Friday, May 14, 2010

சிறகுகள் துளிர்ந்தக் காலம்.பதின் வயது நினைவுகள் தொடர் பதிவுக்கு அழைத்த கமலேஷ்க்கு நன்றி


நேற்று சாயங்காலம் நடந்ததுப் போல இருக்கிறது. ஆயிற்று 20-22 வருடங்கள்.ரயில் பிரயாணத்தின் போது ஜன்னலுக்கு வெளியே மாறும் காட்சிகள் போல எல்லாம் மாறிவிட்டது. பள்ளியின் இறுதி ஆண்டுகள்,கல்லூரி நாட்கள். பாட புத்தகங்களைவிட புதினங்களையும், கவிதைகளையும் அதிகம் படித்த தினங்கள். என் சாயங்கால பொழுதுகள் நந்தகோபாலுடன் கழியும். நானும் நந்தகோபாலும் மெல்ல நடப்போம். புதுஆற்று கரையிலிருந்த அவர்கள் வீட்டில் என் சைக்கிளைப்போட்டுவிட்டு மெல்ல நடப்போம். சாயங்கால மார்கெட் தாண் டும் பொழுது வெய்யில் சாயும். என்னைப்போலவே அவனுக்கும் அதிர்ந்து பேச வராது. சாயங்கால மார்கெட்டில் ரோட்டோரம் கீரை விற்கும் ஒரு பாட்டி நந்தகோபாலுக்கு தோழி. ஒரு வாஞ்சையான விசாரிப்பும் கோ பாலின் சிரிப்பும் நான் தினமும் எதிர்பார்த்து கிடக்கும் தருணம். அதிர்ந்து பேசாமல் அந்த பாட்டிக்கு பதிலளிப்பான் கோபால். அவளைப்பார்க்க OSHINஐ பார்ப்பது போல இருக்கிறதல்லவா? என்பான் கோபால் . OSHIN தனியார் தொலைக்காட்சிகளின் தொந்தரவு இல்லாத எளிமையான அந்த நாட்களில் தூர்தர்ஷனில் வந்துக்கொண்டிருந்த ஒரு ஜப்பானிய தொடர். எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான தொடர் அது. உண்மைதான் அந்த முதியவளின் முகம் OSHINஐ நினைவூட்டுவதா கத்தான் இருக்கும் . வாழ்க்கையின் சகல துன்பங்களையும் அதன் போக் கில் ஏற்று கடந்து வந்த அனுபவத்தால் கனிந்த முகம். போஸ்டாபீஸ் தாண்டி ரயில் நிலையம் கடப்போம்.ரயில்நிலையம் அருகே SUPER தேனீர் கடையில் ஒரு தேனீர் அல்லது ஒர் Maltova! . அங்கு போடப்படும் புது பட பாடல்களுக்கென்றே ஒரு கூட்டம் அங்கு வரும். MP3 PLAYER களும், I-POD-களும், Mobile Phone களும் தங்களின் அசுரத்தனமான இருப்பை வெளிப்படுத்திக்கொள்ளாத நிலையில் SUPER தேனீர்கடைக்கு ஒரு மவுசு இருந்தது.ஒரு படத்தின் பாடல்கள் முடியும் வரை கூட்டம் நிற்கும். நாங்களும் ஒரு படத்தின் பாடலுக்கா நின்றிருக்கிறோம். அது - பூவேபூச்சுடவா. சில சமயம் அதற்காக இரண்டு தேனிர் பருக வேண்டியிருக்கும். தேனீரின் கதகதப்போடு மெல்ல ரயில் நிலையம் ஒட்டிய பாதையில் இருப்புப்பாதையை ஒட்டி நடக்கத்தொடங்குவோம். அந்த இருப்புப்பாதைகளுக்கு எங்களின் வருகை மிகவும் பழகிப்போன விசயமாக இருந்திருக்கவேண்டும். எங்களுக்கு அவைகளைப்பார்க்கும் பொழுதெல்லாம் ஷங்கன்னா (இப்போதைய எஸ்.ராமகிருஷ்ணன்) கணையாழியில் எழுதியிருந்த “பழைய தண்டவாளம்” என்ற சிறுகதை நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாத வியமாகவே இருந்த்து. அந்த கதையில் வரும் சூழல் போலவே இருந்த்து தஞ்சாவூர் ரயில் நிலைய சூழலும். “பழைய தண்டவாளம்”த்தி வந்த நடராஜனையும் ,கல்யா ணியக்காவையும் கூட நாங்கள் பார்த்தோம்! மெல்ல இருளத்தொடங்கும் அந்தியில் நாங்கள் ரயில்வே டிராக்கை ஒட்டி நடப்போம். ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி பேச்சு வாழ்வின் பல கிளைகள் வழியே ஓடும். அந்த மாத கணையாழில் வந்த “கிளிக்காலம்” பற்றியோ “மேபல்” பற்றியோ ( மேபலை ஜே.மங்கயர்கரசி என்ற பெண் எழுதிருந்தார். தஞ்சாவூர் பிண்ணனியில். நாங்கள் அந்த எழுத்தாளினியை கண்டுப்பிடிக்க ஜேம்ஸ்பாண்டு வேலைகள் எவ்வளவோ செய்து முயன்றோம். முடியவில்லை. நன்கு ஐந்தாண்டுகளுக்கு பிறகு தஞ்சை ப்ரகாஷை சந்தித்தபோது அவர் சொன்னார் நான் தான் அந்த . ஜே.மங்கயர்கரசி!) அல்லது ராஜகோபால் அண்ணன் அறிமுகப்படுத்தியிருந்த Anthropomorphism என்ற புது விசயம் குறித்தோ, அருளில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் “ உயிருள்ள வரை உஷா” ஏன் அப்படி பிய்த்துக்கொண்டு ஓட வேண்டும் என்பது பற்றியோ , இறை நம்பிக்கை பற்றியோ, ஆப்பரேஷன் பூமாலை பற்றியோ, ராஜகோபால் அண்ணிடம் பார்த்திருந்த FREEDOM FROM THE KNOWN புத்தகம் பற்றியோ, பாரதிராஜாவின் புது கதாநாயகி ரேவதி பற்றியோ பேச்சு தொடங்கும். அன்றைய பேச்சை தொடங்கி வைக்கும் புள்ளி தேவரகசியமாக இருந்தது. கண்களுக்கு தெரியாத ஒரு தேவதை அந்தரத்திலிருந்து திடுமென எங்களுக்கான உரையாடல் களத்தை விரித்துச்செல்லும்.
வாழ்வை பற்றிய எங்கள் பார்வை உருவான காலம் அது. நாங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள், சந்திக்க வேண்டிய மனிதர்கள்,பார்க்கவேண்டிய திரைப்படங்கள் என்ற பட்டியலை தயாரித்தபடியே நடப்போம். அந்த பட்டியல் தினமும் தினமும் வளர்ந்துக்கொண்டே இருந்தது. அப்படியொரு பட்டியலை தயாரிப்பது எங்களுக்கு மிகவும் விருப்பமான விசயமாக இருந்தது. என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் படித்திருப் போம்,பார்த்திருப்போம் இல்லையா? என்பான் கோபால் நான் தலையசைப்பேன். மெல்ல ரயில் பாதையை தாண்டி பழைய பிரிடிஷ்காலத்து மேம்பாலம் (இப்போது அது இல்லை) வழியாக இறங்கத்தொடங்குவோம். இப்போதும் இந்த இடத்தைக்கடக்கும்பொழுதெல்லாம் கோபால் “லோலிடா” (LOLITA) பற்றி பேசிகொண்டு அந்த இறக்கத்தில் நடந்து வந்தது நிழலாடுகிறது. “லோலிடா” பற்றி எங்களுக்குள் கருத்து பேதம் இருந்தது. “அம்மா வந்தாள்” படித்தபோது இருந்த குழப்பமான மனநிலை “லோலிடா” படித்தபோதும் எனக்கு இருந்தது. கோபாலுக்கு “லோலிடா” மிகவும் பிடித்திருந்தது. எங்களின் முரண்களிலிருந்து நாங்கள் எங்களுக்கான பார்வையை உருவாக்க முயன்றுக்கொண்டிருந்தோம். கோபாலோ அல்லது நானோ சமீபத்தில் படித்த புத்தகமோ, தூர்தர்ஷ்னில் பார்த்திருந்த பிராந்திய மொழி திரைப்படமோ அல்லது எங்களை பாதித்த மனிதர்கலோ எங்களின் பார்வையில் ஊடுபாவிக்கொண்டிருந்தனர். அவர்கள் வழியே எங்கள் வாழ்க்கை தன்னை உருவாக்கிக் கொண்டிருந்தது.


