ஒன்று
ஏதோ இருக்கிறதென்றுதான்
போய் கொண்டிருக்கிறோம்
மின்னல் வெட்டின் ஷணமேனும்
அது புரிபடலாமென்று
நாம் கடந்த பாதையை
அடையாளம் காட்டும்
உறித்து விழுந்த
வெங்காய அடுக்குகள்.
இரண்டு
பிரதிபலிப்பு
மகிழம் பூப்போல
உறுத்தாமல் முகத்தில் விழும்
குளிர் மழைச்சாரல்.
ஜன்னல் கம்பிகளுக்குப்பின்
எட்டிப்பார்க்கும் அணில் குஞ்சு
கால் மேல் கால் போட்டு
மோனத்தில் சிரிக்கும் குழந்தை
அகல் விளக்கின் மெல்லிய
தீஞ்சுடர்
இவைகள் எனக்கு உன்னை
ஞாபகப்படுத்துவது போல
நீ எனக்கு இவைகளை.
மூன்று
பின்புறத்தில் ஒரு
கற்பகவிருட்சம்
அதன் நிழல்திட்டில்
ஒரு காமதேனு
பால் கறக்க
அமுதசுரபி
இவையன்றி
பிரிதொன்றும் வேண்டாம்
பராபரமே
.
Wednesday, December 30, 2009
Friday, December 11, 2009
மரணத்தின் கண்கள் வழியாக ஒரு தரிசனம்
குட் ப்ளாக்காக தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி
***************************************************************
“இவை சினிமா வரலாற்றின் ஒளிரும் தருணங்கள். அவருடைய சினிமாவைப்பார்க்கும் பொழுது என் உணர்வுகளை வார்த்தைகளால் விளக்க முடிவதிலை சத்யஜித்ரே மறைந்தபொழுது என் மனம் மிக சோர்வடைந்தது. ஆனால் நான் இவருடைய சினிமாவை பார்த்த பொழுது ரேயின் இடத்தை நிரப்புவதற்கு சரியான மனிதனை நமக்கு கொடுத்தற்காக கடவுளுக்கு நன்றி
தெரிவித்தேன்” அகிரா குரஸேவா இப்படி சொல்வது ஈரானிய இயக்குனர் Abbas Kiarostami பற்றியும் அவரது திரைப்படங்களைப்பற்றியும். மிகவும் இறுக்கமான தணிக்கை விதிமுறைகளை கொண்ட ஈரானின் அமைப்பிற்குள் இருந்துக்கொண்டு , ஈரானிய தணிக்கை விதிகளுக்கு உட்பட்டும் அதே சமயம், உலக பார்வையாளர்களை தன் படைப்பின் வசம் ஈர்த்துக்கொண்டும் மிக கடினமான பாதையில் பயணித்தார் Abbas Kiarostami. 1979 ஆம் ஆண்டு
நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின் அவரின் பல திரை சகாக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று விட்ட பின்பும் Kiarostami ஈரானினேயே தங்கிவிட்டார். ஈரானை விட்டு சென்றால் தன் சாரத்தை தான் இழந்துவிடுவேன் என்ற Abbas Kiarostami, The Bread and Alley (1970), என்ற 12 நிமிட குறும்படத்தோடு தன் திரைபட-இயக்குனர் வாழ்வை தொடங்கினார். 1997 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் அவருக்கு Golden Palm விருதை வாங்கிதந்த திரைப்படம் Taste of Cherry.
மரணம் எப்பொழுதுமே வாழ்க்கையை யோசிக்கவைக்கிறது. மரணத்தை முன்னிருத்தி யோசிக்கும் பொழுது வாழ்வின் அர்த்தம் அல்லது அர்த்தமின்மை அவரவர் இயல்புக்கேற்ப வெளிப்படுகிறது. வாழ்க்கையின் பல கண்ணாமூச்சி விளையாட்டு புதிர்களை மிக எளிதாக கட்டவிழ்த்து விடுகிறது மரணம். Abbas Kiarostami யின் Taste of Cherry. மரணத்தின் கண்கள் வழியே வாழ்க்கையை தரிசிக்கிறது.
