ய முடியும்? தியோடர் அண்ணன் போல துயரங்களை மறக்க குடித்துவிட்டு கிடக்கமுடியுமா என்ன அதுவும் ஒரு பாதிரியார் வீட்டு பெண்!

அற்புத மேரியின் வீட்டிற்கு எதிர் வீடுதான் தியோடர் அண்ணனின் வீடு. அன்னமேரி டீச்சரின் பையன். அன்னமேரி டீச்சர் சேலையை தொடைக்கு மேலே திரைத்துக்கட்டிக்கொண்டு வீட்டுக்குள் நடமாடிக்கொண்டிருப்பாள் பக்கத்து வீட்டு சேசையா தொடர்ந்து இருமும்பொழுதெல்லாம் ரோட்டிற்கு வந்து இருதயம் டீச்சரிடம் கவலைப்பட்டு திரும்பும்பொழுதெல்லாம் அற்புத மேரியின் கண்கள் எதிவீட்டைப் பார்க்கும். ஜன்னலுக்குளேயிருந்து சாம்சனின் முகம் தெரியும். அவன் இவளையே பார்த்துக்கொண்டிருப்பான். அன்னமேரி தியோடரை கவனிப்பதே இல்லை அவளின் மருமகள் எலிசபெத் இறந்ததிலிருந்தே தியோடர் குடிப்பதும் திண்ணையில் கிடப்பதும் ரெய்னீஸ் ஐயர் தெருவில் சகஜமான விசயமாகிவிட்து. யாரும் தியோடரை மதிப்பதில்லை. எபனுக்கு தியோடரை , அவன் அன்பை புரிந்துக்கொள்ளமுடியும். நாலாவது வீட்டு கிழ தம்பதிகள் ஆசீர்வாதம்-ரெபேக்காள் இவர்களுக்கும் தியோடரை பிடிக்கும்.



ஒவ்வொரு மழைக்கும் ஆசீர்வாத்த்தின் வீடு இடிந்தும் சிதிலமாகிக்கொண்டும் இருந்தது. அவர்கள் மகன் அனுப்பும் மணியாடரை கொண்டு வரும் தபால்காரனைத்தவிர யாரும் அவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. ஒரு மழையில் கிழவிக்கு காயம் பட தியோடர் தான் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றான். வெறும் அடுப்பங்கரையில் ஒடுங்கி வாழ்ந்த அந்த தம்பதிகளுக்கு ஒரு மழையில் ரெய்னீஸ் ஐயர் தெருவில் யாராலும் மதிக்ப்படாத தியோடர் இடிபாடுகளில் இருந்து சாமான்களை மாற்றிக்கொடுத்து அவர்களை பார்த்துக்கொள்கிறான்.




“ரெய்னீஸ் ஐயர் தெரு” வாசிகள் யாரும் முழுமையானவர்கள் இல்லை. மனித வாழ்வின் எல்லா குரூரங்களும் , சுயநலன்ங்களும், மன வக்கிரங்க்களும், பலவீனங்களும் கொண்டவர்கள்தான். மீளமுடியா துயரங்களையும், அவலங்களையும் சோகங்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது அவர்கள் வாழ்வு. இதையும் மீறி எதோ அவர்களை வாழ்வின் மீது, சக மனிதர்கள் மீது பிடிப்பை கொடுத்து அவர்கள் வாழ்வை நகர்த்துகிறது. சக மனிதர்கள் மீதான பிரியம், இந்த பலவீனங்கள் ஊடேயும், துயரங்கள் ஊடேயும் நிறைந்து ஓடிக்கொண்டே இருக்கிறபோது எல்லா அவலங்களும்,துயரங்களும், மன மாச்சரியங்களும் கானாமற்போகும் மாய நிகழ்வை ரெய்னீஸ் ஐயர் தெரு” வாசிகளின் வாழ்வின் வழியே நிகழ்த்திக்காட்டுகிறது நாவல். கதையம்சம் இல்லாத ஆனால் கதை மாந்தர்களின் மனவோடை வழியாக பயணிக்கும் நாவல் நம் மனதை வந்தடைகிறது



நாவல் இப்படி முடிகிறது .

