Thursday, November 26, 2009

நான்கு கவிதைகள்

                     1


இறைந்துக்கிடப்பவை

என்னுடையதல்ல,

உலுக்கி விழவைக்கலாம்தான்

என்னுடையதாகாது அதுவும்.

பாவை விளக்கின்

சாயலில் இமைமூடி

மோனத்தில் நிற்கையில்

கை ஏந்தலில்

விழக்கூடும்-

ஒரு புஷ்பம்

காலையின் தூய்மையுடன்-

எனக்காக.

 
 
 
                         2
 
 
வீடு திரும்பாத மேய்ப்பன்



தேடியலைந்து

மந்தையில் சேர்த்து

எண்ணுகையில்

குறையும்

மீண்டும் ஒரு ஆடு.

அவன்

வீடு திரும்பவே இல்லை.




                          3

விளம்பரம் பார்த்தேன்

நீ

தொலைந்து போய்விட்டதாக

இப்போதாவது

கண்டுபிடித்தார்களே






              4


   பிள்ளையார்


யாரும் இல்லை

வேணிற்கால வெக்கையும்

வெடித்த குளத்தையும் தவிர்த்து.

எப்போதாவது எட்டிப்பார்க்கும்

காக்கையும் கூட

காணம் இன்று

உறவுகள் அற்றவெளியில்-

விழுந்த அரச இலைகளை

எண்ணிக்கொண்டு

கழியும் பொழுது.




.

Thursday, November 19, 2009

இரண்டு கவிதைகள்

கவிதை : ஒன்று

எனக்குப் பிடிக்கும்

இரை தேடும் பல்லியின் லாவகம்.

முன்னிரு கால் பின்வாங்கி

பின்னிரு கால் முன்வாங்கி

சாதுவாய் பதுங்கி ஒரு முன்னேறல்

இறையின் நிழல் திட்டில் ஒதுங்கி

சூட்சம நேரத்திற்காய் ஒரு தவம்.

என்னிரு இமைகள் சொடுக்கும்

காலவெளியில் ஒரு

பாய்ச்சல்.

நாவின் சுளீர். வயிற்றுக்குள் இரை.








கவிதை : இரண்டு


பழைய நண்பர்கள்



நேற்றோ முன்தினமோ

நினைவில்லை

வெறுமையான தெருவின்

நடுவே அவனைப் பார்த்தேன்

கீரை துளிர்கள்

எட்டிப்பார்க்கும் மஞ்சள்பை சகிதமாய்.

சௌக்கியமா என்றேன்

தலையசைத்தான்.

கதவடைத்த வீடுகளின் அமைதி

தெருவை நிறைத்தது.

நல்ல வெய்யில்.

எங்கோ காகம் ஒன்று கரைந்தது.

அரிசி பையை கை மாற்றிக்கொண்டேன்.

கடந்து போன யாரோ ஒருவன்

எங்களை பார்த்துப் போனான்.

இவன் என் தோள்தாண்டி

எங்கோ பார்த்தான்.

வரட்டுமா என்றேன்.

சரி என்றான்.


.

Thursday, November 12, 2009

ஒரு குழந்தையின் மனக்குகை ஓவியம். - 400 உதைகள்

புரிந்துக்கொள்ள மிகவும் கடினமானதும் பலசமயங்களில் புரிந்து கொள்ளப்படாமலே வாழ்வின் சந்தடிகளில் மறைந்து போவதுமாக இருக்கிறது குழந்தைகளின் அக உலகம். ஏதேதோ அக/புற காரணங்களால் தன்னை சுற்றி உள்ள உறவுகளோடு தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் குழந்தைகள் ஒரு நேரத்தில் யாருமற்ற வெளியை உணரத்தொடங்குகிறார்கள். புற உலகோடு அந்நியப்படும் அந்த குழந்தைகள் தங்களுக்கான உலகை தாங்களே சிருஷ்டிக்க தொடங்கும் பொழுது அவர்களை சுற்றியுள்ள உலகத்தோடு எழும் முரண்பாடுகளின் அழுதத்ததில் அவர்கள் வாழ்க்கை சிதிலமடைய தொடங்குகிறது. பிரெஞ்ச் சினிமாவின் “புதிய அலை சினிமா”க்களில் ஒன்றான ஃப்ரான்ஸ்வா ட்ரூஃப்போ (François Roland Truffaut)வின் 400 உதைகள் (Les Quatre cents Coups-(1959)) அப்படியோரு வாழ்வை முன் வைக்கிறது.