நடுதர வயதுடைய Mr. Badii தன் காரை மிக மெதுவாக டெஹரான் வீதிகளில் ஓட்டிக்கொண்டே யாரையோ தேடுகிறார். வேலைக்கு ஆள் வேண்டுமா என கேட்கும் கூலி தொழிலாளிகளிடம் பதிலேதும் பேசாமல் இன்னதென்று
இனம்கண்டுபிடிக்க முடியாத ஒரு முக இறுக்கத்துடன் தன் காரை ஓட்டிசெல்கிறார்.மெல்ல நகரத்தை விட்டு வெளியே வரும் அவர் கண்கள் யாரையோ தேடிய வண்ணமிருக்கிறது. மிகவும் புழுதி படந்த மலைப்பாங்கான மண் சாலைகளில் பயணிக்கிறது கார். ஒரு பொது தொலைபேசியகத்தில் பேசிக்கொண்டிருக்கும் ஒருவனின் பேச்சை காரை நிறுத்தி கேட்கிறார். அவன் இவரை பார்த்து கத்தியவுடன் நகர்கிறார். குப்பை பொறுக்கும் ஒருவனை வழியில் பார்க்கிறார். ஒரு நாளைக்கு குப்பையில் என்ன கிடைக்கும் ,அவன் ஊர் எது , அவனுடைய சம்பாத்தியம் போதுமானதாக இருக்கிறதா என நிதானமாய் கேட்டு தெரிந்துக்கொண்டு அதிகமாக சம்பளம் தருகிறேன் என்னுடன் வருகிறாயா? என கேட்கிறார் அவன் மறுக்க இவர் மீண்டும் வற்புறுத்தி கேட்கிறார். அவன் மறுத்து சென்றுவிடுகிறான். இவர் முகத்தில் ஏமாற்றம்.தன் பயணத்தை தொடர்கிறார்.
கார் மெல்ல செல்கிறது. வழியில் ஒரு இளம் வயது ராணுவ வீரன் லிஃப்ட் கேட்க Badii எங்கு அவன் செல்வதாக கேட்டு அவனை தன் காரில் ஏற்றிக்கொள்கிறார். நீண்ட நடையின் விளைவாய் களைத்தவனாக காணப்படும் அவன் காரில் ஏறிக்கொள்கிறான். Badii மெல்ல பேச்சுக்கொடுக்கிறார் அவர்கள் உரையாடளின் வழியாக நமக்கு சில விசயங்கள் நமக்கு புரிபடுகிறது குர்தூஸ் பகுதியை சேர்ந்த அவன் ஒன்பது பேர் உடைய பெரிய குடும்பத்தை சார்ந்தவன். பணத்தேவை அவனுக்குகிருந்தது. ஆறு மாதம் ஒரு ராணுவ வீரன் பெறக்கூடிய சம்பளத்தை பத்து நிமிடத்தில் பெற்றுதரக்கூடிய வேலை இருக்கிறது செய்கிறாயா? என் கேட்கிறார் Badii. அவன் மெளமாக இருக்கிறான். கொஞ்சம் தயக்கத்திற்கு பின் என்ன வேலை என அவன் கேட்ட, வேலையை பற்றி என்ன சம்பளம் தானே முக்கியம் என்கிறார் Badii.அவன் முகத்தில் யோசனை கொஞ்சம் கலவரம் கூட, ஒரு தவறான ஆளிடம் மாட்டிக்கொண்டோமோ என. அப்போது தான் கவனிக்கிறான் கார் நகரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை. உங்க்ளுக்கு என்ன வேண்டும்? என்னை இறக்கிவிடுங்கள் என கொஞ்சம் கோபத்தோடு அவன் கூற Badii உன்னை மீண்டும் உன் இடத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் என்கிறார். கார் ஓர் இடத்தில் நிற்கிறது. Badii காரிலிருந்து இறங்க, அவன் காரிலேயே அமர்ந்திருக்கிறான். “இறங்கி வந்து இந்த குழியை பார்.” என்கிறார் அவன் பேசாமல் இருக்கிறான்.