எல்லாவற்றையும் உய்விக்கிற மழைதான் “ரெய்னீஸ் ஐயர் தெரு”வை பெருமைப்படுத்துகிறது. டாரதி நினைத்தபடியே அன்று மழை வந்தது. மழையில் ரெய்னீஸ் ஐயர் தெரு”வைப்பார்க்க அழகாக இருந்தது. தெருவின் அமைதியில் மழை மேலும் பிரகாசமெய்தியது.மழை தெருவுக்கு புது மணலை கொண்டு வரும். எதிர்த வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டு கோழிகள் தங்களுடைய எளிய அலகுகளால் மண்ணை கிளறுகிற சந்தோஷத்தையும் மழைதான் தருகிறது. மழை எப்பொழுதும் நல்லதே செய்யும் என்பதை ரெய்னீஸ் ஐயர் தெருகாரர்கள் நம்பினார்கள். இருதயத்து டீச்சர் இந்த மழைக்கு பிறகு சேசய்யா திடீரென ஆச்சரியப்படத்தக்க விதமாய் குணமடைந்து விடுவானென்று நம்பினாள் அன்னமேரி டீச்சர் ஓட்டிலிருந்து இறங்கி வரும் தண்ணீரை பிடிக்கிறதுகாக வரிசையாக பாத்திரங்களை மழையில் நனைந்துக்கொண்டே வைத்தாள்.சாம்ஸனுக்கும் மழையை வேடிக்கை பார்க்க மனம் இருந்தது. டாரதி, தாத்தாவின் கால்மாட்டில்கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டாள், மழையைப்பார்க்க.


ஆசிர்வாதம் பிள்ளையின் மனைவி ரெபேக்காள் மழை தண்ணீர் வீட்டுக்குள் வந்து விடாதபடி பழைய சாக்குத்துண்டுள் இரண்டை எடுத்து வாசல் நடையில் போட்டாள். மழையைப்பார்த்துக்கொண்டிருக்கும் போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத்தோண்றுவார்கள் மழையின் போது.







வண்ணநிலவன்:




1948ல் பிறந்த வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். துக்ளக் பத்திரிகை யில் சில காலம் பணியாற்றிய வண்ண நிலவன், தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்” திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவரது "கடல்புரத்தில்" நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல். இவரது ”கம்பா நதி” நாவல் தமிழக அரசின் பரிசை பெற்றது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள். மெய்பொருள்,காலம் இவைகள் இவரது கவிதை தொகுப்புகள்  தமிழ் நாவல்களில் மிகவும் தனித்துவமான ”ரெயினீஸ் ஐயர் தெரு” 1981ல் வெளிவந்தது. இந்த நாவலின் சமீபத்திய பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.





 

Saturday, January 30, 2010

காந்தியை நான் கொல்லவில்லை.




------------------------------------------------------------------------------------------
Maine Gandhi Ko Nahin Mara

அஸ்ஸாமி இயக்குனர் JahnuBarua வின் முதல் ஹிந்திப்படம்.

அனுபம் கேர் தயாரிப்பு

ஜப்பானில் Kodak Vision Award பெற்றப்படம்
------------------------------------------------------------------------------------------