பாரிஸில் ஒரு அடுக்கு மாடியில் குடியிருப்பில் இருந்த அந்த சிறிய வீடு பொளதீக ரீதியாக மட்டுமல்லால் மனம் சார்ந்தும் மிக இறுக்கமாக இருந்தது 14 வயது Antoine Doinelக்கு. கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்தியதர வர்க்க சூழல். அலுவலம் தரும் அலுப்பு,எரிசலோடு வீடு திரும்பும் அம்மா,அப்பா (தாயின் இரண்டாம் கணவர்) இருவருக்குமே 14 வயது Antoine Doinelயிடம் பேசுவதற்கு அதிகம் ஒன்றும் இல்லை.Antoine Doinel எதிர்கொள்வதெல்லாம் எரிச்சல் மிகுந்த மறுமொழிகள். மனம் திறந்து பேசுவதற்கோ,இயல்பான வேடிக்கையான பேச்சிக்களூக்கோ இடமில்லாத இறுக்கமான இடமாக இருக்கிறது வீடு. “அவனை இந்த கோடைக்காலத்தில் என்ன செய்வது?” என விவாதிக்கிறார் அப்பா. “ஏதாவது கோடை முகாமிற்கு அனுப்ப வேண்டும்” என் தீர்மானமாகிறது. தான் ஒரு வேண்டப்படாத ஜீவனாக உணர்வதற்கு பல சந்தர்ப்ங்கள் அமைகிறது Antoine Doinelக்கு. தன் திருமணத்திற்கு முன்பே உருவான கருவை அழிக்க தன் அம்மா நினைத்தது அவனுக்கு தற்செயலாக தெரிய வருகிறது. அவன் யாருக்கும் தேவையில்லாதவனாக அவன் உணர்வதாக அவன் மொழியாக இயக்குனர் சொல்லவில்லை ஆனால் பார்வையாளர்கள் உணர்கிறோம். திரைக்கதை அமைவில் பெரிய சவாலான இந்த விசயத்தை மிக எளிதாக கடக்கிறார் ஃப்ரான்ஸ்வா ட்ரூஃப்போ.



Antoine Doinel எதிர்கொள்ளும் மற்றொரு உலகம் அவன் பள்ளி. குழந்தைகளின் இயல்பான சின்ன,சின்ன குறும்புகளை கூட குற்றமாக பார்த்து தலைகுனிவுக்கு உள்ளாகும் தண்டனைகளை தரும் இயந்திரதனமான ஆசிரியர்கள் பள்ளியை அவனிட மிருந்து அந்நியபடுத்துகின்றனர். குழந்தைகளின் படைப்பாற்றலை, கற்பனை திறனை விகாசப்டுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம். தங்கள் வாழ்வில் நடந்த முக்கியாமான நிகழ்வை பற்றி எழுத சொல்கிறார் ஆசிரியர், உற்சாகமடையும் Antoine Doinel தன் தாத்தா இறந்த நாளின் நினைவுகளை எழுதுகிறான். பால்ஸாக்கின் (Balzac) சொற்களை அப்படியே தன் கட்டுரையில் பயன்படுத்தி எழுதுகிறான் Antoine Doinel. அந்த சிறுவயதில் பால்ஸாக்கின் செறிவான இலக்கியத்தை தேடிப்போன அவனுக்கு அவன் ஆசிரியரிடமிருந்து கிடைக்கும் வெகுமானம் “ பிறர் எழுத்துக்களை களவாடும் திருடன்” (plagiarist) என்ற வன்சொல்தான்.