“ நாளை காலை 6 மணிக்கு இந்த இடத்திற்கு வா. என் பெயரை இரண்டு முறை கூப்பிடு நான் பதில் சொன்னால் எனக்கு கை கொடுத்து இந்த குழியிலிருந்து தூக்கிவிடு...... ஒரு வேளை ..... பதில் வரவில்லை என்றால் ....” Badii நிறுத்தி விட்டு அவனைப்பார்கிறார். அவன் எங்கோ பார்க்கிறான் மண்னை எடுத்து என்னை மூடி விட்டு காரில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள். எனக்காக இந்த உதவியை செய்வாயா? என்கிறார் அவன் “ நான் எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ள விரும்பவிலை. என்னை மீண்டும் என் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்” என மறுக்கிறான். Badii மீண்டும் மீண்டும் தன் கொளரவமான மரணத்திற்கு உதவ கெஞ்ச ,ஒரு நிலையில் காரைவிட்டு மண் இறக்கத்தில் இறங்கி ஓடிவிடுகிறான் அவன். Badii சோர்ந்து போகிறார். மீண்டும் தொடங்குகிறது அவரது மரணத்திற்கு கொளரவம் கொடுக்க உதவும் ஆள் தேடும் படலம்.
ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்து டெஹரானில் படிக்கும் ஒரு மாணவனை ஒரு இயங்காத சிமெண்ட் தொழிற்சாலை அருகே பார்த்து அவனை
தன்னுடன் ஒரு காற்றோட்டமான பயணத்திற்கு அழைக்கிறார் Badii. வழக்கம் போல அவனது பின் புலத்தை அறிந்துக்கொள்கிறார். “ இந்த வாழ்க்கை கடவுள் அளித்தது என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்குமென நம்புகிறேன். அவர் அளித்த வாழ்வை முடிந்து விட்டது என் அவர் தீர்மானிக்கும் தருணத்தில் திரும்ப பெற்றுக்கொண்டு விடுகிறார் .... ஆனால் முழுவதும் உறிஞ்சி எடுக்கப்பட்டு சக்கையாக உணரும் மனிதன் கடவுள் செயல்புரியும் வரை காத்திருக்கமுடியாது அவன் தானாக செயல்பட்டாக வேண்டும் இலையா? “ காரை ஓட்டிக் கொண்டே Badii பேசுவதை அந்த மனிதன் மொளனமாக கேட்கிறான். எனவே தான் தற்கொலை செய்துகொள்ளபோவதாக சொல்கிறார் Badii.
தற்கொலை இஸ்லாமியத்திற்கு எதிரானது. அது பாவசெயல் என்கிறான் அந்த இளைஞன். “ சந்தோஷமில்லாமல் இருப்பதும் பாவசெயல் தானே? நாம் சந்தோஷமில்லாமல் இருக்கும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் எல்லோரையும் வேதனைபடவைக் கிறோம். மற்றவர்களை மனதை வேதனை படுத்துவது பாவமில்லையா? மனிதன் துன்பப்படுவதை கடவுள் விரும்புவாரா? அதனால்தான் இந்த சலுகையை அவர் அளித்திருக்கிறார் “ என வாதாடும் Badii அவர் தோண்டி வைத்திருக்கும் குழிக்கு அந்த இளைஞனை அழைத்து வருகிறார். “இன்று இரவு என்னிடம் உள்ள அனைத்து தூக்கமாத்திரையையும் சாப்பிட்டு விட்டு இங்கு வந்து விடுவேன் உறங்க.” என கூறி அந்த இளைஞன் நாளை அதிகாலை வந்து என்ன செய்ய வேண்டும் என கூறுகிறார். “ மற்றவர்களை கொல்வது நம்மை நாமே கொல்வது இரண்டிற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவிலை இரண்டும் ஒன்றுதான் “ என கூறி தன் இடத்தில் இறங்கி கொள்கிறான் அவன்.