                                                  வகுப்பறையிக்குள் வேகமாக நுழையும் பேராசிரியர் உத்தம் சொளத்ரி ராமனைக் கடவுளாக இல்லாமல் மனிதனாகப்பார்க்கும் ஹிந்தி கவிதை ஒன்றை பற்றி பேசிக்கொண்டே போகிறார். வகுப்பில் சலசலப்பு. மாணவர்கள் முகத்தில் குழப்பம்.திடீரென நிறுத்திவிட்டு “ இது ஹிந்தி கவிதை வகுப்பு தானே? “ என்கிறார் உத்தம் சொளத்ரி. “இது மூன்றாம் ஆண்டு வேதியியல்” என்கிறாள் ஒருத்தி. உத்தம் சொளத்ரிக்கு ஒரு மாதிரியாகிவிடுகிறது.  மெல்ல வருத்தம் தெரிவித்து விட்டு வெளியேறுகிறார்.கொஞ்சம் நாட்களாகவே அவருக்கு வியசங்கள் மறந்து விடுகின்றன.அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதுகூட அவருக்கு அவ்வப்போது மறந்துதான் போய்விடுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்க்கும் அவரின் மகள் திரிஷா அவரை புரிந்துக்கொள்கிறாள்.அவர் தடுமாறும்பொழுதொல்லாம் அவரை தாங்குகிறாள் காலை வேளை ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டே தன் மனைவியை அழைக்கும் அவரைப்பார்த்து குழம்பும் வேலைக்காரியை அனுப்பிவிட்டு அவள் தான் அவருக்கு பொறுமையாக தன் அம்மா ஒன்னறை ஆண்டுகளுக்கு முன்பே இறந்ததை சொல்ல வேண்டியிருந்த்து. அவளின் காதலனின் சிபாரிசின் பேரில் ஒரு மனோத்துவ மருத்துவரிடம் அவரை அழைத்துச்செல்கிறாள். அவர் இது பெரிது படுத்த வேண்டிய விசயமில்லை வயயோகத்தில் எல்லோருக்கும் வருவதுதான் என் கூறி மருந்துகளை எழுதிதருகிறார். ஆனால் அவளுக்கு திருப்தி இல்லை



                                                             மிக சமீபமாய் நிகழ்ந்த விசயங்கள் கூட அவருக்கு மறந்து விடுகிறது. தன் தோழி ஒருவரின் அம்மாவின் பிறந்த நாள் பரிசாக உத்தம் சொளத்ரி எழுதிய புத்தகம் ஒன்றில் அவரது கையெழுத்து போட்டுக்கேட்கிறான் அவரது கல்லூரியில் படிக்கும் மகன். தோழியின் அம்மாவின் பெயரை கேட்டு விட்டு எழுத போகும் சமயம் அவருக்கு மறந்து விடுகிறது. தடுமாறி குழம்புகிறார். தன் நிலை உணரும்பொழுது சோர்வடைந்து மெல்ல தன் அறைக்கு செல்கிறார். அக்காவும் தம்பியும் அனுதாபத்தோடு பார்க்கிறார்கள்.

                                                           அக்காவின் திருமணத்திற்கு பிறகு தான் அப்பாவை எப்படி கையாளுவது என மருளும் தம்பி ஒரு சாயங்காலம் தன் மனதில் உள்ளதை கூறுகிறான். திரிஷாவை பெண்பார்க்க அவள் காதலன் தன் அம்மா,அப்பாவுடன் வருவதாக இருக்கும் நாளுக்கு முந்தைய இரவு. இந்த பெண்பார்க்கும் படலத்தை வெளியே எங்காவது வைத்துக்கொள் என்கிறான் தம்பி. அப்பா ஏதாவது ஏடாகூடமாக செய்தால் அது உன்னை பாதிக்கும் என்கிறான்.திரிஷா ஒன்னும் நடக்காது பயப்படாதே என்கிறாள். தயங்கி,தயங்கி பேசும் அவன் திரிஷாவின் திருமணத்திற்கு பிறகு அப்பாவை ஏதாவது மனநல காப்பகத்தில் சேர்த்துவிடலாமா? என் கேட்கிறான். மிகவும் கோபம் கொள்ளும் திரிஷா அவனை திட்டி அனுப்புவிடுகிறாள்.

மறுநாள் அவன் பயந்த்து போலவே ஆகிவிடுகிறது. காதலனின் அப்பா தன் சிகரெட்டையும்,லைட்டரையும்,தனக்கு வழங்கப்பட்ட தேனீரையும் தன் முன் இருந்த தேனீர் மேஜையில்  வைக்கிறார், சரியாக அங்கிருந்த செய்திதாளில் வெளிவந்திருந்த காந்தியின் முகத்தின் அருகில். உத்தம் சொளத்ரியின் முகத்தில் டென்ஷன். தான் சிகரெட் பிடிக்கலாமா என கேட்டுவிட்டு பிடிக்கிறார் காதலனின் அப்பா. உத்தம் கைகளை பிசைகிறார். திரிஷா அப்பா எப்பொழுதும் பாடும் கவிதையை அவர்களுக்காக பாடிக்காண்பிக்க சொல்கிறாள். அவர் வார்த்தைகள் மறந்து தடுமாறுகிறார் தலை முடியை விரல்களால் சுற்றிக்கொண்டு தடுமாறும்.அவரின் செய்கைகள் அவர்களுக்கு