தான் யாருக்கும் முக்கியத்துவம் இலாதவன் என்ற உணர்வும்,தன்னுடைய நியாயமான செயல்களுக்குகூட கிடைக்கும் அவமானங்களும் அழைத்து போகும் உளவியல் சுழலுக்குள் செல்கிறான் Antoine Doinel. தன் மனநெருக்கடிக்கு காரணமான அமைப்பின் மீது நேரடியாக தன் கோபத்தை வெளிபடுத்த முடியாத ஆளுமை தன் பிறழ்ந்த செயல்பாடுகள் மூலமாக தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளத்தலைபடும். Antoine Doinel பள்ளி நேரத்தில் சினிமா செல்கிறான்,புகை பிடிக்க கற்றுக்கொள்கிறான். சரளமாக பொய் சொல்கிறான்( ஒரு முறை ப்ள்ளிக்கு வராதற்கு காரணமாக “தன் அம்மா இறந்துவிட்டதாக” கூறுகிறான்) , மது அருந்துகிறான்., திருடுகிறான்.

தன் தந்தையின் அலுவகத்திலிருந்து அவன் தட்டச்சு இயந்திரத்தை திருடும் பொழுது மாட்டிக்கொள்ளும் Antoine Doinel. அவன் தந்தையாலேயே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறான்.அங்கிருந்து தப்பித்து ஓடி அவன் அதற்கு முன் எப்பொழுதுமே பார்த்திராத ஒரு கடற்கரையில் அவன் ஓடி வருவதோடு படம் முடிகிறது.ஆனால் நம் மன ஓட்டம் அங்கிருந்து தொடங்குகிறது. Antoine Doinel வாழ்க்கை சிதிலமடைந்ததற்கான காரணங்களை நம் மனது தேட தொடங்குகிறது. குழந்தைகள் பற்றிய நம் கண்னோட்டத்தை யோசிக்க வைக்கிறது. எல்லா சிறந்த படைப்புகளும் எல்லாவற்றையும் தானே பேசிவிடுவதிலை வாசகன் அல்லது பார்வையாளன் தன் அனுபவம் சார்ந்து,தன் வாழ்க்கை தரிசனம் சார்ந்து அதை புரிந்துக்கொள்ளவும் , பொருள் கொள்ளவும் ஒரு வெளியை அது விட்டுச்செல்கிறது , 400 உதைகள் போல.




புதிய அலை சினிமா பற்றி ஒரு பின்குறிப்பு


ஒரு நாயகன் (மிக நல்லவன்), அவனுக்குநேர் எதிராக ஒரு வில்லன் (மிககெட்டவன்) என வறையறுக்கப்பட்ட கதா பாத்திரங்ககள் இருவருக் குமிடையே ஒரு சிக்கல் , நாயகனின் அதீத சாகசங்கள் முடிவில் நாயகனுக்கு வெற்றி. வசனங்களூக்கு முக்கியத்துவம், செயற்கையான காட்சியமைப்புக்கள், போன்ற அலுப்புதட்டக்கூடிய ஒரே சூத்திரத்திற்குள் அடைப்பட்டு கிடந்த சினிமாவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புது திக்கில் பிரயாணித்தது புதிய அலை சினிமா.

சினிமா வேறு வாழ்க்கை வேறு சினிமா கதாபாத்திரங்களுக்கு நிகழ்பவை நம் வாழ்வில் நிகழாது என்ற பார்வையாளனின் மனோபாவத்தை உடைத்தது புதிய அலை சினிமா. திரையில் நிகழ்பவையோடு தன்னையும் தன் வாழ்வையும் பொருத்திப்பார்க்க வைத்தன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்பங்கள் முக்கியத்தும் பெற்றன. கேமராவை ஒரே இடத்தில் வைத்து கதாபாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்காமல் கேமரா நகரத்தொடங்கியது. கதாபாத்திரங்களுடன் சூழழும் முக்கியத்தும் அடைந்தது