மேம்பாலத்தின் வழியே கீழே இறங்கி , ராணிபாரடைஸ் பின்புறம் வழியே கலக்டர் அலுவலக சாலையில் நடப்போம். இருள் படந்திருக்கும். நல்ல அகலமான சாலை அது. பகல் முழுக்க பரபரப்பாக இருக்கும் அந்த சாலை சாயங்காலத்திற்கு பிறகு மிக அமைதியாகிவிடும். ஏதோ நாங்கள் பேசுவதை கேட்பதற்கென்றே அது மிக அமைதியாக காத்திருப்பது போல தோண்றும். எங்கள் கனவுகள் முழுவதும் தெரியும் அந்த சாலைக்கு. என்றாவது ஒரு நாள் எங்கள் கனவுகள் நிறைந்த நாளில் மீண்டும் நானும் கோபாலும் அந்த சாலையின் வழியே நடந்து வருவோம் என நான் நினைத்துக்கொள்வேன். அப்போது நாங்கள் குல்சாரி கதாநாயன் போல மிகவும் வயோதிகர்களாக இருக்கலாம். நினைவுகளில் மூழ்கி பேசாமல் நடந்து செல்வோம். அந்த சாலை மட்டுமல்ல எங்களோடு பேசிய எத்தனையோ இடங்கள் தஞ்சாவூரில் அங்குமிங்குமாய் இருந்தன. பெரிய கோயிலில் இருந்த “ நெல்லிக்கனி“ மரம். எங்களின் போதி மரம். “மோகமுள்” யமுனாவையும் பாபுவையும் எங்களைவிட அந்த மரத்திற்கு அதிகம் தெரிந்திருக்கும். அசோகமித்திரனின் “இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும் “ மாதிரி ஒரே ஒரு சிறுகதையை எழுதி விட்டால் போதும் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடும் என நான் ஒரு முறை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சொன்னபோது அந்த மரம் சிலிர்த்துக்கொண்டு காற்றில் அசைந்த்து. அல்லது நக்கலாய் சிரித்துகொண்டதோ என்னவோ!!புது ஆற்றங்கரை ஓரமாய் நடந்து நந்தகோபாலின் வீடு வந்து சேரும் பொழுது நிலவு காயும். மீண்டும் ஒரு சாயங்காலம் கழிந்திருக்கும். அவர்கள் வீட்டு அரசமரத்தடியில் நின்றபடி பேசுவோம். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஏதேதோ நினைவுகளுடன் பட்டுநூல்கார வீதிகளை கடந்து வீடு திரும்புவேன். மெல்ல பின் நகரும் அமைதியான இரவு.

நேற்று சாயங்காலம் நடந்தது போல இருக்கிறது. ஆயிற்று 20-22 வருடம். நந்தகோபாலுக்கு பாம்பேயில்(அப்போது பாம்பே) வேலைகிடைத்தது. நான் எங்கெங்கோ சுற்றினேன். எப்போதாவது நினைவில் வந்து போனது அந்த சாயங்காலங்கள். வெகு நாட்களுக்கு பின் கோபாலை ஒரு வருடத்திற்கு முன் சந்திதேன் ஒரு திருமணநிகழ்வோன்றில். மிகவும் களைத்திருந்தான்.என்னைப்போலவே. அவன் குழந்தைளை அறிமுகப்படுத்தினான். பெண்குழந்தையின் பெயர் யமுனா. நான் கோபாலை பார்த்து சிரித்தேன். புத்தகங்கள் படிக்கிறாயா? என்றேன். சிரித்தான். நானும் சிரித்தேன். வாழ்வின் நெருக்கடியில் சிக்கி தொலைந்து போனவர்களின் சிரிப்பு. வீட்டிற்கு அழைத்தேன் இன்றே திரும்பவேண்டும் இன்னோரு சமயம் வருகிறேன் என்றான். அந்த இன்னொரு சமயம் இதுவரை வரவில்லை.பின் தொடர நான் அழைப்பதுஅழைப்பை ஏற்றமைக்கு நன்றி லேகா,றமேஷ்15 comments:

CS. Mohan Kumar said...