கடைசியாய் அவர் சந்திப்பது ஒரு அருங்காட்சியக ஊழியரை. அவரின் மகனின் வைத்திய செலவுக்காக அவருக்கு பணம் தேவைப்படுகிறது. Badii யின் வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டாலும் அவர் தன் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்கிறார். ஒரு காலத்தில் குடும்ப சுமைகளினால் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளான அவர் ஒரு நாள் அதிகாலை வீட்டை விட்டு புறப்படுகிறார். தற்கொலை செய்து கொள்ள.
இன்னும் விடியவிலை. ஒரு செர்ரி மர கிலையில் கயிறை கட்டுவதற்காக தூக்கி போட்டு முயற்சிக்கிறார். முடியவிலை பின் மரத்தின் மீது ஏறி கயிறை கட்ட முயலும் பொழுது, ஒரு செர்ரி பழத்தை எடுத்து சுவைக்கிறார். காலை மெல்ல புலர்கிறது. அவர் நாவில் முழுவதும் படரும் செர்ரியின் சுவையும், ஸூர்யோதயமும் அவருக்கு இனம் புரியாத சந்தோஷத்தை தருகின்றன. வாழ்க்கை தன் விஸ்வரூபத்தை ஒரு சில கணப்பொழுதுகளில் வெளிப்படுத்தும் மாயாஜாலத்தை அந்த கணம் அவருக்கு நிகழ்த்தியிருக்கவேண்டும். அவர் மரத்தில் இருப்பதை பார்க்கும் அவ்வழியே போகும் பள்ளி குழந்தைகளுக்கு பழங்களை பறித்து போடுகிறார்.குழந்தைகளின் முகம் மலர்கிறது. இவர் மனம் இலகுவாகிறது .கீழிறங்கி வீடு செல்கிறார். வாழ்க்கையின் சுவை சின்ன,சின்ன விசயங்களில் பொதிந்துகிடக்கிறது. என கூறும் அவர் Badii தன் முடியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார். பிரச்சனைகளுக்கு தீர்வு “இது” ஆகாது. என்கிறார். Badiiயின் பிரச்சனை என்னவென்று கேட்க திரைபடத்தின் வேறு எங்கும் சொல்லாததது போலவே அவரிடமும் Badii சொல்லாமல் விடுகிறார். Badii பிடிவாதமாக இருக்க அவருக்கு உதவுவதாக கூறுகிறார் அருங்காட்சியக ஊழியர்.
வீடு திரும்பும் Badii அன்று இரவு தன் அறையிலிருந்து கிளம்புகி றார்.அவர் அறையில் நடமாடு வது நமக்கு நிழலுருவமாக காட்டப்படுகிறது. அவர்
தூக்க மாத்திரை சாப்பிட்டாரா ..எவ்வளவு சாப்பிட்டார் என்பது நமக்கு தெரிவதில்லை. காரில் கிளம்பும் Badii தன் குழிக்கு வந்து சேருகிறார்.மெல்ல குழிக்குள் இறங்கி அமர்கிறார். நிலவின் ஒளி அவர் முகத்தில் படர்கிறது. காய்ந்த சருகுகள் சில அவர்மேல் விழுகிறது.கருந்திரளான மேகக்கூட்டம் நிலவை மறைக்கிறது. Badiiயின் முகத்திலிருந்து ஒளி விலகி இருள் படர்கிறது.
Badii யார் அவர் பிண்ணனி என்ன அவர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் மறுநாள் காலை அந்த அருங்காட்சியக ஊழியர் வந்தாரா அவரின் குரலுக்கு Badiiயிடமிருந்து பதில் வந்ததா என்ற கேள்விகளுக்கு Abbas Kiarostami பதில் சொல்லவில்லை. அந்த கேள்விகளுக்கான பதிலை அவர் நம்மிடம் கேட்கிறார். நம் பதிலிருந்து விரியக்கூடும் வாழ்க்கை , சக மனிதர்கள் பற்றி நம் பார்வை, நம் தத்துவம்.
Subscribe to:
Posts (Atom)