1950 களின் பின் பகுதியில் பிரான்சில் தோன்றிய இந்த அலை இத்தாலிய Neorealists, சில Hollywood இயக்குனர்களின் திரைக்கதை உத்தி மற்றும் ஆந்றரே பாஸின் போன்ற கலை விமர்சகர்களின் பாதிப்பில் உருவானது. அதன் முன்னோடி இயக்குனர்கள் : Jean-LucGodard, François Truffaut, Éric Rohmer, Claude Chabrol மற்றும் சிலர். இவர்கள் “படைப்பாளி கோட்பாட்”டை(AUTHOR’S THEORY) யை முன் வைத்து இயங்கினர். 400உதைகள் ஃப்ரான்ஸ்வா ட்ரூஃப்போ முதல் படம். படத்தின் பல விசயங்கள்  ட்ரூஃப்போவின் வாழ்வில் நடந்தவை( ட்ரூஃப்போ அவர் அம்மாவிற்கு திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை, ட்ரூஃப்போ தன் தந்தையின் அலுவல தட்டச்சு இயந்திரத்தை திருடும் பொழுது மாட்டிக்கொண்டவர், அதற்காக சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பபட்டவர்)



ஒரு நாயகன் (மிக நல்லவன்), அவனுக்குநேர் எதிராக ஒரு வில்லன் (மிககெட்டவன்) என வறையறுக்கப்பட்ட கதா பாத்திரங்ககள் இருவருக் குமிடையே ஒரு சிக்கல் , நாயகனின் அதீத சாகசங்கள். முடிவில் நாயகனுக்கு வெற்றி. வசனங்களூக்கு முக்கியத்துவம், செயற்கையான காட்சியமைப்புக்கள், போன்ற அலுப்புதட்டக்கூடிய ஒரே சூத்திரத்திற்குள் இன்னும் அடைப்பட்டு கிடக்கும் தமிழ் சினிமா 400 உதைகள் வெளிவந்த 1959ல் என்ன மாதிரியான படங்களை எடுத்துக்கொண்டிருந்தது? என பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது........


1959ல் தமிழ் சினிமா:




===========================================================

"குட் ப்ளாக்" க்காக தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி"





========================================================

Thursday, November 5, 2009

நான்கு கவிதைகள்


  • கவிதை ஒன்று




ஓடிக்கொண்டிருந்தது நதி.
கரையில் அமர்ந்திருந்தேன்.
வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ
நதியின் சுழல், ஆழம், குளிர்மை
எனப் பேசிக்கொண்டே போனாய்.
ஓடிக்கொண்டிருந்தது நதி.
கேட்டுக்கொண்டிருந்தேன்
ஒரு முடவனைப் போல.
ஏதோ ஒரு தருணத்தில்
உன் தலை சிலுப்பில்
பூ தூறலாய் விழுந்தது
நதி என் மேலும்.
நீந்த முடியாத நதி.



  • கவிதை இரண்டு


அம்மா
காத்திருப்பாள்
அப்பாவிற்காக.

மிடறு தண்ணீரும்
கவளம் சோறும்
இறங்காது.
தகிக்கும் வெயிலில்.
வெறிச்சோடிய தெருவும்.
ஆண்டணா கம்பிகளும் -
ஒதிய மரமும்
மெளனமாய்
அம்மாவைப் பார்த்துக் கிடக்கும்
அம்மா காத்திருப்பாள்
அரவமற்ற வெளியில்
ஏதோ ஒரு தேவகணத்தில்
மலரும்
கருஞ்சிறகுகள்
அம்மாவின் மனங்குளிர.




  • கவிதை மூன்று


விரிந்த வானம்.
யாரோ இறைத்துபோன
தானிய மணிகள்போல
இறைந்து கிடக்கும் நட்சத்திரம் -
முற்றம் வழி
கூடம் நிறைக்கும் நிலவு
என்பதாய் இருந்தது
அப்பாவின் இரவுகள்
எனக்குக் கிடைத்தது
துண்டு வானம் -
மூட்டம் இல்லாத நாளில்
இரண்டொரு நட்சத்திரம்
சாளரம் வழியே
கொஞ்சம் நிலவு.
உன் வீடுதான் காரணமென்றாலும்
நீயும் சொல்லக்கூடும்
என் வீடு
உன் வானத்தை மறைப்பதை.



  • கவிதை நான்கு



மிகவும் அழகானது
நீ உடைத்தப் பூஞ்ஜாடி
ஒரு பிரயாணத்தின் நினைவாக
அது இருந்தது
என் மேஜையில்.
உன் முகம் வீங்க
அறைய வேண்டும் போலிருக்கிறது
இருந்தாலும்-
அது உடைந்துதான் போய்விட்டது.

.