வித்தியாசமாக இருக்கிறது. அதே சமயம் சாம்பல் கிண்ணத்தை தேடியெடுக்கும் காதலனின் அப்பா மிகச்சரியாக அதை காந்தியின் முகத்தில் வைத்து சாம்பலை தட்டுகிறார். உத்தம் அடக்கமுடியாத தன் கோபத்தை கொட்டுகிறார்.காதலனின் அப்பா மன்னிப்புக்கோரியும் அவர் விடவில்லை.இது சாதாரண பேப்பர் தானே என்றவரிடம். இது அடையாளம். ஒரு வாழ்க்கை நிலையின்,தத்துவத்தின் அடையாளம் என கோபத்துடன் கத்துகிறார் உத்தம். சூழ்நிலை இனக்கமற்றதாகிவிடுகிறது. திரிஷா அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறாள். இது பரம்பரையாக வரும் வியாதியா என திரிஷாவிடம் கேட்கிறார் காதலனின் அப்பா. அவர்கள் கிளம்புகிறார்கள்

பின் நாட்களில் நிலமை இன்னும் மோசமாகிறது. ஒரு நாள் பரபரப்பான நகரின் சந்தடிக்கிடையே பழைய பேப்பர்களை சுமந்துக்கொண்டு வரும் அப்பாவை வீட்டிற்கு அழைத்து வருகிறாள் திரிஷா. மற்றோரு நாள் தன் மகனை நீ யார் என் கேட்கிறார். தன் வீட்டை இது சிறைசாலை என்கிறார். சாப்பாட்டை சாப்பிட மறுக்கிறார் அதில் ஜெயிலர் விஷம் வைத்திருப்பதாக கூறுகிறார்.ஓர் இரவு அவர் அறையிலிருந்து புகை மண்டலம். திரிஷாவும் தம்பியும் கதவை திறக்க சொல்லியும் திறக்க மறுக்க பால்கனி வழியாக குதித்து உள் நுழையும் அவர்கள் காண்பது எரியும் பழைய பேப்பர்கள். உத்தம்மை தேடும் அவர்கள் அவரை கட்டுலுக்கடியில் ஒளிந்துக்கொண்டிருக்கும் அவர் “ நான் காந்தியை கொல்லவில்லை ... நான் காந்தியை கொல்லவில்லை என் அரற்றுகிறார். அவர் குரல் நடுங்குகிறது
என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் திரிஷாவிற்கு அறிமுகமாகும் ஒரு மனநல மருத்துவரின் அனுகுமுறை நம்பிக்கை கொடுக்கிறது. சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு சம்பவத்தினால் ஏற்ப்பட்ட மனஅழுத்தத்தின் விளைவே இந்த மறதியும் அவரது பிறழ்ந்த செயல்பாடுகளும் எனவும் Pseudo-Dementia என்ற மனநிலை பிறழ்வு நிலையின் கூறுகள் அவரிடம் இருப்பதாகவும் கூறுகிறார். தான் காந்தியை கொன்றுவிடதாகவும் அதற்காக சிறையில் இருப்பதாகவும் ஒரு மாய உலகத்தில் அவர் வாழ்வதாக கூறுகிறார் மனநல மருத்துவர்    அவருக்கும் காந்தியின் கொலைக்குமான தொடர்பை கண்டறிய உத்தம் சொளத்ரியின் பால்ய கால நண்பர் Gattuவைப்பார்க்க டில்லிக்கு செல்கின்றனர்ள் திரிஷாவும் , மனநல மருத்துவரும்.