ஒரு தேர்ந்த இலக்கிய கட்டுரை போல் எழுதியிருக்கீறீர்கள் நண்பா.. அருமை. எனக்கு இதே போல் மது என்ற நண்பனுடன் எங்கள் ஊரில் மாலை நேரம் ஆற்றங்கரையில் நடந்தது நினைவுக்கு வந்தது.. அவனும் இப்போது சென்னையில் இருக்க பார்க்க மாட்டாமல் நாட்கள் ஓடுகிறது. வாழ்க்கை எப்படியெல்லாம் மாறி போய் விடுகிறது!!

Paleo God said...

//வெகு நாட்களுக்கு பின் கோபாலை ஒரு வருடத்திற்கு முன் சந்திதேன் ஒரு திருமணநிகழ்வோன்றில். மிகவும் களைத்திருந்தான்.என்னைப்போலவே. அவன் குழந்தைளை அறிமுகப்படுத்தினான். பெண்குழந்தையின் பெயர் யமுனா. நான் கோபாலை பார்த்து சிரித்தேன். புத்தகங்கள் படிக்கிறாயா? என்றேன். சிரித்தான். நானும் சிரித்தேன். வாழ்வின் நெருக்கடியில் சிக்கி தொலைந்து போனவர்களின் சிரிப்பு. வீட்டிற்கு அழைத்தேன் இன்றே திரும்பவேண்டும் இன்னோரு சமயம் வருகிறேன் என்றான். அந்த இன்னொரு சமயம் இதுவரை வரவில்லை.
//

அருமைங்க ஜெ. நெகிழ்ச்சி!

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

நன்றி மோகன்குமார்
நன்றி ஷங்கர்

Ramesh said...

மிக அருமையாக எழுதியிருக்கீங்க...என்னையும் அழைத்திருக்கீங்க நன்றி.. விரைவில் தொடருவேன்...

கமலேஷ் said...

மிகவும் அழகான பகிர்வு...எல்லோருக்குள்ளும் யாரோ ஒருவர் தொலைந்து போயிருக்கிறார்கள்..உங்களின் நண்பரை உங்களின் எழுத்துக்களே கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புகிறேன்...வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல தொடருங்கள்...

ஷர்புதீன் said...

உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

நன்றி றமேஷ். உங்கள் நினைவுகளில் உலவ ஆவலாக இருக்கிறேன்

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

நன்றி கமலேஷ்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

ஷர்புதீன் வருகைக்கு நன்றி.
தங்கள் பதிவைப்பார்தேன். வலைப்பூவில் அசத்துங்கள்.வாழ்த்துக்கள்.

லேகா said...

ஜெயமார்த்தாண்டன் ,

உங்களது நினைவுகளை வெகு நேர்த்தியாய் பகிர்ந்துள்ளீர்கள் :-)

பதின் வயது நினைவுகளை மீட்டெடுக்க அழைத்ததிற்கு நன்றி.விரைவில் பதிவிடுகின்றேன்.

Seekay said...

//அசோகமித்திரனின் “இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும் “ மாதிரி ஒரே ஒரு சிறுகதையை எழுதி விட்டால் போதும் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடும் என நான் ஒரு முறை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சொன்னபோது அந்த மரம் சிலிர்த்துக்கொண்டு காற்றில் அசைந்த்து. அல்லது நக்கலாய் சிரித்துகொண்டதோ என்னவோ!! //

நிச்சயம் மரம் சிலிர்த்துத்தான் போயிருக்கும்

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

நன்றி லேகா. உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன்.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

நன்றி கருப்பையன்.

அமுதா கிருஷ்ணா said...

அருமையாய் இருக்கு ..தொலைந்து போனது போன்ற ஒரு உணர்வு..பதின்மத்தை தொலைத்து விட்ட ஒரு சகோதரி...

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

//அருமையாய் இருக்கு ..தொலைந்து போனது போன்ற ஒரு உணர்வு..பதின்மத்தை தொலைத்து விட்ட ஒரு சகோதரி...//அன்பு சகோதரி,

கூடுசாலை வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கம் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Post a Comment

நண்பர்கள்

Powered by Blogger.