சிறுவயதில் அவர்கள் விளையாண்ட ஒரு விளையாட்டைப்பற்றி சொல்கிறார் Gattu. பலூன் நிறைய சிகப்பு மையை நிரப்பி ஒர் படத்தின் மீது தொங்கவிட்டு , தங்கள் கண்களை கட்டிக்கொண்டு வில்லைக்கொண்டு அந்த பலூனை உடைப்பது. அந்த சிகப்பு மை சிதறி அந்த உருவப்படத்தில் முழுவதுமாக தெறிக்கும் அதாவது அந்த ஆள் கொலைசெய்யப்படுவான். இந்த விளையாட்டை உத்தம் சுற்று வந்தபொழுது கண்களை கட்டிக்கொண்டு நிற்கும் பொழுது ஒரு சிறுவன் புதிதாக ஒரு படத்தை மாட்டிவிட, உத்தம் அம்பை எய்கிறான். ஒரே ஆரவாரம். சிகப்பு மை அந்த ஆளின் உடல் முழுக்க சிதறுகிறது. அந்த உருவப்படம் காந்தியுடையது. அன்று 30 ஜனவரி 1948

சிறுவர்களின் ஆரவாரத்திற்கு இடையே அங்கு வரும் உத்தமின் அப்பா இதைப்பார்க்கிறார்.தீவிர காந்தி தொண்டரான அவருக்கு ஆத்திரம். தன் மகனை அடிக்கிறார். அன்று சாயங்காலம் காந்தி கொலை செய்யப்பட்ட சேதி கிடைத்த பொழுது அவருக்கு தன் மகன் ஒரு கெட்ட சக்தியாக தோண்றுகிறது. அதன் பின் அவர் இறக்கும் வரை அவர் உத்தமின் முகத்தை பார்க்கவே இல்லை. இதன் பாதிப்பு உத்தமை தீவிரமான மனசிக்கலுகு உள்ளாக்குகிறது. காந்தியை தான்தான் கொலைசெய்ததாக நம்ப தொடங்கி ஒரு மாயலோகத்தில் உழழும் அவரது மனது குற்ற உணர்வுக்கும் மன பிறழ்வுக்கும் ஆளாகிறது.

உத்தமை இந்த மனபிறழ்விலிருந்து மீட்க அந்த மன நல மருத்துவர் நாடகத்தன்மை வாய்ந்த ஒரு பரிசோதனையை செய்கிறார். சினிமா துணை நடிகர்களைக்கொண்டு ஒரு நீதிமன்ற காட்சியை அறங்கேற்றுகிறார் அதன் மூலம் உத்தம் குற்றமற்றவர் அவர் உபயோகப்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி எனவும் அதைகொண்டு ஒரு மனிதனை கொல்லமுடியாதெனவும் நிரூபிக்கப்படுகிறது. உத்தம் குற்றமற்றவர் என நீதிபதி தீர்ப்பளிக்கிறார். நீங்கள் ஏதாவது கூற வேண்டுமா என நீதிபதி கேட்டவும் உத்தம் பேசுகிறார்,


உத்தம் தன் மன பிறழ்விலிருந்து வெளியே வந்துவிட்டாரா அந்த மன்நல மருத்துவரின் பரிசோதனை வெற்றி பெற்றுவிட்டதா என் தெரிந்துக்கொள்ள எல்லோரும் ஆர்வமாக அவரை கவனிக்கிறார்கள்.......

உத்தம் மெல்ல பேசுகிறார்.“ நான் தான் காந்தியை கொலைசெய்தேன்.” பெரிய அமைதி மொத்த நீதிமன்றமும் அவரைப்பார்க்கிறது..அவர் தொடர்கிறார்....

“........இல்லை நான் மட்டுமல்ல நீங்கள், நாம் எல்லோரும் காந்தியை கொலை செய்தோம் தினம் தினம் கொல்கிறோம். காந்தியை எலா இட்த்திலும் வைத்தோம் அலுவலகம்,நீதிமன்றம்,நாணயம்,பணம்,...எல்லா இட்த்திலும் மனத்தில் மட்டும் இல்லை.நாம் தான் கொலை செய்தோம்.” உத்தம் மெல்ல திரிஷாவை அழைக்கிறார் அவள் உத்தம்மை அணைத்தவாறு வெளியே கூட்டிச்செல்கிறாள். கடல்லை ஓரமாக அவர்கள் செல்கிறாகள் அவருக்கு பிடித்தமான ஹிந்தி கவிதை ஒலிக்கிறது ..